Rewind 2023: ‘பொம்மை நாயகி’ முதல் ‘சித்தா’ வரை - கவனிக்க வைத்த தமிழ்ப் படங்கள்!

Rewind 2023: ‘பொம்மை நாயகி’ முதல் ‘சித்தா’ வரை - கவனிக்க வைத்த தமிழ்ப் படங்கள்!
By: TeamParivu Posted On: December 21, 2023 View: 58


கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் நிறைய வரவேற்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ‘கன்டென்ட்’டுக்கான மதிப்பு கூடியுள்ளது. வலுவில்லாத திரைக்கதை அம்சம் கொண்ட மாஸ் பாடங்களும் விமர்சன ரீதியாக தோலுரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், உச்ச நட்சத்திரங்களைக் கடந்து கதைக்களத்தால் கவனம் பெற்ற தமிழ் படங்கள் குறித்து பார்ப்போம்.

பொம்மை நாயகி: 
2023-ன் தொடக்கம் ‘துணிவு’, ‘வாரிசு’ என வெகுஜன மாஸ் மசாலா படங்களுக்கானதாக இருந்தாலும், அடுத்து பிப்ரவரியில் வெளியான இயக்குநர் ஷானின் ‘பொம்மை நாயகி’ அழுத்தமான கதைக்கான களத்தை அமைத்துக் கொடுத்தது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் மகளுக்காக ஊரையே எதிர்க்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தந்தை ஒருவரின் இயலாமை கலந்த சாதியத்துக்கு எதிரான போராட்டமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தாலும், பாதுகாப்பு கேள்விக்குறிதான் என்ற தளத்திலும் படம் கவனம் பெற்றது.

தி கிரேட் இந்தியன் கிச்சன்: 
உருவாக்கத்தில் தடுமாற்றமிருந்தாலும், இல்லச்சிறைக்குள் சிக்கியிருக்கும் பெண்களின் வலியை பதிவு செய்த விதத்தில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட ஆர்.கண்ணனின் இப்படம் .கவனம் கொள்ளத்தக்கது.

டாடா: 
கணேஷ் கே.பாபுவின் ‘டாடா’ ஃபீல் குட் அம்சத்தில் நின்று தந்தைவழி கதைச்சொல்லலாக வரவேற்பை பெற்றது. காதல் வாழ்க்கைக்கும் திருமணத்துக்குமான வித்தியாசத்தையும், தவறான புரிதல்களால் ஏற்படும் பாதிப்பையும் பதியவைத்தது.

அயோத்தி: 
இந்தியச் சூழலில் தற்போது நிலவும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக மனிதநேயத்தை முன்னிறுத்தி ஸ்கோர் செய்தது இயக்குநர் மந்திரமூர்த்தியின் ‘அயோத்தி’. உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த தீவிர மதப்பற்றாளரான பல்ராம் தமிழகத்தில் மனிதத்தை உணர்ந்து மாற்றம் பெறும் வகையிலான மதநல்லிணக்கத்தை பறைசாற்றிய இப்படம் முக்கியமான படைப்பு. காரணம் ‘ஆதிபுருஷ்’, ‘கேரளா ஸ்டோரி’ படங்களை இந்திய சினிமா உருவாக்கி வெளியிட்டுக்கொண்டிருக்கும் சூழலில் ‘அயோத்தி’க்கான வெற்றி தமிழ் சினிமாவின் கருத்தியலை உறுதிப்படுத்தியது.

விடுதலை: 
வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 1’ சாமானிய மக்கள் மீதான அதிகார அத்துமீறலை கேள்வி கேட்டது. ‘வாச்சாத்தி’ சம்பவத்தை கதைக்குள் பொருத்தியிருந்தது அழுத்தம் கூட்டியது. கனிமவளச் சுரண்டலின் வழியாக ஆதாயம் அடைய நினைக்கும் அதிகார வர்க்கம், பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டை ஆகியவற்றுக்கு எதிராக நிற்கும் மண்ணின் மக்கள், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போராளிக் குழுக்கள் என சமரசமற்ற திரைக்கதை மெச்சத்தக்கது.

ஆகஸ்ட் 16, 1947 மற்றும் யாத்திசை: 
இரண்டுமே அறிமுக இயக்குநர்களின் படங்கள். இரண்டுமே பீரியாடிக் படங்கள். பொன்குமாரின் ‘ஆகஸ்ட் 16, 1947’ சுதந்திரத்துக்கு அடுத்த நாளில் நிலவும் சம்பவத்தை சுவாரஸ்யத்துடன் கொடுக்க முயன்றது. தரணி ராசேந்திரனின் ‘யாத்திசை’யின் மொழியும், குறைந்த செலவில் படைக்கப்பட்ட பிரமாண்டமும் இந்த ஆண்டின் கவனம் கொண்ட படைப்பாக்கியது. அதீத பொருட்செலவில் எடுக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன் 2’வுக்கு இணையான படைப்பாக பாராட்டை பெற்றது ‘யாத்திசை’.

ஃபர்ஹானா: 
நெல்சன் வெங்கடேசனின் ‘ஃபர்ஹானா’ இஸ்லாமிய பெண் ஒருவரின் பொருளாதார சுதந்திரத்தின் தேவையையும், அதையொட்டிய தேவையில்லாத அச்சத்தை அந்தப் பெண் எதிர்கொண்டு வெளிவருவதையும் பதிவு செய்திருந்தது. சில ஸ்டிரியோடைப் காட்சிகள் இருந்தாலும் முயற்சி கவனிக்க வைத்தது.

குட் நைட்: 
விநாயக் சந்திரசேகரின் ‘குட்நைட்’ சிறு பட்ஜெட் படங்களுக்கான அடுத்தடுத்த வெற்றியை உறுதி செய்தது. பெரிதாக அடையாளப்படுத்தப்படாத குறட்டை பிரச்சினையையும், அதையொட்டிய நிகழ்வுகளையும் பதிவு செய்த இப்படம் இந்த ஆண்டில் அதிகமாக பேசப்பட்ட படங்களில் ஒன்று.

மாமன்னன் மற்றும் கழுவேத்தி மூர்க்கன்: 
சை.கவுதம் ராஜின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ மற்றும் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ இரண்டு படங்களும் தமிழ் சினிமாவில் பேசப்படாத அருந்ததியின மக்களின் வாழ்க்கையை பதிவு செய்தது முக்கியமானது. சாதிக்கெதிரான படங்களின் அடுத்த நகர்வாக இதைப்பார்க்கலாம்.

போர் தொழில்: 
விக்னேஷ்ராஜாவின் த்ரில்லர் கதை தேவையான விறுவிறுப்பை சுவாரஸ்யம் குறையாமல் பதிவு செய்திருந்தது. குடும்ப பிரச்சினைகளையும், அவை சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் படம் பதிவு செய்திருந்தது. 2023-ம் ஆண்டாவது கிறிஸ்துவர்களை எதிர்மறை கதாபாத்திரமாக சித்தரிக்கும் போக்கு மாறும் என எதிர்பார்த்த இடத்தில் ஏமாற்றம்.

தண்டட்டி: 
ஒரு தண்டட்டியின் வழியே கிராமத்து உறவுகளையும் சுயநல மனங்களையும் சமரசமற்ற யதார்த்தத்தோடு நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம் சங்கையா. நேர்த்தியான திரைக்கதை ஆக்கம் மூலம் சிறு படங்களுக்கான நம்பிக்கையை விதைத்தில் கவனிக்க வைத்த படம்.

மாவீரன்: 
எளிய மக்கள் அவர்கள் வாழ்விடங்களிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு தூக்கி எறியப்படுவதும், அவர்களுக்கு அரசு கொடுக்கும் மாற்று வீடுகளின் தரத்தையும் சூப்பர் ஹீரோ மாடல் கதையுடன் பேசிய மடோன் அஸ்வினின் ‘மாவீரன்’ தேவையான அரசியல் படைப்பு.

மார்க் ஆண்டனி: 
ஜாலியான டைம் ட்ராவல் திரைக்கதையால் ஆதிக் ரவிச்சந்திரன் ஸ்கோர் செய்திருந்தார். அதற்கு முக்கிய காரணம் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திர வடிவமைப்பும் ரகளையும்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: 
பழங்குடியின மக்கள் மீதான காவல் துறையின் சித்ரவதைகள், வன அழிப்பு, பெருநிறுவனங்களுக்கு ஆதரவான ஆட்சியாளர்களின் நிலைபாடு என்பதுடன் தமிழக அரசியலை நினைவூட்டிய காட்சிகளும், இறுதி 40 நிமிடங்களும் கவனத்துக்குரிய படைப்பாக மாற்றி இட்ஸ் மை பாய் ‘கார்த்திக் சுப்பராஜ்’ என பாராட்ட வைத்தது.

சித்தா: 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘பொம்மை நாயகி’ என்றால் இறுதியில் ‘சித்தா’. சிறார் பாலியல் கொடுமை என்ற சென்சிட்டிவான களத்தை, கச்சிதமாக கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. தவிர, சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி படத்தை மெருகேற்றியிருந்தார் இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார்.

கிடா: 
ரா.வெங்கட்டின் ‘கிடா’ தாத்தா - பேரன் இடையிலான உறவையும், நுகர்வுகலாசாரத்தின் தாக்கத்தையும் பதிவு செய்து ஃபீல்குட்டாக அமைந்தது.

பார்க்கிங்: 
ஒற்றை வரி கதைக்கருவை எடுத்து அதிலுள்ள சிக்கல்களை மனித உளவியல் காரணிகள் மூலம் அணுகியிருந்த ராம்குமார் பாலகிருஷ்ணனின் ‘பார்க்கிங்’ இந்த ஆண்டின் இறுதியை முழுமை செய்திருக்கிறது.

இவை தவிர, திருமண உறவுச்சிக்கலை பேசிய யுவராஜ் தயாளனின் ‘இறுகப்பற்று’, ஆன்லைன் டெலிவரி ஊழியர்களின் வாழ்வை பதிவு செய்த வசந்தபாலனின் ‘அநீதி’, உருவ கேலியையும், ஆபாச வசனங்களையும் தவிர்த்த சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பரவலான கவனத்தை ஈர்த்தன.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..