“ஸ்டாலின் தாத்தா கிஸ் கொடுத்தார் உதய் அங்கிள் வீடு கொடுத்தார்”மகிழ்ச்சி மழையில் ஏழைச் சிறுமி

“ஸ்டாலின் தாத்தா கிஸ் கொடுத்தார் உதய் அங்கிள் வீடு கொடுத்தார்”மகிழ்ச்சி மழையில் ஏழைச் சிறுமி
By: TeamParivu Posted On: October 09, 2023 View: 50

சென்னை: தன் சிகிச்சை உதவிக் கேட்டு வந்த சிறுமிக்கு வீடு கொடுத்து, சிகிச்சைக்கான ஏற்பாட்டையும் செய்து தந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நிரந்தரமாக ஒரு வீடு கிடைத்திருப்பதால் அந்தச் சிறுமியின் குடும்பம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது.

"என் பெயர் ஹர்ஷினி. நான் பெண்டிங்க் மேல்நிலைப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கிறேன். எங்க அப்பா ஆட்டோ ஓட்டும் வேலை செய்கிறார். அம்மா, வீடு பெருக்கும் வேலை செய்கிறாங்க. எனக்கு அடிபட்டால் ரத்தம் உறையாது. என்னை வீட்டுக்குக் கூப்பிட்டு என்ன படிக்கிறாய்? எந்த ஸ்கூல்? உங்கள் ஸ்கூல்ல சாப்பாடு எல்லாம் சரியா போடுகிறார்களா? சாப்பாடு சாப்பிட நல்லா இருக்கா? உனக்குச் சாப்பாடு பிடித்திருக்கா? என்று எல்லாம் விசயங்களையும் கேட்டார்.

நல்ல சாப்பாடு போடுறாங்க. ஸ்கூல் சாப்பாடு நல்லா இருக்கு என்று சொன்னேன். அப்புறமாக என் கையில் வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொடுத்தார். முதன்முதலா உதயநிதி அண்ணாவைப் போய் பார்த்தோம். அவர் என் ஹாஸ்பிட்டல் ரிப்போர்ட்டை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டிப் பார்த்துப் படித்தார். அப்புறம் கண்டிப்பா இந்த நோயைக் குணப்படுத்திவிடலாம்.

மருத்து எல்லாம் இருக்கிறது. கவலைப்பட வேண்டாம். பயப்பட வேண்டாம்' என்று சொன்னார். அவரைப் பார்த்துவிட்டு, நானும் அப்பா, அம்மா எல்லாம் வெளியே வந்துவிட்டோம். அதன் பிறகு 'எங்களை ஸ்டாலின் தாத்தா பார்க்க வேண்டும். வாங்க' திரும்பக் கூட்டிக் கொண்டுபோனார்கள்.

உள்ளே போய் பார்த்தோம். அவர் என்னைப் பக்கத்தில் உட்கார வைத்து கிஸ்' கொடுத்தார். அப்புறம் வீடு பற்றிப் பேசினார். உடனே உள்ளே இருந்தவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார். அதன்பிறகு வீட்டுப் பத்திரத்தை எடுத்து எங்கள் கையில் கொடுத்தார்என மழலை மணம் மாறாமல் பேசும் இந்தப் பிஞ்சு முகத்தில் அவ்வளவு சிரிப்பு.

"ஸ்டாலின் தாத்தாவுக்கும் மா.சு ஐயாவுக்கும் உதயநிதி அங்கிளுக்கும் என் அன்பார்ந்த நன்றிஎன்கிறார். இந்தச் சிறுமி பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சென்னை பெரிய மேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சகோதரர் ராஜீவ். அவருடைய மகள் ஹர்சினிக்கு ஹீமோபிலியா எனும் நோய்ப் பாதிப்பு இருந்த நிலையில், அவருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன்

மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில், சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது நம்முடைய கவனத்திற்கு வந்தபோது, சிறுமி ஹர்சினியை சமீபத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அப்போது, ஹர்சினியின் குடும்பத்தினர், வீடற்ற நிலையில் சாலையோரம் வசிப்பதாகவும், சுகாதாரமான வாழ்வுக்கு அரசு தரப்பில் ஒரு வீடு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைச் சம்பந்தப்பட்ட துறைக்கு நாம் அனுப்பி வைத்த நிலையில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சத்தியமூர்த்தி நகர் திட்டப்பகுதியில் ஹர்சினிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆணையை ஹர்சினியின் குடும்பத்தாரிடம் இன்று வழங்கி வாழ்த்தினோம். புதிய இல்லத்தில் தங்கை ஹர்சினியின் கனவுகள் மெய்ப்படட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி சென்னை தி. நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள முதல்வர் சென்ற போது அங்கே ஹர்சினி எனும் 3 ஆம் வகுப்பு மாணவி தாத்தா பை எனக் கூறினார். அந்த சிறுமியின் குரலைக் கேட்டதும் காரில் உட்கார்ந்த முதல்வர் மீண்டும் வெளியே வந்து அந்த சிறுமிக்கு கை அசைத்தார். இந்த நிலையில் சிறுமி எதற்காக வந்திருக்கிறார் என்ற விவரங்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்திருக்கிறார்.

அவருக்குச் சிகிச்சைக்காகவும் சாலையோரத்தில் வசிக்கும் தங்களுக்கு வீடு கேட்டும் மனு கொடுக்க வந்திருக்கிறார் என்பதை அறிந்த நிலையில் முதல்வர் அந்த சிறுமியையும் பெற்றோரையும் அழைத்தார். சிறுமிக்குச் சிகிச்சை ஏற்பாடு செய்த அவர், இப்போது வீட்டையும் தந்துள்ளார். இது குறித்து ஹர்சினியின் தந்தை, "எங்களுக்கு வீடு இல்லை. வீட்டுக்காக மனு கொடுக்கப் போய் இருந்தோம். நாங்கள் போவதற்குள் கூட்டம் முடிந்து முதல்வர் ஸ்டாலின் அய்யா கிளம்பிவிட்டார். எங்களால் சரியான நேரத்தில் மனுவைக் கொடுக்க முடியவில்லை. நான் அந்த சோகத்தில் நின்றிருந்தேன்.

அப்போது என் மகள் என்னைத் தூக்கி கழுத்தில் வைக்கச் சொன்னாள். நான் அவளைத் தூக்கி உட்கார வைத்தேன். அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில், 'ஸ்டாலின் தாத்தா பை.. பை..' என்று சத்தம் போட்டாள். அந்தச் சத்தம் முதல்வர் காதில் கேட்டுவிட்டது. காருக்குள் உட்கார்ந்த அவர், பின் இறங்கி வெளியே பார்த்துக் கையசைத்தார். அதில் என் மகளுக்கு ஒரே சந்தோஷம். அதன் பிறகு யார் அவர்கள்? எதற்காக வந்துள்ளார்கள்? என அதிகாரிகளை விட்டு விசாரிக்கச் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஐயா அழைத்தார். என்ன என்று விசாரித்தார். நான் என் மகளுக்கு அடிப்பட்டு ரத்தம் வெளியேறினால் நிற்கமாட்டேன் என்கிறது. அவளுக்குச் சிகிச்சை அளிக்க உதவ வேண்டும். வீடு இல்லாமல் ரோட்டு ஓரமாகத்தான் வாழ்கிறோம்' என்று சொன்னோம்.

அவரும் மருத்துவமனைக்குச் சொல்லி உடனே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அதற்குள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாரிடம் இருந்து போன் வந்தது. 'உங்களைப் பார்க்க வேண்டும். வாருங்கள்' என்றார் போனோம். என்னைச் சரிக்குச் சமமாக உட்காரவைத்துப் பேசினார். அதை என்னால் நம்பவே முடியவில்லை. மனதிற்குள் பெருமையாக இருந்தது.

அதன் பிறகு 'சிகிச்சைக்கு எந்த ஹாஸ்பிட்டல் வேண்டும்? ' என்று கேட்டார். நாங்கள் கேட்ட மருத்துவமனைக்கே அனுப்பிவைத்தார் அதை முடித்துவிட்டு வெளியே வந்தோம். மறுபடியும் முதல்வர் பார்க்க விரும்புகிறார் என உள்ளே அழைத்தார்கள். போனோம். அங்கே என் மகளை அரவணைத்துக்கொண்ட முதல்வர், 'பயப்படாத.. நாங்கள் இருக்கிறோம். நல்லா படி. சிகிச்சை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றார். அதன்பிறகு வீடு ஏற்பாடு செய்திருக்கிறேன் என்றார். அவர் சொன்னதைப் போலவே உதயநிதி அண்ணா அழைத்து வீட்டுப் பத்திரத்தைக் கொடுத்தார். என் வாழ்நாளில் இதை மறக்கவே முடியாது. எனக்கு இந்தநாள்தான் மறக்க முடியாத நாள். என்னென்னவோ நடந்துவிட்டது. நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது" என்கிறார்.

இதுவரை இருந்தது கொட்டா. எங்கள் அண்ணன் உதயநிதி கொடுத்தார் பட்டா!" என்று டைமிங் ஆன நேரத்தில் ரைமிங் ஆகப் பாடுகிறார் இந்தச் சிறுமி ஹர்சினி


Tags:
##DMK# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..