Rewind 2023: லியோ முதல் போர் தொழில் வரை - தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்!

Rewind 2023: லியோ முதல் போர் தொழில் வரை - தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்!
By: TeamParivu Posted On: December 21, 2023 View: 64


‘மாஸ்’ நடிகர்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி ‘கன்டென்ட்’ ரீதியில் வலுவான சில படங்களும் 2023-ல் வசூலைக் குவித்திருப்பது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள் குறித்து பார்ப்போம்.

லியோ: 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியான ‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், உலகம் முழுவதும் ரூ.620 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.341 கோடியை வசூலித்துள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என கூறப்படுகிறது.

ஜெயிலர்: 
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியானது ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினியின் மாஸ் காட்சிகளால் படம் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது. இதனால் படம் உலகம் முழுவதும் ரூ.610 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 2: 
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் பாகம் அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.350 கோடியை வசூலித்தது.

வாரிசு: 
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். தமன் இசையமைத்திருந்தார். சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், ராஷ்மிகா மந்தனா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சீரியல் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது என்ற விமர்சனங்கள் இருந்தபோதிலும் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை வசூலித்தது.

துணிவு: 
அஜித்தின் ‘துணிவு’ வங்கிகளின் அத்துமீறல்களை பேசியிருந்தது. படத்தின் மைய கதை வரவேற்பை பெற்றபோதிலும், அதைச்சுற்றி எழுதியிருந்த கமர்ஷியல் திரைக்கதை வலுசேர்க்கவில்லை. போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.

வாத்தி: 
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷின் ‘வாத்தி’ அரசுப்பள்ளிகளை அழித்தொழிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களைப் பற்றி பேசிய இப்படம் அதன் ஓவர் சென்டிமென்ட் எமோஷன்களால் தடுமாறியது. ஜி.வி.பிரகாஷின் இசை பலம் சேர்த்தது. சம்யுக்தா, சமுத்திரகனி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரூ.120 கோடி வசூலித்தது.

மார்க் ஆண்டனி: 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில், செல்வராகவன் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ அதன் ஜாலியான திரைக்கதையால் வரவேற்பை பெற்றது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரனின் எங்கேஜிங் திரைக்கதையால் படம் ரூ.110 வரை வசூலித்து விஷாலுக்கும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் வெற்றிப்படமாக அமைந்தது.

மாவீரன்: 
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் சிக்கல்களையும், அம்மக்களின் வலியையும் பேசியது. பாரத் ஷங்கர் இசையமைத்திருந்தார். அதிதி ஷங்கர், யோகிபாபு நடித்துள்ள இப்படம் ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் ரூ.90 கோடியை வசூலித்தது.

மாமன்னன்: 
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு நடித்த படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. மாரிசெல்வராஜ் ஹீரோயிசத்துக்குள் சிக்கிவிட்டதாக விமர்சனங்களும் எழுந்தன.அரசியலுக்குள் நிலவும் சாதிய முரண்பாடுகளை பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூலித்தது.

போர் தொழில்: 
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்த ‘போர் தொழில்’ த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஜூன் 9-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதன் எதிரொலியாக பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.50 கோடி வசூலை எட்டியது. அதேபோல, ‘குட் நைட்’, ‘டாடா’, ‘அயோத்தி’ படங்கள் அடுத்தடுத்து ரூ.50 கோடிக்குள்ளான வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.


  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..