சங்கரய்யாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு.! மனம் வருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சங்கரய்யாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு.! மனம் வருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
By: TeamParivu Posted On: November 15, 2023 View: 40


மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யா இறுதி ஊர்வலம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் சென்னை பசுமை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தாமோ.அன்பரசன், திமுக எம்பி ஆ.ராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் நினைவுகள் பற்றியும், அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.


அதில், ” தகைசால் தமிழர், முதுபெரும் பொதுவுடைமைப் போராளி விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் மறைவு செய்தியால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த வேளையில் அவர் மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.

மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்ந்து மறைந்த தோழர் சங்கரய்யா அவர்களின் வாழ்க்கையும் தியாகமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். மதுரையில் படிக்கும் போதே மாணவர் சங்கச் செயலாளராகப் போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர் சங்கரய்யா.
அவரது தேசியம் சார்ந்த செயல்பாடுகளால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு படிப்பைத் துறந்தவர். இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னர்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார். 

இப்படிப்பட்ட விடுதலைப் போராட்ட வீரருக்கு 2021-ஆம் ஆண்டு விடுதலை நாளினை முன்னிட்டு நேரில் சென்று முதல் ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கியது எனக்குக் கிடைத்த வாழ்நாள் பெருமை. விருதின் போது பெருந்தொகையைக் (10 லட்ச ரூபாய்) கூட கொரோனா நிவாரண நிதிக்காக அரசுக்கே அளித்த தோழர் சங்கரய்யா அவர்களின் மாண்பால் நெகிழ்ந்து போனேன்.

தோழர் சங்கரய்யா அவர்கள் ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும், கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக விளங்கியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலுமாக இருந்து அவர் நடத்திய போராட்டங்களும். தீக்கதிர் நாளேட்டின் முதல் பொறுப்பாசிரியர் முதலிய பல்வேறு பொறுப்புகளில் ஆற்றிய செயல்பாடுகளும் தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் அவரது தவிர்க்க முடியாத ஆளுமையை வெளிக்காட்டுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தோழர் சங்கரய்யா அவர்களின் மறைவு எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது அனுபவமும் வழிகாட்டலும் இன்னும் சில ஆண்டுகள் கிடைக்கும் என எண்ணியிருந்த எனக்கு அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் பேரிழப்பு.

சாதி, வர்க்கம், அடக்குமுறை. ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர். பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும். ” என முதல்வர் அரசு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..