தென்மாவட்டங்களில் 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்க வைப்பு; தூத்துக்குடியில் வடியாத வெள்ளம்!

தென்மாவட்டங்களில் 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்க வைப்பு; தூத்துக்குடியில் வடியாத வெள்ளம்!
By: TeamParivu Posted On: December 19, 2023 View: 29


சென்னை: 
நெல்லை, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் பால் விநியோகம் ஓரிரு நாட்களில் சீராகும். தூத்துக்குடியில் பால் விநியோகம் சீராக தாமதமாகும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கடந்த இரண்டு நாட்களாக, குறிப்பாக டிச.17-ம் தேதி காலை தொடங்கி, டிச.18-ம் தேதி மதியம் வரை வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இதனால், தமிழகத்தின் தென்மாவட்டங்கள், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 18-ம் தேதி காலை தொடங்கி பகல் 3 மணி வரை, அதாவது 6-7 மணி நேரத்துக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 11 செ.மீ மழையும், திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியாக 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. திருச்செந்தூர் 23 செ.மீ, காயல்பட்டணத்தில் 21 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இந்த இரண்டு பகுதிகளிலும் அதி கனமழை பதிவாகி உள்ளது. காயல்பட்டணத்தில் இரண்டு நாட்களில் 116 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. திருச்செந்தூரில் 92 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 30 மணி நேரத்துக்குள் இந்த அளவுக்கு வரலாறு காணாத மழை பதிவாகியிருக்கிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோரப் பகுதிகள் மற்றும் கிராம நகரங்களிலும், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள கிராம நகரங்களிலும் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மீட்புப் பணிகளில் சுமார் 1350 பேர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 375 பேர், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 280 பேர், பேரிடர் மீட்புப் பணிகளில் பயிற்சி பெற்ற காவலர்கள் 580, இந்திய ராணுவம், கப்பல்படை, கடலோரகாவல் படையைச் சேர்ந்த 168 பேர் என 1350 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர காவல் துறையினரும் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 160 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 16,680 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் முகாம்கள் தவிர்த்த கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் 44,000 உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் படகுகள் மூலம்கூட செல்ல முடியவில்லை. விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படைகளுக்குச் சொந்தமான 9 ஹெலிகாப்டர்கள் மூலம் 11 ட்ரிப்களில் 13,500 கிலோ உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் 44,900 லிட்டர், தூத்துக்குடி மாவட்டத்தில் 30,000 லிட்டர் பாலும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் திருநெல்வேலியில் பால் விநியோகம் சீராகும். தூத்துக்குடியைப் பொருத்தவரையில், கடலோரப் பகுதிகள் மற்றும் மாநகரப் பகுதிகளில் பால் விநியோகம் சீராக சில நாட்களாகும். ஆனால், அந்தப் பகுதிகளில் பால் பவுடர் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மற்ற மாவட்டங்களில் இருந்து உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 46 லாரிகள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சார விநியோகம் நூறு சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பல பகுதிகளில் மின் விநியோகம் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. திருநெல்வேயில் மொத்தமாக 1,836 டிரான்பார்மர்கள் உள்ளன. அதில் 215 டிரான்ஸ்பார்மர்கள் மூலமாக மின் விநியோகம் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. இன்றுகாலை வரை 48 டிரான்ஸ்பார்மர்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 12 சதவீத பகுதிகளில் மட்டும் மின் விநியோகம் இல்லாமல் உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீத பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும்கூட 60 சதவீத பகுதிகளுக்கு மின்சாரம் கொடுக்கப்படாமல் உள்ளது. அங்கு தற்போதுகூட தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது. மாநகரப் பகுதிகளிலும்கூட 2-3 அடி அளவுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தண்ணீர் அதிகமான பகுதிகளில் தேங்கியிருப்பதால், மின்சாரம் தாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, மின்சாரம் வழங்கப்படவில்லை. தண்ணீர் வடிந்த பிறகு மின்சாரம் வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..