தென்னை விவசாயிகளின் நலனை காக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தென்னை விவசாயிகளின் நலனை காக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
By: TeamParivu Posted On: July 10, 2023 View: 70

சென்னை: தென்னை விவசாயிகளின் நலனை காக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; தமிழ்நாட்டில் கொப்பரைக் கொள்முதல் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினை குறித்து பிரதமரின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஒன்றிய அரசின் ஆதரவு விலை திட்டத்தின்கீழ், கொப்பரை கொள்முதல் செய்யும் இலக்கை அதிகரிக்க மாநிலம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளிடமிருந்து எண்ணற்ற கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் ஆதரவு விலை திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும், சந்தை விலையை நிலைப்படுத்தவும், உளுந்து, பாசிப்பயறு மற்றும் கொப்பரை போன்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும், தமிழ்நாட்டில், இந்தக் கொள்முதல் ஒன்றிய அரசின் அமைப்பான, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் லிமிடெட் மூலம் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டில் 4.46 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 53,518 இலட்சம் எண்ணெய் வித்துக்களும், ஒரு ஹெக்டேருக்கு 11,692 எண்ணெய் வித்துக்களும் உற்பத்தி செய்யப்பட்டு, பரப்பளவிலும், உற்பத்தியிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும், தென்னை உற்பத்தியில் தேசிய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டாலும், சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாக இருந்ததால், தொடக்க காலங்களில் கொள்முதல் குறைவாகவே இருந்தது என்றும், 2022 முதல், தேங்காய் உற்பத்தி அதிகரித்ததால் இந்த நிலை முழுவதுமாக மாறியது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இதன் விளைவாக, தேங்காய் சந்தை விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500-லிருந்து ரூ.1,500-ஆகவும், கொப்பரையின் சந்தை விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,500-லிருந்து ரூ.8,100-ஆகக் குறைந்ததனால், 2022 மற்றும் நடப்பாண்டில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் கொப்பரை கொள்முதல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவு விலை திட்டத்தின்கீழ், நடப்பாண்டில், 2023 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்திற்குள், 56,000 மெட்ரிக் டன் என்ற இலக்கில் 47,513 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர், விவசாயிகளிடம் இன்னும் கொப்பரை கையிருப்பு அதிகமாக இருப்பதாலும், சந்தை விலை தொடர்ந்து குறைவாக இருப்பதாலும், ஆதரவு விலைத் திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கொப்பரையின் அளவை அதிகரிக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, நடப்பு பருவத்தில் செப்டம்பர் 2023 வரை கொப்பரை கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை, தற்போதுள்ள 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தவும், தமிழகத்திற்கான கொள்முதல் இலக்கை 56,000 மெட்ரிக் டன்னில் இருந்து 90,000 மெட்ரிக் டன்னாக உயர்த்தவும், தொடர்புடைய அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது கொப்பரையின் சந்தை விலையை நிலைப்படுத்த உதவுவதோடு, மாநிலத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கும் நல்ல பயனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..