டெல்லியில் காற்று சுத்திகரிப்பான் கருவி விற்பனை உயர்வு

டெல்லியில் காற்று சுத்திகரிப்பான் கருவி விற்பனை உயர்வு
By: TeamParivu Posted On: November 09, 2023 View: 53

புதுடெல்லி: 

தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மிகத் தீவிர காற்று மாசு நிலவி வருகிறது. இதனால், கண் எரிச்சல், இருமல், மூச்சுத்திணறல் என பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். டெல்லி மட்டுமல்லாது மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், காற்றுமாசுவிலிருந்து தப்பிப்பதற்காக காற்றை சுத்திகரிக்கும் இயந்திரங்களை மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இம்மாதத்தில் காற்று சுத்திகரிப்பான் (Air Purifier) விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இணையத்தில் காற்று சுத்திகரிப்பான் தொடர்பான தேடல் கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இம்மாதத்தில் 3 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் கூறுகையில், “எங்கள் தளத்தில் மக்கள் காற்றுசுத்திகரிப்பானை இம்மாதத்தில் அதிகம் தேடியுள்ளனர். சென்ற மாதத்துடன் ஒப்பிடுகையில் 3,200 சதவீதம் அதிக தடவை காற்று சுத்திகரிப்பான் தேடப்பட்டுள்ளது. தேவை அதிகரித்துள்ள நிலையில் அவற்றை அதிக அளவில் இருப்பு வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்த வாரங்களில் காற்று மாசு இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிற சூழலில் மக்கள் காற்று சுத்திகரிப்பானை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அதன் தயாரிப்பை அதிகரிக்கும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

நேற்று டெல்லியில் காற்று தரக் குறியீடு 421 ஆக இருந்தது. காற்றின் தரக் குறியீடு 0 - 50 வரையில் இருந்தால், காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம். அதுவே, அக்குறியீடு 400 - 500 ஆக இருந்தால், காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாக அர்த்தம். காற்றுமாசு தீவிரமாக உள்ள நிலையில் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..