பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பயனுள்ள படிப்புகள்: பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பயனுள்ள படிப்புகள்: பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள்
By: TeamParivu Posted On: August 04, 2023 View: 60

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் என்பது பொறியியல், உயிரியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் அறிவை மேம்படுத்தும் ஒரு துறையாகும். மேலும் மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த துறை உதவுகிறது. பயோமெடிக்கல் இன்ஜினியர்கள் தங்கள் உயிரியல் மற்றும் மருத்துவ அறிவை பொறியியல் கோட்பாடுகளுடன் இணைத்து மருத்துவம் மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும் சாதனங்கள் மற்றும் செயல்முறைகளை உருவாக்கி மக்களின் ஆரோக்கிய மேம்பட உதவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்கிறார்கள். மருத்துவம் மற்றும் உயிரியல் துறையுடன் இணைந்து பொறியியல் துறையின் தொழில்நுட்ப உதவியுடன் துல்லியமான செயல்பாடுகளை கொண்ட கருவிகளை வடிமைப்பதே பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களின் முக்கிய பணி ஆகும். இதன் மூலம் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களும், (செயற்கை இதயம், பேஸ்மேக்கர், செயற்கை வால்வுகள், செயற்கை எலும்புகள், கிரையோசர்ஜரி, அல்ட்ராசானிக்) கருவிகளும் மருத்துவர்கள் நோயை துல்லியமாக கண்டறிந்து குணமாக்குவதற்கு உதவுகின்றன.
தற்போதைய மருத்துவ உலகில் அதிநவீன கருவிகளான இசிஜி, இ.இ.ஜி, இ.எம்.ஜி, ரத்த மூலக்கூறுகளை கண்டறியும் சென்சார்கள், சிடி மற்றும் எம்.ஆர்.ஸ்கேனர்கள், மெக்கானிக்கல் ரெஸ்பிரேட்டர், கார்டியாக் பேஸ்மேக்கர் போன்ற கருவிகள் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் மூலம் வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வளவு பெரிய அறுவை சிகிச்சைகளையும் ரத்தம் இன்றி கத்தியின்றி செய்ய சாத்தியம் என்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் பயோமெடிக்கல் துறைதான். மருத்துவத்துறை சார்ந்து, பொறியியல் படிப்புகளை விரும்பும் மாணவர்கள் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். இந்த படிப்புகள் மூலமாக மருத்துவத்துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மருந்து, சிகிச்சை முறை போன்றவற்றை உருவாக்குவது தொடர்பாக கற்றுக்கொள்ள முடியும். படித்து முடித்த பிறகு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து புதிய மருத்துவக் கருவிகள், வைரஸ், பாக்டீரியாவுக்கு எதிரான தடுப்பு மருந்து ஆராய்ச்சி போன்ற வேலைகளில் ஈடுபட முடியும். 4 ஆண்டு கால பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பு பொறியியல் கல்லூரிகளில் பி.டெக் படிப்பாக உள்ளது. பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். தனியார் பொறியியல் கல்லூரிகளில் இப்படிப்பில் சேருவதாக இருந்தால் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை பெறலாம். நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேருவதாக இருப்பின் அந்தந்த பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். ஐ.ஐ.டி போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஜெ.இ.இ நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை பெற்று பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகளை படிக்கலாம். இந்த படிப்பு பயோமெடிக்கல் டெக்னீசியன், பயோமெடிக்கல் இன்ஜினியர் மற்றும் பயோகெமிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. பயோமெடிக்கல் இன்ஜினியர்கள் தொழில்நுட்பத்துடன் மருத்துவத்தின் தொடர்புகளை ஆய்வு செய்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உதவியுடன் நோயைத் தடுப்பார்கள். வலுவான தொழில்நுட்பம், உயிர் தகவல்தொடர்பு அமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்த படிப்பு பெரிதும் உதவுகிறது. செயற்கை உறுப்புகள், கருவிகள், மருத்துவ தகவல் அமைப்புகள் மற்றும் சுகாதார மேலாண்மை மற்றும் பராமரிப்பு விநியோக அமைப்புகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்க மற்றும் மதிப்பீடு செய்தல் போன்றவற்றில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் ஆராய்ச்சி சார்ந்து பணிசெய்கிறார்கள்.
பயோமெடிக்கல் பொறியாளர்கள் பல்வேறு மருத்துவ நடைமுறைகளில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், காந்த அதிர்வு இமேஜிங் (MRI) போன்ற இமேஜிங் அமைப்புகள் மற்றும் இன்சுலின் ஊசிகளை தானியங்கிபடுத்தும் அல்லது உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் சாதனங்களை வடிவமைக்கிறார்கள். பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு இந்தியாவை விட வெளிநாட்டில் அதிக வேலைவாய்ப்பு உண்டு. ஹெல்த்கேர், ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியலாம். இதில் பல்வேறு நிலைகளில் பணிவாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் பயோமெடிக்கல் கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாக கிடையாது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டில் இந்த துறைக்கு வரவேற்பு அதிகம். ஜப்பான் மற்றும் சீனா போன்ற பிற நாடுகளும் இந்த துறையில் சிறந்து விளங்குவதோடு வேலைக்கேற்ற சம்பளம் வழங்குகின்றன. எல்.அண்டு டி, ஸ்ட்ரைக்கர் குளோபல் டெக்னாலஜி சென்டர், டெலோயிட் கன்சல்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், டெக்ஸாஸ் இன்ரூமென்ட், பிலிப்ஸ் ஹெல்த்கேர், ஆர்பெஸ் மெடிக்கல், சீமன்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றன.
இதுமட்டுமல்லாது, அரசு நிறுவனங்களுக்கும் பயோ இன்ஜினியர்கள் தேவைப்படுவதால் நல்ல சம்பளத்தில் வேலை பெறலாம். பயோ மெடிக்கல் சார்ந்த நிறுவனங்கள் நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏராளமாக உள்ளன. இளநிலை பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு முதுகலைப் பட்டத்தை மேலைநாடுகளில் படித்தால் வெளிநாடுகளில் மிகச் சிறப்பான வேலைவாய்ப்புகளை பெறலாம். இந்தியாவில் முதுநிலை பட்டம் பெற்ற பிறகு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு செல்லலாம். இதே துறையில் ஆராய்ச்சி சார்ந்து முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றலாம். கொரோனா பரவலின்போது சுவாசக் கருவிகளை தயாரிப்பதிலும், ஆக்சிஜன் சிலிண்டர்களை புதிய முறையில் உருவாக்குவதிலும், அவை இணக்கமான இருப்பதை உறுதி செய்வதிலும் இந்த துறை பெரும் பங்கு வகித்தது. கொரோனா தடுப்பூசிகளை எடுத்துச் செல்வதற்கான கொள்கலன்களை உருவாக்கியதும் உயிரி மருத்துவத் துறை வல்லுனர்களே. எனவே கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இந்த துறை சார்ந்த தேவை இன்னும் அதிகரித்துள்ளதால் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.

Tags:
#பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..