திருப்பதி பிரம்மோற்சவம் ஏழுமலையானை தரிசித்த 6 லட்சம் பக்தர்கள் உண்டியல் காணிக்கை எத்தனை கோடி?

திருப்பதி பிரம்மோற்சவம்  ஏழுமலையானை தரிசித்த 6 லட்சம் பக்தர்கள்  உண்டியல் காணிக்கை எத்தனை கோடி?
By: TeamParivu Posted On: September 28, 2023 View: 50

திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. 6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உண்டியலில் ரூ.25.22 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிக்கணக்கானோர் தினசரியும் திருப்பதி வந்து செல்கின்றனர். பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து சில நிமிட நேரம் தரிசனம் செய்தாலும் மன திருப்தியுடன் செல்கின்றனர் பக்தர்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்கிழமையுடன் நிறைவுபெற்றது. 25ம்தேதி வரை 8 நாட்களில் பிரம்மோற்சவத்தின்போது 5.47 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

கருட சேவை உற்சவத்தின்போது 72,650 பேர் மூலவரை தரிசனம் செய்தனர். நான்கு மாட வீதியில் கருட வாகன சேவையில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்காக 8 லட்சம் லட்டுகள் இருப்பு வைத்து தொடர்ந்து 30.22 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க 6,000 குழந்தைகளுக்கு பெற்றோரின் விவரங்களுடன் கூடிய டேக் கட்டப்பட்டது. வேண்டுதலன்படி தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்காக 1,150 சவரத்தொழிலாளர்கள், 11 கல்யாண கட்டா மையத்தின் மூலம் 2.07 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

16.28 லட்சம் பக்தர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. கருட சேவை நாளில் மட்டும் 4.81 லட்சம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. 40 மருத்துவர்கள், 35 துணை மருத்துவர்கள் மற்றும் 13 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு 31 ஆயிரம் பக்தர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டது. சுவாமி வீதி உலாவின்போது 152 அணிகளைச் சேர்ந்த 3,710 கலைஞர்களுடன் 12 மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. 45 டன் மலர்களுடன் மலர் கண்காட்சி, கோயில், திருமலையில் உள்ள அனைத்து சந்திப்புகள், ஓய்வு இல்லங்கள் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதற்காக 3 லட்சம் பூக்கள், 75,000 பருவகால பூக்கள் பயன்படுத்தப்பட்டன. நாடு முழுவதில் இருந்து 3,342 ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு சேவை அளித்தனர் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கை செலுத்துகின்றனர். அம்பானி போன்றவர்கள் தங்கம் வைரம் என உண்டியலில் செலுத்துகின்றனர். அதே நேரத்தில் ஏழை நடுத்தர மக்கள் தங்களால் இயன்ற பணத்தை காணிக்கை செலுத்து கின்றனர். தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கையாக கிடைத்த தலைமுடியை ஏலம் விடுவதன் மூலம் பல கோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது. பிரம்மோற்சவ நாட்களில் ஏழுமலையானுக்கு உண்டியலில் ரூ.25.22 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

1950ஆம் ஆண்டு வரை ஏழுமலையானுக்கு கிடைத்த உண்டியல் வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாகவே இருந்தது, ஆனால் 1958ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரு லட்சத்தை தாண்டியது. 1990 ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உண்டியல் வருவாய் வரத் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 23 தேதி ஒரே நாளில் ரூ.3.6 கோடியாகவும், 2011 ஆண்டு நவம்பர் 1 தேதி ரூ.3.8 கோடியாகவும், 2012 ஜனவரி 1ஆம் தேதி ரூ.4.23 கோடியாகவும் இருந்தது. 2012 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று அதிகபட்சமாக ரூ.5.73 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி ரூ.6 கோடியைத் தாண்டியது. 2015-16ஆம் உண்டியல் ஆண்டு வருமானம் ரூ..1,000 கோடியைத் தாண்டியது. 2019-20- நிதி ஆண்டில் ரூ.1,313 கோடியை எட்டியது.

கொரோனா பாதிப்பால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் கோவில் உண்டியல் வருமானம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்தது. 2020-21ல் நிதி ஆண்டில் ரூ.731 கோடியும், 2021-22ல் ரூ.933 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது. நடப்பு நிதியாண்டில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதிக்கு வருகிறது. கடந்த ஆண்டு அதிக பட்சமாக ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.139.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி ரூபாய் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தினர். ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கு மேல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது. தற்போது உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடி வரை உயர்ந்துள்ளது.

ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு 1000 கோடி கிடைப்பதால் தேவஸ்தானத்தின் நிலையான வைப்புத்தொகை மற்றும் தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு திருமலையில் தங்கும் வசதி, அன்னதானம் போன்ற வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதத்தில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், 8 நாட்களில் உண்டியலில் ரூ. 24.22 கோடி காணிக்கையாக செலுத்தினர். அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற உள்ளதால் உண்டியல் வருமானம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags:
##THIRUPATHY# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..