பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தரிசனமா? - திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டண உயர்வால் பக்தர்கள் வேதனை

பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தரிசனமா? - திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டண உயர்வால் பக்தர்கள் வேதனை
By: TeamParivu Posted On: November 18, 2023 View: 29

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தரிசனக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப் பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
திருச்செந்தூர் கோயிலில் சாதாரண நாட்களில் சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் என இரு வழிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் சிறப்பு தரிசனக் கட்டணமாக ரூ.100மட்டும் பக்தர்களிடம் வசூலிக்கப்படும். அதேபோல, அதிகாலை விஸ்வரூப தரிசனக் கட்டணமாக ரூ.100 பெறப்படுகிறது. மேலும், அபிஷேக கட்டணமாக சாதாரண நாட்களில் ரூ.500, விசேஷ நாட்களில் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், தற்போது நடைபெற்று வரும்கந்தசஷ்டி திருவிழாவில் இந்த கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. விஸ்வரூப தரிசனக் கட்டணமாக ரூ.2ஆயிரம், யாகசாலையின் உள்ளே அமர்ந்துபார்க்க ரூ. 3 ஆயிரம், அபிஷேக கட்டணமாக ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், விரைவு தரிசனம் என்ற பெயரில்புதிதாக ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக தனி பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் விரைவு தரிசனத்துக்காக ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, கடும் எதிர்ப்பைக் கிளப்பி உள்ளன. இந்த கட்டணஉயர்வு பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், “கட்டண உயர்வு 2018-ம்ஆண்டு உயர்த்தப்பட்டதுதான். 2018-ல்வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில்தான் இந்த கட்டணம் வசூலிக்கப்படு கிறது” என்று கோயில் நிர்வாகம் தரப்பில்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்.பி.யும்இதே விளக்கத்தை அளித்துள்ளார்.
இருப்பினும் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைக் கண்டித்து நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் கூறும்போது, “திருச்செந்தூர் கோயிலுக்கு மாதம் ரூ.3 கோடி அளவுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். ஆனால், அதில் 10 சதவீதம்கூட பக்தர்கள் நலனுக்காககோயில் நிர்வாகம் செலவு செய்வதில்லை. கோயிலில் பக்தர்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்துதரவில்லை. ஆனால், தரிசனக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். பணம் இருப்பவர்கள் மட்டுமே கடவுளை தரிசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். எனவே, கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” என்றார்.
உடன்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வே.குணசீலன் கூறும்போது, “பணம் இருந்தால்தான் கடவுளை தரிசிக்க முடியும் என்றநிலையை உருவாக்கி, கடவுள் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற தத்துவத்தையே சிதைத்துவிட்டனர். கட்டண உயர்வால் பாரம்பரியமாக கோயிலுக்கு வரும்பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்தில் உள்ளகடற்கரை பேருந்து நிலையத்துக்கு வரும்சுற்றுலாப் பேருந்துகளுக்கான கட்டணத்தைரூ.50-ஆக உயர்த்தியுள்ளனர். அரசுப்பேருந்துகள் கடற்கரை பேருந்து நிலையத்துக்கு வருவதில்லை இதனால் பக்தர்கள் பல கிலோமீட்டர் தொலைவு நடந்தே வர வேண்டியுள்ளது. இதையும் குறைக்க வேண்டும்” என்றார்.
பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தலைவர் ஆர்.சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கவே,தரிசனக் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இந்த அநியாய வசூலைத் தடுக்க அறவழியில் போராடிய இந்து முன்னணியினர் மற்றும் முருக பக்தர்களை கைது செய்த காவல் துறையைக் கண்டிக்கிறோம்.
திருச்செந்தூர் கோயிலில் முருக பக்தர்களுக்கு எதிரான போக்கை அறநிலையத் துறை தொடர்ந்து கடைப்பிடித்தால், பக்தர்களை திரட்டி மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.
கோயிலில் கட்டண உயர்வால், கடவுள் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற தத்துவத்தையே சிதைத்துவிட்டனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..