வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் ரூ.68.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் ரூ.68.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
By: TeamParivu Posted On: June 28, 2023 View: 72

சென்னை: வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் ரூ.68.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் 68 கோடியே 82 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள், முதன்மைப் பதப்படுத்தும் மையங்கள், சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு வசதியுடன் கூடிய துணை ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கான கல்விசார் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார்.
வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை – உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்து, வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வட்டார அளவிலான சேமிப்பு கிடங்குகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களானது, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல் மற்றும் விதைச் சான்று ஆகிய அனைத்து துறை அலுவலகங்களையும் உள்ளடக்கிய பொதுவான மையமாக செயல்படுகிறது. இந்த மையங்கள் வாயிலாக தொழில்நுட்ப ஆலோசனைகள், இடுபொருள்கள் விநியோகம், ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களின் செயலாக்கம் ஆகிய அனைத்து செயல்பாடுகளும் ஒரே குடையின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
இதுவரை, 193 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டம் – தாராபுரம், தர்மபுரி மாவட்டம்- அரூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் – சிவகங்கை ஆகிய இடங்களில் 6 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்;
மதுரை மாவட்டம், விநாயகபுரத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் நீர் மேலாண்மை பயிற்சிக்கூடம் மற்றும் அலுவலகக் கட்டடம்;
கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் வட்டாரம், புதுப்பேட்டை மற்றும் திருமுட்டம் வட்டாரம், காவனூர் ஆகிய இடங்களில் 76 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள்;
வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை சார்பில், விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை தரம் பிரித்து, சேமித்து, பதப்படுத்தி வைத்து, நல்ல விலைக்கு விற்பனை செய்திட ஏதுவாக ஈரோடு மாவட்டம் – ஆலுக்குளி, திருவள்ளூர் மாவட்டம் – திருவள்ளூர், ஆரணி, செங்கல்பட்டு மாவட்டம் – மதுராந்தகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் – சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் 25 கோடியே 62 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதன்மைப் பதப்படுத்தும் மையங்கள்;
விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் விளைப்பொருட்களை சேமித்து வைத்திடவும், அவ்விளைப்பொருட்களுக்கு பொருளீட்டு கடன் பெறவும் ஏதுவாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிப்பு கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு நீர்பாசன மேலாண்மை நவீனமயமாக்கும் திட்ட நிதியிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு;
தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய நிதியிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் – அரியூர், விழுப்புரம் மாவட்டம் – சிறுவந்தாடு, தஞ்சாவூர் மாவட்டம் – தென்னூர், திருவாரூர் மாவட்டம் – பெருந்தரகுடி ஆகிய இடங்களில் 3 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு வசதியுடன் கூடிய துணை ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள்;
நபார்டு – கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து 5 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் திருவாரூர் மாவட்டம் – கோட்டூர் வட்டம், மேலநத்தம் கிராமத்தில் 1000 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு, நீடாமங்கலம் வட்டம், காளாஞ்சிமேடு கிராமத்தில் 2000 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு, வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 500 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு;
கோயம்புத்தூர் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் திசு வளர்ப்பு ஆய்வுக்கூடம், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4 கோடியே 21 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கல்விக்கான கட்டமைப்பு வசதிகள் 6 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி வசதி மையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமுளூரில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4 கோடியே 21 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கல்விக்கான கட்டமைப்பு வசதிகள், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் 4 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் பயிற்சி மையம் மற்றும் விருந்தினர் மாளிகை; என மொத்தம் 68 கோடியே 82 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறைச் செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை – உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் டாக்டர் ஆர். நந்தகோபால், இ.ஆ.ப., வேளாண்மை ஆணையர் டாக்டர் எல். சுப்பிரமணியன், இ.ஆ.ப, வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை இயக்குநர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
.

Tags:
# முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..