நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் மீண்டும் கிடைக்குமா? - ஆதங்கத்தில் ஆவடி மக்கள்

நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் மீண்டும் கிடைக்குமா? - ஆதங்கத்தில் ஆவடி மக்கள்
By: TeamParivu Posted On: November 14, 2023 View: 41

சென்னை: ஆவடியில் இருந்து இயக்கப்பட்டு முற்றிலுமாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் பழையபடி இயக்க வேண்டும் என ஆவடி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1970-ம் ஆண்டு உருவானது ஆவடி நகராட்சி. திருமுல்லைவாயில், பட்டாபிராம், முத்தா புதுப்பேட்டை, மிட்டினமல்லி, அண்ணனூர், கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. பாதுகாப்பு துறைக்கு சொந்தமான டேங்க் பேக்டரி, படைத்துறையின் உடை தொழிற்சாலை, விமானப் படை, போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மத்திய வாகன கிடங்கு, இன்ஜின் பேக்டரி, மத்திய உணவு கழகம், தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், ரயில்வே தொழிற்சாலை உள்ளிட்ட நிறுவனங்களைக் கொண்டு சிறப்புக்கு பஞ்சமில்லாமல் திகழ்ந்து வருகிறது. 2019-ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மொத்தம் 148 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆவடி புதிய மாநகராட்சி உதயமானது.
இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கிருக்கும் அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு மாநகர பேருந்த சேவை என்பது இன்றியமையாததாக இருந்து வருகிறது. இந்த பேருந்துகளில் கல்வி, பணி நிமித்தமாக ஆவடியில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். இந்த பயணத்துக்கு முக்கிய பங்களிக்கும் மாநகர பேருந்துகளில் நிறுத்தப்பட்ட சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் எனவும், சில பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக ஆவடியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கூறியதாவது: ஆவடியில் இருந்து சில வழித்தடங்களில் முற்றிலுமாக பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 121 இ என்னும் வழித்தட எண் கொண்ட பேருந்து சேவை எம்கேபி நகர் - பட்டாபிராம் இடையே முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் 153 வழித்தட எண் பேருந்துகள் பேரம்பாக்கத்துக்கு இயக்கப்பட்ட நிலையில், தற்போது பூந்தமல்லி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. 70 ஏ வழித்தட எண் கொண்ட பேருந்து ஆவடியில் இருந்து வண்டலூர் வரை இயக்கப்பட்ட நிலையில், தற்போது தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
இதுபோன்ற பேருந்துகளில் எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதுபோன்று சேவைகள் மாற்றியமைக்கப்பட்டும், முற்றிலும் நிறுத்தப்பட்டும் உள்ளன. இதுபோன்ற நடவடிக்கையைக் கைவிட்டுஆவடியை இணைக்கும் அனைத்து பேருந்துகளும் செயல்படும் பட்சத்தில் சொந்த வாகனங்களை விடுத்து, பேருந்தில் செல்ல மக்களும் முயற்சிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தனியார் நிறுவன ஊழியர் சவுந்தர்யா கூறியதாவது: அம்பத்தூர் ஓடி பகுதியில் வசிக்கும் நான் ஈக்காட்டுதாங்கலில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றுகிறேன்.இதனால் 70, 70ஏ போன்ற பேருந்துகளில் செல்வது வழக்கம். தாம்பரம் வரை செல்லும் 70 எண் கொண்ட பேருந்துக்கு எப்போதுமே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். எனவே, 70 ஏ என்ற கோயம்பேட்டுக்குச் செல்லும் பேருந்தில் சென்று வந்தேன். தற்போது இந்த பேருந்துக்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால் தொழிற்பேட்டை செல்லும் ஏதாவது ஒரு பேருந்தில் சென்று, அங்கிருந்து டி 70 வழித்தடபேருந்தில் ஈக்காட்டுத்தாங்கலுக்கு பயணிக்கிறேன். இந்த பேருந்தும் காலை, மாலை வேளைகளில் மிகுந்த கூட்டமாக இருக்கும்.
அதிலும், பெண்களுக்கு கட்டணமில்லாமல் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். ஏறக் கூட இடமிருக்காது. இதனால் பெரும்பாலான நேரத்தில் வேறு வழியின்றி, ஷேர் ஆட்டோவில் ரூ.30 கொடுத்துதொழிற்பேட்டை வரை செல்கிறேன். எனவே, அலுவலக நேரத்தில் பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும். அதேபோல், இரவு 8 மணிக்கு மேல் பேருந்து சேவை இல்லை. இரவிலும் சற்று கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: நெடுந்தூரம் பேருந்துகளை இயக்கும்போது சரியான நேரத்தில் மக்களுக்கு பேருந்துகளின் சேவை கிடைக்காத சூழல் இருந்தது. இதை மாற்றியமைக்கும் வகையில் நகர்ப்புறத்துக்கென திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, கோயம்பேட்டை மையமாகக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரு பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் 2 பேருந்துகள் மூலம் மாறிச் செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக பேரம்பாக்கத்துக்கு இயக்கப்பட்ட 153 பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பூந்தமல்லி வரைஇயக்கப்படுகின்றன.
அங்கிருந்து பேரம்பாக்கத்துக்கு ஏராளமான பேருந்துகள் உள்ளன. மக்களுக்கு அதிக சேவை வழங்கவும், காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையிலேயே பேருந்து சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வண்டலூர் போன்ற பகுதிகளுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அதிகளவு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு போதிய பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது சேவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பேருந்துகளை இயக்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..