யூடியூப் சேனல் ரூ.100 கோடி மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது எப்படி? - குவி - நிறுவனர் மற்றும் சிஇஓ அருண் பிரகாஷ் பேட்டி

யூடியூப் சேனல் ரூ.100 கோடி மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது எப்படி? - குவி - நிறுவனர் மற்றும் சிஇஓ அருண் பிரகாஷ் பேட்டி
By: TeamParivu Posted On: November 20, 2023 View: 34

ஐடி துறைக்கு தேவையான சி, சி , ஜாவா உள்ளிட்ட தொழில்நுட்ப திறன்களை எளிமையான முறையில் கற்றுத்தரும் நோக்கில், 2011-ம் ஆண்டு ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கினார் அருண் பிரகாஷ். இன்று அது குவி (GUVI) என்ற பெயரில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அருண் தொழில்முனைவு குடும்ப பின்புலத்தைக் கொண்டவரோ, மேல்தட்டு வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவரோ இல்லை.மதுரையில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர்.
உள்ளூரிலேயே பொறியியல் முடித்தவருக்கு பன்னாட்டு நிறுவனம்ஒன்றில் வேலை கிடைத்தது.பணி அனுபவம் வழியே மென்பொருளில் நிபுணத்துவம் பெற்ற அவருக்கு, அதை பிறருக்குக் கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வம் இருந்தது. அதன் நீட்சியாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கினார். இன்று அது இந்திய அளவில் கவனம் ஈர்க்கும், எட்டெக் (EdTech) ஸ்டார்ட் அப் நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமானது... அருண் பிரகாஷ் உடன் உரையாடினேன்.யூடியூப் சேனல் தொடங்கி தொழில்நுட்பங்களை கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? - சொல்லப்போனால், நான் நடுத்தர வர்க்கம் கிடையாது. கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். என்னுடைய அப்பா ஜவுளிக்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய மாத ஊதியம் ரூ.4,000. இந்த சிரமத்துக்கு மத்தியில்தான் அவர் என்னை படிக்க வைத்தார். அதனால், மிகுந்த பொறுப்புடனே கல்லூரியில் படித்தேன். படிப்பு முடிந்ததும் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 2003-ல் ‘ஹனிவெல்’ நிறுவனத்தில் சேர்ந்தேன். பின்னர் ‘பே பால்’ நிறுவனத்துக்கு மாறினேன். இரண்டும் பன்னாட்டு நிறுவனங்கள். அங்கு பணியாற்றியது எனக்கு பல்வேறு திறப்புகளை அளித்தது.
2008 வாக்கில் என் கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றேன். அப்போது அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்களிடம் பேசியபோது எனக்கு ஒரு விஷயம் அதிர்ச்சியளித்தது. பெரும்பாலான மாணவர்களுக்கு தங்கள்துறை குறித்த அடிப்படையான விஷயங்கள்கூட தெரியவில்லை. எனவே, அவர்களுக்கு எளிய முறையில் தொழில்நுட்பங்களை சொல்லிக்கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். நான் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்ததால், அவர்களுக்கு நேரடியாக சென்று சொல்லிக்கொடுக்க முடியாது. எனவே யூடியூப்பில் வீடியோவாக போடலாம் என்று முடிவு செய்தேன். என்னுடைய விடுமுறை நாட்களில் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யத்தொடங்கினேன்.
ஆரம்ப நாட்களில் அந்த வீடியோக்களை யாரும் பார்க்கவில்லை. சரி, இப்போது பார்க்காவிட்டால் என்ன, பிற்பாடு பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றம் செய்தேன். மூன்று மாதம் கழிந்திருக்கும். திடீரென்று என்னுடைய வீடியோக்களை 10 லட்சம் பேர் பார்த்திருந்தனர். எனக்கு ஆச்சர்யம். யார் இவர்கள் என்று தேடிப்பார்த்தால், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூரில் முதுகலை படிக்கச் சென்ற தமிழர்கள். சிலர் முன்னணி நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கும் எளிய முறையில் தொழில்நுட்பங்களை புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தேன்.
இதைப் பற்றி அலுவலகத்தில் மதிய உணவு இடைவெளியின்போது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். “தமிழ்நாட்டில் 500-க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் முன்னணி கல்லூரிகளைத் தவிர்த்து ஏனைய கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை தெரியவில்லை” என்றேன் மற்ற நண்பர்களும் அவர்கள் மாநிலத்திலும் இதுதான் நிலைமை என்று சொன்னார்கள். அப்போது ஒரு முடிவுக்கு வந்தேன்: தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பொறியியல் மாணவர்களுக்கு ஐடி துறை துறைசார்ந்த அடிப்படையான விஷயங்களை எளிய முறையில் கற்பிக்க வேண்டும். எனவே, அலுவலக நண்பர்கள் உதவியுடன், வீடியோக்களை தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியிட ஆரம்பித்தேன். இப்படியாகத்தான் குவியின் யூடியூப் பயணம் தொடங்கியது.

நீங்கள் சொல்வது ஒருவகையில் டியூசன் மாதிரிதான். பள்ளி மற்றும் கல்லூரிப்பாடங்களை சொல்லித் தரக்கூடிய நல்ல டியூசன் ஆசிரியர்கள் ஒவ்வொரு ஊர்களிலும் உண்டு. ஆனால், அவர்களது கற்பித்தல் செயல்பாடு ஊர் அளவிலேயே நின்றுவிடுகிற நிலையில் நீங்கள் அதை ஒரு நிறுவனமாகவே மாற்றியுள்ளீர்கள். உங்கள் கற்பித்தல் செயல்பாட்டை நிறுவனமாக மாற்றலாம் என்ற ஐடியா எப்போது உங்களுக்கு வந்தது? - உண்மையில், நிறுவனம் தொடங்கி சம்பாதிக்க வேண்டும்என்ற எண்ணம் எனக்கு அப்போது இல்லை. ஏனென்றால், என் வேலை மூலமே எனக்கு நல்ல ஊதியம் வந்துகொண்டிருந்தது. ஆனால், இந்த வீடியோக்களை முறைப்படுத்தி கொண்டு சேர்க்க ஒரு அணி தேவையாக இருந்தது. நிறுவனம் என்ற ஒரு கட்டமைப்பு வழியாகவே அது சாத்தியம் என்பதை உணர்ந்தேன். 2014-ல் குவி நிறுவனமாக மாறியது.
என்னுடைய மனைவியும் என்னுடன் ‘பே பால்’ நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். முதலில் அவர்தான் தனது வேலையை விட்டுவிட்டு குவி நிறுவனத்தை கவனிக்கும் பொறுப்பில் முழுநேரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். குவி நன்றாக வளரும் என்ற சாத்தியத்தை ஆறு மாதங்களிலேயே உணர்ந்துகொண்டோம். இதையடுத்து நான் வேலையிலிருந்து விலகி குவியில் முழு நேரமாகஇறங்கினேன். மற்றொரு நண்பர் பாலாவும் எங்களுடன் இணைந்தார். மென்பொருள் துறையில் கிடைத்த நீண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தின் இலக்கையும் செயல்பாட்டையும் திட்டமிட்டு வடிவமைத்தோம்.
நிறைய இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கான நல்ல ஐடியாவுடன் இருக்கிறார்கள். ஆனால், அந்த ஐடியாவை தொழிலாக மாற்றுவதற்கான செயல்பாடு அவர்களுக்கு கடினமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல், தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு அதற்கான பணபலம் இல்லை என்று குறைபடுவதையும் பார்க்க முடிகிறது. இந்தக் காலகட்டத்தில் நிறுவனம் தொடங்குவதற்கு பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றா? உங்கள் அனுபவம் என்ன? - இந்தக் காலகட்டத்தில் நிறுவனம் தொடங்குவதற்கு பணம் என்பது பிரதானமான ஒன்று இல்லை. நல்ல ஐடியாவும் அதை செயல்படுத்திக்காட்டும் திறனும்தான் முக்கியம். உங்கள் நிறுவனத்துக்கான சந்தை வாய்ப்பைப் பொறுத்து வெளியிலிருந்து நிதி திரட்டிக்கொள்ள முடியும்.
நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு இந்த 3 கேள்விகளைக் கேட்டுக்கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். எது உங்களுக்கு பிடித்தமான விஷயம், எதில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள், உங்களின் எந்த பங்களிப்புக்காக மக்கள் உங்களுக்கு பணம் தர முன்வருவார்கள்? என்னைப் பொறுத்தவரையில், எனக்கு கற்றுத்தருவது மிகவும் பிடிக்கும், தொழில்நுட்பம் எனக்கு நன்றாக தெரியும், மூன்றாவது கேள்வியான, மக்கள் என்னுடைய செயல்பாட்டுக்கு பணம் செலுத்த தயாராக இருப்பார்களா என்பதற்குத்தான் நான் விடை தேட வேண்டி இருந்தது.
ஒவ்வொரு பொறியியல் கல்லூரிக்கும் நேரில் சென்று குவியின் செயல்பாடு குறித்து விளக்கினோம். அது மாணவர்களுக்கு எத்தகைய பயனுள்ளதாக இருக்கும் என்று எடுத்துக் கூறினோம். இப்படியாகத்தான், மக்கள் குவியின் சேவைக்கு பணம் வழங்குவதற்கான சாத்தியத்தை உருவாக்கினோம். ஐடியாவை தொழிலாக மாற்றுவது என்பது சவாலான ஒரு விஷயம்தான். ஆனால், நாம் களமிறங்கி இருக்கும் துறை சார்ந்த போக்கை உற்றுக்கவனித்தால், அதில் உள்ள தொழில் வாய்ப்புகள் கண்ணுக்கு தெளிவாக புலப்பட ஆரம்பிக்கும்.
இந்த ஸ்டார்ட்அப் பயணத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? - நான் ஆரம்பத்தில் எந்த வீடியோவிலும் என்னுடைய முகத்தைக் காட்ட மாட்டேன். மிகுந்த தயக்கம் இருந்தது. நம்மைப் பற்றி நாமே பெருமிதமாக பேசக்கூடாது, தன்னடக்கமாக இருக்க வேண்டும் என கலாச்சார ரீதியாக சில பண்புகள் நம்மிடம் வேரூன்றி இருக்கின்றன. இந்த விழுமியங்கள் தனி மனிதர்களுக்கு பொருந்தும். ஆனால், நிறுவனத்துக்கு நாம் இந்த விழுமியங்களை எடுத்துச் செல்ல முடியாது. ஆரம்பத்தில் எனக்கு நிறுவனத்தையும் தனிமனிதனையும் பிரித்துப் பார்ப்பதில் குழப்பம் இருந்தது. பிறகுதான் புரிந்துகொண்டேன், உங்கள் நிறுவனத்தை வளர்க்க வேண்டுமென்றால், நிறுவனத்தைப் பற்றி நீங்கள்தான் பேச வேண்டும்.
அதன் ஆன்மாவை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவற்றைத்தான் பிராண்டிங் என்றும் மார்க்கெட்டிங் என்றும் நாம் கூறுகிறோம். அமெரிக்கா தன்னுடைய மார்க்கெட்டிங் வழியாகவே இன்று தொழில் வளர்ச்சியில் உலகின் முதன்மையான நாடாக நிலைகொண்டுள்ளது. நிறுவனம் மட்டுமல்ல, ஒவ்வொரு தனிநபரும் தங்கள் பணிசார்ந்து தங்களை பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய சூழலில் உள்ளனர். அவற்றை எவ்வளவு அழகியல் ரீதியாகவும், நெருடல் ஏற்படுத்தாத வகையிலும் செய்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை இந்தப் பயணத்தில் உணர்ந்துகொண்டுள்ளேன்.


  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..