அரசு நிலங்களை ஆக்கிரமிக்கும் கும்பல்! அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!

அரசு நிலங்களை ஆக்கிரமிக்கும் கும்பல்! அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
By: No Source Posted On: November 27, 2023 View: 45

அரசின் பொது சொத்துகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது

மதுரை: சமீபகாலமாக நிலங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்து வருவதால் அதிகாரிகளின் உதவியுடன் பேராசைக்காரர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்துள்ளது என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளார்.உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்:

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த சையது அலி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பாதையை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் லட்சுமிநாராயணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே இந்த கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கண்காணிப்பு குழு:

அதாவது, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு 2014-ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற கண்காணிப்பு குழுவை அமைத்தது. இதன் தலைவராக மாவட்ட கலெக்டரை நியமித்தது. இதற்கான மாநில வழிகாட்டுதல் குழுவில் தலைமை செயலாளர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் உள்ளனர். மாதந்தோறும் இந்த குழு கூடி, நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் ஆக்கிரமிப்பு குறித்த புகார்களை விசாரிக்கிறது.அந்த வகையில் பொது இடங்கள் ஆக்கிரமிப்பு குறித்து நோட்டீசை பெறுபவர்கள் தகுந்த அதிகாரி முன் ஆஜராகி தங்களது விளக்கத்தை கொடுக்க வேண்டும்.

பேராசைக்காரர்கள்:

பூமி, மனித வாழ்க்கைக்கு அனைத்தையும் வழங்குகிறது. ஆனால் பேராசையை திருப்திப்படுத்த அல்ல. பேராசைக்காரர்கள் அரசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் நெடுஞ்சாலை நிலங்களை ஆக்கிரமித்து, பொது நிலங்களைப் பயன்படுத்த, அடிப்படை உரிமைகளை மீறுகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலைகளில், பொதுச் சொத்துகள், நீர்நிலைகள் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்கள் மக்களின் நலனுக்காகப் பாதுகாக்கப்படுவதையும், பொது மக்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதையும் உறுதி செய்வது அரசின் கடமையாகும்.

பெரிய அளவில் ஆக்கிரமிப்புகளை செய்பவர்களிடம் ஆதாயத்தை பெற்றுக்கொள்ளும் பேராசை பிடித்தவர்கள், போலி ஆவணங்களை உருவாக்கி, அரசு சொத்துக்களுக்கு பட்டா வழங்கும் விபரீதமான சூழ்நிலையும் உள்ளது.

கிரிமினல் நடவடிக்கை எடுங்க:

சமீப காலமாக நிலங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்து வருவதால், பேராசை பிடித்த மனிதர்கள், வருவாய்த்துறை மற்றும் இதர அரசுத் துறைகளின் அதிகாரிகளின் கூட்டு சேர்ந்து அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதும் அதிகரிக்கிறது.


இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் முறியடிக்கப்படுவதுடன், மக்களின் நலனுக்காக அரசு சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும்.

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலத்தை அபகரிப்பது திருட்டுதான். எனவே, இது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி மட்டுமல்ல, பிற சட்டங்களின்படியும் குற்றமாகும்.
சமூகத்தில் செல்வாக்கு மிக்க சில நபர்களால் நிலத்தை அபகரிக்கும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதால், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

அதிகாரிகளுக்கு அதிரடு உத்தரவு:

அரசு உத்தரவின்படி மாநில வழிகாட்டுதல் குழு, மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் கூடி, செயலாளர்கள் கூட்டத்துடன் பிரச்சினைகளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். புகார்கள் மீதான நடவடிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.


ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு சொத்துக்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாலோ, கடமை தவறினாலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

12 வாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் தவறினால் மனுதாரர் மீண்டும் இந்த கோர்ட்டை நாடலாம். அதன்படி மனுதாரர் தெரிவிக்கும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..