“தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” - மதுரையில் அன்புமணி ராமதாஸ் பேட்டி

“தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” - மதுரையில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
By: TeamParivu Posted On: December 09, 2023 View: 28

மதுரை: தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடை 50 சதவீதத்துக்கும் மேல் கிடையாது என தீர்ப்பு வந்து விட்டால் அதற்கு திமுகவும், அதிமுகவும் தான் காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், “சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ளேன். உடனடியாக தமிழ்நாட்டில் சாவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என முதல்வர் கூறி இருக்கிறார். ஆனால் பிஹாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, கர்நாடகாவில் எடுத்திருக்கிறார்கள், சென்சஸ் மற்றும் சர்வே இரண்டுக்கும் உரிய வித்தியாசத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
1931ல் கடைசியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. உண்மையாக பின்தங்கி உள்ள மக்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு சலுகைகள், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதான் உண்மையான சமூக நீதி. அதிகாரம் இருந்தும் எடுக்க மாட்டோம் என்று கை கழுவி விடுவது சமூக நீதிக்கு எதிரான சமூக அநீதி. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதிப் பற்றி பேச வேண்டாம்.
இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறுகிறது அரசு தட்டிகழிப்பதற்கு என்ன காரணம். பின் தங்கிய சமுதாயத்தை முன்னிட்டு கொண்டுவருவதுதான் உண்மையான சமூக நீதி.
உச்ச நீதிமன்றம் 69 சதவீத இட ஒதுக்கீட்டை உரிய விளக்கம் அளிக்க கோரிக்கை விடுத்துள்ளது. இல்லாவிட்டில் இட ஒதுக்கீடு குறித்து மறுபரிசலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடை 50 சதவீதத்துக்கும் மேல் கிடையாது என தீர்ப்பு வந்து விட்டால் அதற்கு திமுகவும், அதிமுகவும் தான் காரணம்” என்றார்.
பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: சென்னையில் புயலுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பவில்லை, பலர் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை, பலருக்கு பால் மற்றும் குடிநீர் கூட கிடைக்கவில்லை. அதிகாரிகள் வேலை செய்கிறார்கள். ஆனால் வேகம் பத்தவில்லை அதற்குக் காரணம் சரியான திட்டமிடுதல் இல்லை. 2015 இல் வந்த வெள்ளத்தை பார்த்த பிறகும் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை, இனிமேலும் பாடம் கற்றுக்கொள்ள போவதில்லை, மக்களும் மறந்து விடுவார்கள். பருவநிலை மாற்றத்தால் உலக வெப்பநிலை அதிகமாகும் காரணங்களால் இன்னும் மோசமான விளைவுகள் வருவரும்.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் சென்னைக்கு அடுத்த பெரிய வெள்ளம் வரும். இன்னும் பத்து ஆண்டுகளில் உணவு தட்டுப்பாடு வரும் ஆனால் தற்போதைய தமிழக அரசு விளை நிலங்களை கைப்பற்றி அதை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 65 சதவீத தொழிற்சாலைகள் சென்னை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே உள்ளது.
சென்னையில் நாலு சதவீத ஆக்கிரமிப்புகள் மட்டும் தான் ஏழை எளிய மக்களிடம் உள்ளது பாக்கி 96 சதவீதம் அரசு மற்றும் பெரிய தொழிலதிபர்கள் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.
புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மற்றும் காலநிலை மாற்றம் குறித்து நான் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். மற்ற கட்சிகள் இதைப்பற்றி பேசுவதில்லை, இளைஞர்களுக்கும் சினிமா மற்றும் ஐபிஎல் மட்டும்தான் தெரிகிறது இதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
மத்திய அரசு வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக ரூ.500 கோடி மழைநீர் வடிகால் திட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பத்தாது முழுமையாக திட்டங்கள் கொண்டு வர வேண்டும். இருக்கக்கூடிய வடிகால்களை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும்.
வெள்ளை அறிக்கை வேண்டும்: எண்ணூரில் தூர்வாரப்படாததால் தான் ரசாயன கழிவுகள், எண்ணைகள் கலந்துள்ளது. சென்னைக்கு சென்னையை சுற்றி புதியதாக 10 ஏரிகள் உருவாக்க வேண்டும். பிரச்சினை என்னவென்றால் அடுத்த தலைமுறைகளை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை, அடுத்த தேர்தலை பற்றி தான் சிந்திக்கிறார்கள். முதல்வர் ரூ.4000 கோடி செலவிட்டதாக சொல்கிறார், ஆனால் அமைச்சர் ரூ.1900 கோடி தான் செலவிட்டதாக சொல்கிறார்கள். முதலில் இதற்கு அவர்கள் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.
மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது இதற்காக மருத்துவ முகங்கள் நடத்த அரசிடம் பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மருத்துவ முகங்கள் நடைபெறுகிறது இது தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்
சென்னையில் 95 சதவீதம் வெள்ள நீர் வடிந்து விட்டதாக தலைமை செயலாளர் சொல்கிறார். ஆனால் இது பொய். பலர் இறந்ததாக செய்தித்தாள்களில் வருகிறது. ஆனால் அரசு எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
மிகப் பெரிய கலவரமாகலாம்! சமீப காலத்தில் தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் கொடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது. இதைத் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலாக நான் பார்க்கிறேன். இதை அரசு கட்டுப்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய கலவரமாக மாறும். அதேபோல கஞ்சா போதை பொருள் பயன்பாடு அதிகமாகியுள்ளது.
மதுரையில் தொழில்நுட்ப பூங்கா ஆறு ஏக்கரில் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அது பத்தாது இடம் மாற்றி ரிங் ரோடு பகுதியில் இன்னும் பெரியதாக அமைக்க வேண்டும்.
கனிம வளத்தில் ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான லாரிகள் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார். அதன் விவரம்:
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் பாமக நிலைப்பாடு என்ன?
பதில்:வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாமக நிலைப்பாடு விரைவில் அறிவிப்போம்.
கேள்வி: திமுக அரசுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசியிருக்கிறாரே..?
பதில்: கூட்டணியில் இருப்பதால் அப்படி சொல்கிறார்.
கேள்வி: வெள்ள நிவாரண நிதிக்காக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பீர்களா?
பதில்: நிச்சயமாக நாங்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். வேண்டுமென்றால் நாங்களும் மத்திய அரசிடம் உடன் வந்து அழுத்தம் கொடுக்க தயாராக உள்ளோம். தொலைநோக்கு திட்டங்களுக்கான செலவுக்கு கூடுதலாக நிதி வேண்டும்.
ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர் கொள்ள நிச்சயம் ஒரு மாஸ்டர் பிளான் வேண்டும். பாமக சார்பாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை சென்னை வெள்ளத்திற்காக நாங்கள் கொடுக்கின்றோம்.
கேள்வி: தென் மாவட்டத்தில் பாமக வளர்ச்சி எப்படி உள்ளது?
பதில்:தென் மாவட்டங்கள் இல்லாமல் மேற்கு மாவட்டத்திலும் எங்களுடைய வளர்ச்சி அதிகமாகி உள்ளது அனைத்துக் கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் எங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறு அன்புமணி கூறினார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..