திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் செல்லும் பக்தர்களே தேவஸ்தானம் சொன்ன குட்நியூஸ்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி  சொர்க்கவாசல் செல்லும் பக்தர்களே  தேவஸ்தானம் சொன்ன குட்நியூஸ்
By: TeamParivu Posted On: October 09, 2023 View: 84

ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் டிசம்பர் 23 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு 7 லட்சம் டிக்கெட்கள் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஏகாதசி என்ற சொல்லுக்கு ஸ்ரீமந்நாராயணருக்குரிய பதினோராவது நாள் என்பது பொருள். இதை முப்பத்து முக்கோடி தேவர்களும் கடைபிடிப்பதால் முப்பத்து முக்கோடி ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மூன்று மிகவும் சிறப்புமிக்கவை. ஆனி மாத சயன ஏகாதசி, கார்த்திகை மாத கைசிக ஏகாதசி, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி. இந்த நாட்களில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு. இதிலும் வைகுண்டஏகாதசியே மிக விசேஷம்.

ஞானேந்திரியங்கள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல்), கர்மேந்திரியங்கள் கை, கால், வாக்கு, பிறப்புறுப்பு, கழிவு உறுப்பு மனம் என்னும் பதினொன்றையும் ஒன்றிணைத்து கடவுளைக் குறித்து செய்யும் விரத வழிபாடு ஏகாதசி விரதம். தாயை விட சிறந்த தெய்வமில்லை காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை என்பது ஏகாதசியின் பெருமையை நமக்கு எடுத்துச் சொல்கிறது. அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தை இவ்விரதம் அளிக்கிறது.

ஓராண்டின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலனை வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் பெற முடியும் என்கிறது விஷ்ணு புராணம். சாதாரண ஏகாதசி நாட்களில் விரதமிருக்க இயலாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பது அவசியம். அன்று அதிகாலையில் கோவில்களில் நடக்கும் சொர்க்கவாசல் வைபவத்தை தரிசிக்க வேண்டும்.

திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்கு அடுத்தபடியாக வைகுண்ட ஏகாதசி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு 7 லட்சம் டிக்கெட்டுகள் வழங்க உள்ள நிலையில், அவை எப்போது வெளியிடப்படும் என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி கடந்த ஜனவரி 2 ஆம் தேதி நடந்தது. வரும் டிசம்பர் 23 ஆம் தேதி மார்கழியில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20,000 பக்தர்களும் இலவச தரிசனமும் மூலம் 50,000 பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுன்ட்டர்கள் அமைக்கப்படும் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய நாள் ஒன்றுக்கு 70,000 பக்தர்களுக்கு மேல் அனுமதி அளிக்கப்படும். இந்த 10 நாட்களுக்கும் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்று கூறினார். அதேபோல் ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சம் வழங்கப்படும். இலவச தரிசன டிக்கெட்டுகள் 5 லட்சம் மற்றும் ரூ300 சிறப்பு தரிசன டிக்கெட் 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன டோக்கன்களை பெற விரும்பும் பக்தர்கள் கவுண்டர்களுக்கு நேரடியாக வந்து தங்களுடைய ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து அவற்றைப் பெறலாம் என்றும் தர்மாரெட்டி கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து இந்த மாதம் 29 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28 ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு நடை திறக்கப்படும். அதைத் தொடர்ந்து கோயில் முழுவதும் சம்பிரதாய ரீதியில் சுத்தம் செய்யப்பட்டு, சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசி நாளில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பூலோக வைகுண்டம் போல அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:
##THIRUPATHI# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..