விபத்துகளை குறைக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சென்னையில் சாலை பாதுகாப்பு ரோந்து திட்டம் அறிமுகம்: கமிஷனர் ரத்தோர் தொடங்கி வைத்தார்

விபத்துகளை குறைக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சென்னையில் சாலை பாதுகாப்பு ரோந்து திட்டம் அறிமுகம்: கமிஷனர் ரத்தோர் தொடங்கி வைத்தார்
By: TeamParivu Posted On: August 03, 2023 View: 49


சென்னை, ஆக. 3: சென்னையில் சாலை விபத்துகளை குறைப்பதில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக, சாலை பாதுகாப்பு ரோந்து திட்டத்தை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார். இதில், 4 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். சாலை விபத்துகளை குறைப்பதில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு முக்கிய அம்சமாகும். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த உண்மையை உணர்ந்து, விஎம்எஸ் போர்டுகளை காட்சிப்படுத்துதல், பல்வேறு சந்திப்புகளில் ஆடியோ செய்திகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் போக்குவரத்து கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்த சாலை பாதுகாப்பு ரோந்து கேடட்களாக அவர்களை சேர்ப்பது போன்ற பல்வேறு வழிகளில் சாலை பயனாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து வார்டன் அமைப்பு (டிபிடிடபிள்யூஓ) உலகிலேயே மிகப்பெரிய தன்னார்வ அமைப்புகளில் ஒன்று. இதன் தலைமை துறையான சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து ‘கேட்ச் தெம் யங்’ என்ற கருத்தின் கீழ் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 7ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் சாலை பாதுகாப்பு கேடட்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். சாலை பாதுகாப்பு கேடட்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் அதன் நடைமுறைகள் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து போக்குவரத்து காவலர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. விழா காலங்களில் போக்குவரத்து நிர்வாகத்தில் மூத்த ஆர்எஸ்பி கேடட்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு 18,000 மாணவர்களைக் கொண்ட 230 பள்ளிகள் ஆர்எஸ்பி.யில் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு இந்த பலம் 27,154 ஆர்எஸ்பி கேடட்களுடன் 354 பள்ளிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை ஆகும். ஆர்எஸ்பி.க்களுடன் ஒருங்கிணைக்க ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 8, 2023 அன்று பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு நாள் பயிற்சியில் 284 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் அவர்களுக்கு பயிற்சி மற்றும் சாலை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று சாலை பாதுகாப்பு ரோந்து (ஆர்எஸ்பி) 2023-24 திட்டத்தை புதுப்பேட்டை, ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி வைத்தார். கூடுதல் காவல்துறை ஆணையர் (போக்குவரத்து) கபில் குமார் சரத்கர் முன்னிலை வகித்தார். தலைமை போக்குவரத்து வார்டன் ஹரிஷ் எல் மேத்தா வரவேற்றார். துணை தலைமை போக்குவரத்துக் வார்டன் அசீம் அகமது ஆர்.எஸ்.பி. அறிக்கை அளித்தார். டி.டி. தலைமைப் போக்குவரத்து வார்டன் ஆர்.நாராயணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள பள்ளிகளை சேர்ந்த சுமார் 4,000 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விருதுகள்
ஆர்எஸ்பி கேடட்களின் சேர்க்கை மற்றும் பயிற்சியில் பங்களித்த 40 ஆர்எஸ்பி கேடட்கள், 20 பள்ளி முதல்வர்கள், 16 போக்குவரத்து காவலர்கள் மற்றும் 12 போக்குவரத்து காவலர்களுக்கு காவல் ஆணையர் ரத்தோர் விருதுகளை வழங்கினார். புதிய ஆர்எஸ்பி கேடட் கையேடு மற்றும் நினைவுப் பரிசையும் அறிமுகப்படுத்தினார்.

Tags:
#கமிஷனர் ரத்தோர் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..