எம்.ஜி.ஆர் பட பார்முலாவில் இருந்து வேறுபட்ட ’ஊருக்கு உழைப்பவன்’

எம்.ஜி.ஆர் பட பார்முலாவில் இருந்து வேறுபட்ட ’ஊருக்கு உழைப்பவன்’
By: TeamParivu Posted On: November 12, 2023 View: 61


மலையாள இயக்குநரான எம்.கிருஷ்ணன், சுமார் நூறு படங்களுக்கு மேல் இயக்கியவர். தமிழில் 18 படங்களை இயக்கியுள்ள இவர், தெலுங்கிலும் இயக்கி இருக்கிறார். எம்.ஜி.ஆர் நடிப்பில், ‘ரிக்‌ஷாகாரன்’, ‘அன்னமிட்ட கை’, ‘நான் ஏன் பிறந்தேன்’ உட்பட நான்கு படங்களை இயக்கி இருக்கிறார். அந்த நான்காவது படம், ‘ஊருக்கு உழைப்பவன்’! கன்னடத்தில் சிவலிங்கையா இயக்கி, ராஜ்குமார் இரண்டு வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற ‘பாலு பெளகித்து’ படத்தின் ரீமேக் இது.
எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களில் நடிக்க, நாயகிகளாக வாணிஸ்ரீயும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்தனர். எம்.என்.ராஜம், குமாரி பத்மினி, தேங்காய் சீனிவாசன், வீரப்பா, எம்.பி.ஷெட்டி உட்படபலர் நடித்த இந்தப் படத்தை வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்தது. உரையாடலை ஆர்.கே.சண்முகம் எழுதினார். பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

மனைவி, குழந்தை என மகிழ்ச்சியாக இருக்கும் நாயகன் செல்வத்தின் குழந்தை விபத்தில் சிக்குகிறது. அதைக் காப்பாற்றுகிறார் நாயகனைப் போலவே தோற்றம் கொண்ட ராஜா. விபத்து அதிர்ச்சியில் செல்வத்தின் மனைவிக்கு மனநலப் பாதிப்பு. அவருக்கு அதிர்ச்சியான தகவல்களைச் சொல்லக்கூடாது என்கிறார் டாக்டர். இதற்கிடையே ஏழைப் பெண் காஞ்சனாவைத் திருமணம் செய்கிறார் ராஜா. ஒரு கட்டத்தில் போலீஸ் அதிகாரியான செல்வம், ஒரு வழக்குக்காகக் கைதியாக நடிக்க வேண்டி இருக்கிறது. இதற்கிடையே ராஜா, தன்னை போலவே இருக்கும் செல்வம் வீட்டையும் தன் வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழல். அதை அவர் சரியாகச் சமாளித்தாரா? பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். வாலி,நா.காமராசன், முத்துலிங்கம் பாடல்கள் எழுதியிருந்தனர். வழக்கமாக எம்.ஜி.ஆருக்கு பாடும் டி.எம்.எஸ் இந்தப் படத்தில் ஆப்சென்ட்! இதில், ‘இட்ஸ் ஈசி டு ஃபூல் யூ’ என்ற பாடலின் ஆங்கில பாப் வரிகளைத் திரைப்பட ஆய்வாளர் ராண்டார் கை எழுதியிருந்தார். அதைஉஷா உதூப்பும் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடினர்.

கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம் குரலில், ‘இதுதான் முதல் ராத்திரி’, ஜேசுதாஸ் குரலில், ‘இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்’, ‘அழகெனும் ஓவியம் இங்கே’, ‘பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.ஆனால், ஜேசுதாஸின் தமிழ் உச்சரிப்பு அப்போது விமர்சிக்கப்பட்டது. ‘பிள்ளைத் தமிழை’, ‘பில்லைத் தமில்’ ஆக்கிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்தப் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்’ பாடலை எழுதியது முத்துலிங்கம். ஆனால், இசைத்தட்டில் புலமைப்பித்தன் எழுதியதாகத் தவறாக அச்சிட்டு விட்டார்கள். அதே போல ‘அழகெனும் ஓவியம் இங்கே’என்ற பாடலை எழுதியது புலமைப்பித்தன். ஆனால், அதில் முத்துலிங்கம் பெயரைப் போட்டுவிட்டார்கள். இப்போதுவரை அதே தவறுடன்தான் அந்தப் பாடல்கள் இணையங்களில் வலம் வருகின்றன.

வழக்கமான எம்.ஜி.ஆர் பட பார்முலாவில் இருந்துஇது கொஞ்சம் வேறுபட்ட படம். ஓபனிங், தத்துவப் பாடல் என எதுவும் இதில் கிடையாது.

எமர்ஜென்சி நேரத்தில் வந்த படம் இது. அப்போதுதிரைப்படங்களில் வன்முறை அதிகம் இருக்கக் கூடாது என்பதால் இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாகவே இருந்தது.

இதில் இந்தி நடிகரும், சண்டைக் கலைஞருமான எம்.பி.ஷெட்டி, மொட்டைத் தலையுடன் வில்லன்களில் ஒருவராக நடித்திருப்பார். இவர்் எம்.ஜி.ஆருடன் மோதும் சண்டைக் காட்சி உட்பட சில ஸ்டன்ட் காட்சிகளை மோசமாக வெட்டிவிட்டார்கள். இந்த எம்.பி.ஷெட்டி, தற்போது பிரபலமாக இருக்கும் இந்திப் பட இயக்குநர் ரோகித் ஷெட்டியின் தந்தை.

படத்தில் ஹெலிகாப்டர் சண்டைக் காட்சிகள் உண்டு. ஒரு ஹெலிகாப்டரில் இருந்து எம்.ஜி.ஆர், வில்லன்களைச் சுடும் காட்சியை மற்றொரு ஹெலிகாப்டரில் இருந்து அழகாகப் படம் பிடித்திருப்பார்கள்.

1976ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது இந்தப் படம்

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..