நாட்டில் குழப்பம் விளைவிக்க முயற்சி; பாட்னா கூட்டத்தால் பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாட்டில் குழப்பம் விளைவிக்க முயற்சி; பாட்னா கூட்டத்தால் பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
By: No Source Posted On: June 29, 2023 View: 37

சென்னை: பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தால் பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கும்மிடிப்பூண்டி வேணு அவர்களின் இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர்; நல்லதைக் கூட ஜாக்கிரதையாக, பொறுமையாக, நிதானமாக செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளோம். நாட்டின் பிரதமராக உள்ள நரேந்திர மோடிக்கு வரலாறு தெரியவில்லை. திமுகவுக்கு வாக்களித்தால் கலைஞரின் குடும்பம்தான் பயனடையும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். கலைஞரின் குடும்பம் என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும்தான்.
தமிழ்நாடும், தமிழ் மக்களும்தான் கலைஞரின் குடும்பம். திமுகவினர் குடும்பம் குடும்பமாக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றிருக்கிறோம். ஒட்டுமொத்த திமுகவினரையும் தனது மகனாக நினைத்தவர் கலைஞர். திமுக என்பது குடும்பம் தான்; கட்சியினரை தம்பி என அழைத்தவர் அண்ணா. பிரதமர் மோடி வரலாற்றை தெரிந்துகொண்டு பேச வேண்டும். பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தால் பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளார். பாஜகவுக்கு எதிரான கட்சிகளை திரட்டி கூட்டணி அமைப்பதற்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டில் கூட்டம் நடந்தது.
அச்சத்தின் காரணமாகவே பிரதமர் மோடி இறங்கி வந்து பேசுகிறார். பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் 50 நாட்களுக்கும் மேலாக வன்முறை நீடிக்கிறது. ஆயிரக்கணக்கானோர் மணிப்பூரைவிட்டு வெளியேறி உள்ளனர். மணிப்பூர் பக்கமே இதுவரை பிரதமர் மோடி செல்லவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட 50 நாட்களுக்கு பிறகே அமித் ஷா நடத்தியுள்ளார்; இதுவே பாஜக ஆட்சியின் லட்சணம். மணிப்பூரை கண்டுகொள்ளாத பிரதமர் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பேசுகிறார். மதப்பிரச்சனையை அதிகமாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என நினைக்கிறார் பிரதமர் மோடி.
நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மத்தியில் நமக்காக பாடுபடும் மதச்சார்பற்ற, சிறப்பான ஆட்சியை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் இவ்வாறு கூறினார்

Tags:
#முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..