அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சச்சின் முதல் அம்பானி வரை... விஐபிக்கள் மட்டுமே 3 ஆயிரம் பேர்!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சச்சின் முதல் அம்பானி வரை... விஐபிக்கள் மட்டுமே 3 ஆயிரம் பேர்!
By: TeamParivu Posted On: December 07, 2023 View: 31

அயோத்தி நகரில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விஐபிக்கள் சிலரது பெயர்கள் வெளியாகி பெரிதும் கவனம் பெற்று வருகிறது.


வரும் 2024ஆம் ஆண்டில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் மிக முக்கியமான இலக்கு ராமர் கோயில். மக்களவை தேர்தலுக்கு முன்பாக திறப்பு விழா நடத்தி நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர். 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக நிகழ்விற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரம் வேகமாக தயாராகி வருகிறது.

அயோத்தியில் சிறப்பு ஏற்பாடுகள்

பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. ராமர் கோயிலில் ”ராம் லல்லா” என்று அழைக்கப்படும் மூலவர் சிலை பொருத்தப்பட உள்ளது. இது 5 வயது குழந்தையின் வடிவில் இருக்கும். இதற்காக இரண்டு கற்களில் மூன்று சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

ராம் லல்லா சிலை

இவை கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படவுள்ளன. தற்போது 90 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்டன. அடுத்த ஒருவாரத்தில் எஞ்சிய பணிகள் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் கும்பாபிஷேக விழா ஏற்பாட்டிற்கு கோயில் நிர்வாகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு நேரில் சென்று அளிக்கப்பட்டு வருகிறது.


சிறப்பு அழைப்பாளர்கள்

மொத்தமாக பார்த்தால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் விஐபிக்கள் மட்டுமே 3 ஆயிரம் பேர் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விஐபிக்கள் சிலரது பெயர்கள் வெளியாகி பெரிதும் கவனம் ஈர்த்து வருகிறது.

விஐபிக்கள் லிஸ்ட்

அதாவது, பிரபல கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ரத்தன் டாடா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், டிவி சீரியலில் ராமர், சீதை வேடத்தில் நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரபலங்களுக்கும் அழைப்பு

மேலும் 4 ஆயிரம் குருமார்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், இந்தியாவின் பல்துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி துறவிகள், சாமியார்கள், முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், வழக்கறிஞர்கள், இசையமைப்பாளர்கள், பத்ம விருது வென்றவர்களும் கும்பாபிஷேக நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


50 நாடுகளின் பிரதிநிதிகள்

இவர்களுக்கான அழைப்பிதழை ராமர் கோயில் ட்ரஸ்ட் அனுப்பி வைத்திருக்கிறது. குறிப்பாக 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட உள்ளனர். இதுதவிர ராமர் கோயில் இயக்கத்திற்காக தொடர்ந்து போராடி தங்கள் உயிரை தியாகம் செய்த கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..