சென்னை டூ திருப்பதி இனி போவது செம ஈஸி ஏழுமலையான் பக்தர்களுக்கு வந்தே பாரத் வரப்பிரசாதம்

சென்னை டூ திருப்பதி இனி போவது செம ஈஸி ஏழுமலையான் பக்தர்களுக்கு வந்தே பாரத் வரப்பிரசாதம்
By: TeamParivu Posted On: September 28, 2023 View: 84

வந்தே பாரத் ரயில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயண நேரம் குறைவாக இருப்பதோடு பயணிப்பதற்கு வசதியாக இருப்பதால் ரயில் பயணிகளிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது. சென்னையில் இருந்து ரேணிகுண்டா வழியாக விஜயவாடா செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய திருப்பதி செல்லும் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருப்பதிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பேருந்து, ரயில்கள், விமானம் மூலமாகவும் வசதிக்கு ஏற்ப திருப்பதிக்கு வந்து திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். தற்போது ஏழுமலையான் பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது வந்தே பாரத் ரயில்.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது.

இந்நிலையில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களான வந்தே பாரத் ரயில் சேவைகளை நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே அரசு தொடர்ந்து தொடங்கி வைத்து வருகிறது. அதன்படி தற்போது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை சென்னை சென்டரல்- மைசூரு மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை முதலில் தொடங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் சென்னைக்கு இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் வழங்கப்பட்டு, அவை பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்டது. சென்னை-விஜயவாடா வந்தே பாரத் மற்றும் நெல்லை- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணிகளிடையே பெருமளவில் வரவேற்பினை பெற்றுள்ளது.

சென்னை மற்றும் விஜயவாடா இடையே இயக்கப்படும் இந்த புதிய வந்தே பாரத் ரயில், பயண நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 6.40 மணி நேரமாக குறைத்துள்ளது. மேலும் நெல்லை-சென்னை இடையேயான வந்தே பாரத் பயண நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்கு குறைத்துள்ளது. விஜயவாடா மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா வழியாக இயக்கப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குகிறது. உலகப் புகழ் பெற்ற ஏழுமலையான் அருள்பாலிக்கும் திருமலை திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர் அந்த வகையில் தமிழகத்தில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு பயணம் செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு வேலூர் மற்றும் சென்னை வழியாக பயணிக்கலாம்.

சென்னையில் இருந்து தற்போது திருப்பதிக்கு இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்களான சப்தகிரி, கருடாத்திரி போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரேணிகுண்டாவிற்கு செல்ல இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. மேலும் பேருந்து பயணம் மேற்கொண்டாலும் சென்னையில் இருந்து சராசரியாக 3:30 மணி நேரம் ஆகிறது. இந்த நிலையில் திருப்பதி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும், அதிவேகத்தில் செல்லும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னைக்கும் திருப்பதியில் இருந்து 9 கி. மீ தொலைவில் உள்ள ரேணிகுண்டாவுக்கும் இடையிலான சராசரியாக 136.6 கிலோ மீட்டர் தொலைவை ஒரு மணி நேரம் 35 நிமிடங்களில் கடந்து விடுகிறது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு விரைவான ரயில் சேவையை வழங்குவதே விஜயவாடா-சென்னை வந்தே பாரத் ரயிலின் முக்கிய நோக்கம். இந்த ரயில் சென்னையிலிருந்து காலை ஐந்து முப்பது மணிக்கு புறப்பட்டு மதியம் 12:10 மணிக்கு விஜயவாடா சென்றடையும். இடையில் காலை 7:10 மணிக்கு ரேணிகுண்டாவிலும், காலை 8:40 மணிக்கு நெல்லூரிலும், காலை 10:10 மணிக்கு ஓங்கோல், காலை 11:22 மணிக்கு தெனாலி ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும். மறுமார்கத்தில் விஜயவாடாவில் இருந்து மாலை 3:20 மணிக்கு புறப்பட்டு மாலை 3:49 மணிக்கு தெனாலி, மாலை 5:03 மணிக்கு ஓங்கோல்,இரவு 8:05 மணிக்கு ரேணிகுண்டாவில் நின்று புறப்பட்டு, இரவு 10 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும். சென்னைவாசிகள் காலையில் வீட்டில் இருந்து கிளம்பினால் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு ஒரே நாளில் வீடு திரும்பிவிடலாம்.

தமிழ்நாட்டில் இருந்தும் திருப்பதிக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனத்திற்காக செல்கின்றனர். எனவே, சென்னை ரேணிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் இந்த வந்தே பாரத் ரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் காலையில் புறப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தால் 8 மணிக்குள் திருப்பதி சென்று விடலாம். கீழ் திருப்பதியில் தரிசனம் முடித்து விட்டு பிற்பகலில் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு இரவு 10 மணிக்குள் வீடு திரும்பி விடலாம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்தே பாரத் ரயிலில் முன் பதிவு செய்து வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு நேரடியாக சென்னை வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அந்த ரயில் சேவையும் விரைவில் தொடங்கப்பட்டால் ஏழுமலையான் பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பது நிச்சயம்.


Tags:
##THIRUPATHI# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..