தூத்துக்குடி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தூத்துக்குடி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்
By: TeamParivu Posted On: December 21, 2023 View: 28


தூத்துக்குடி: 
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய முதல்வர், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், வெள்ள நீரை அகற்றிட துரித 
நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, வெள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல், மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் டிச.19 அன்று பிரதமரை புதுடெல்லியில் சந்தித்து, தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி, இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காகவும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கோரிக்கை மனு அளித்தார்.

புதுடெல்லியிருந்து நேற்று (டிச.20) காலை சென்னை திரும்பிய தமிழக முதல்வர், சென்னை, எழிலகத்திலுள்ள, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு சென்று அங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுடனும், வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு கொண்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் வழங்கப்படுவது குறித்தும், வெள்ளம் சூழ்ந்து சென்றடைய முடியாத நிலையில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, உரிய அறிவுரைகளை வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நேரில் சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக இன்று (டிச.21) காலை தமிழக முதல்வர் தூத்துக்குடி சென்றடைந்தார். தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்தித்து, வெள்ள சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மறவன் மடம் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

டிசம்பர் 17-ம் தேதி அதிகனமழை பெய்ய தொடங்கியவுடன், 18-ம் தேதி முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மில்லர்புரம், பிரையன்ட் நகர், அண்ணா நகர், டீச்சர்ஸ் காலனி, ராஜீவ் நகர், சீலோன் காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்தில் சுமார் 600 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவும், மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அந்நிவாரண மையத்தில் நடத்தப்படும் மருத்துவ முகாமில் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வர், செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்துக்கு சென்று, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்து, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை, போர்வை, பாய், பிஸ்கட் மற்றும் ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, எட்டையபுரம் 3-வது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதல்வர் பார்வையிட்டு, வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், குறிஞ்சி நகர் போல்பேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களிடம் பாதிப்புகளின் விவரங்கள் குறித்து முதல்வர் கேட்டறிந்து, சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியினை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன்,வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பி. ஜோதி நிர்மலாசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி. லட்சுமிபதி, தூத்துக்குடி மாநாகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..