திடீர் பாசம் ஏன்? 10 வருசமா கண்ணை மூடிக்கிட்டு இருந்தீங்களா? எடப்பாடிக்கு ஸ்டாலின் சரமாரி கேள்வி!

திடீர் பாசம் ஏன்? 10 வருசமா கண்ணை மூடிக்கிட்டு இருந்தீங்களா? எடப்பாடிக்கு ஸ்டாலின் சரமாரி கேள்வி!
By: TeamParivu Posted On: October 10, 2023 View: 93

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக எடப்பாடிக்கு ஏன் இந்த திடீர் அக்கறை? உண்மையிலேயே அக்கறை இருந்தால் இதைச் செய்யுங்கள் பார்க்கலாம் என சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று கூடிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக பேரவை கூடி இருக்கிறது. இதில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் 25 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் 36 இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "பிப்ரவரி 14, 1998 அன்று கோவை குண்டு வெடிப்பில் பலர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 16 பேர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர், 20 பேர் பல்வேறு சமூக குற்ற வழக்குகளில் சிறையில் உள்ளனர். ஆக மொத்தம் 36 இஸ்லாமியர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் 15-11-2021 அன்று போடப்பட்ட அரசாணையால் இவர்கள் முன் விடுதலை ஆவது தடைப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் கூறுகின்றனர். இவர்களில் இரு சிலர் சிறையிலேயே உயிரிழந்துள்ளனர். 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 36 இஸ்லாமிய சிறைவாசிகளின் வயது மூப்பு உடல்நலக்குறைவு, குடும்ப வேண்டுகோள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமாறு வலியுறுத்துகிறேன் எனப் பேசினார்.

இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "அண்ணாவினுடைய 115 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு பரிசீலனை செய்யும் பொருட்டு 11/8/2023 அன்று முதல் கட்டமாக தகுதியுள்ள 49 ஆயுள் தண்டனை கைதிகளின் நேர்வுகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, தொடர்புடைய கோப்புகள் 24/8/2023 ஆளுநருக்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவர். ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மீதம் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியில் இருந்தபோது குடியுரிமை திருத்த சட்டத்தை கண்மூடி ஆதரித்த அதிமுக, இப்போது இஸ்லாமிய சிறைவாசிகள் மீது திடீர்பாசம் ஏன் என்று இங்குள்ள அனைவருக்கும் தெரியும். இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பான கோப்பு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு காத்திருக்கிறது. அந்தக் கோப்புக்கு அனுமதி தரக்கோரி ஆளுநரை சந்தித்து அதிமுக அழுத்தம் தருமா?" என்ஸ் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும், "எதிர்க்கட்சித் தலைவர் மிகுந்த அக்கறையோடு இந்த பிரச்சனை பற்றி பேசினார். இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து அதிமுக பேசும் பொழுது, நான் கேட்கின்ற ஒரே கேள்வி, நீங்கள் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்ததன் காரணம் என்ன? அதை நான் அறிய விரும்புகிறேன்.

தருமபுரியில் பேருந்தில் பயணித்த மாணவிகளை உயிரோடு பட்டப்பகலில் எரித்தவர்களை, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன் விடுதலை செய்த உங்களுடைய அதிமுக ஆட்சி, ஏன் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதே ஆணவத்தோடு அல்ல, அடக்கத்தோடு நான் கேட்கின்ற கேள்வி" எனத் தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக பேச அனுமதி தரவில்லை எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.


Tags:
##DMK# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..