மருத்துவமனை, கல்வி நிலையங்களில் ரூ.5 லட்சம் வரை யுபிஐ பரிவர்த்தனைக்கு அனுமதி: ரிசர்வ் வங்கி

மருத்துவமனை, கல்வி நிலையங்களில் ரூ.5 லட்சம் வரை யுபிஐ பரிவர்த்தனைக்கு அனுமதி: ரிசர்வ் வங்கி
By: TeamParivu Posted On: December 08, 2023 View: 30

புதுடெல்லி: மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான யுபிஐ கட்டண வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள வசதியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் ‘யுபிஐ’ எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI - Unified Payments Interface) ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் லாப நோக்கமற்ற நிறுவனமான இந்திய தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் (NPCI) நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட மின்னணு பண பரிவர்த்தனை சேவை கட்டண முறைதான் யுபிஐ. யுபிஐ வசதி வந்த பிறகு யாரும் அவசரத்துக்குகூட பணம் வைத்துக் கொள்வதில்லை. காய்கறி கடை, சலூன் கடை, உணவகம் என எல்லாமே யுபிஐ மயமாக காட்சியளிக்கிறது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் இன்று (டிச.8) நடைபெற்ற டிசம்பர் மாத நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அதன் முக்கிய அறிவிப்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட தகவல்: “தற்போது பல்வேறு வகை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அடிக்கடி மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதன்படி, தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது கல்வி மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு அதிக அளவில் பணம் செலுத்த உதவும். மீண்டும் மீண்டும் பணம் செலுத்துவதற்கான இ-ஆணைகள் (e-mandates) வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..