ஐபிஎல் வரலாற்றில் முதல் பழங்குடி வீரர் - ரூ.3.6 கோடிக்கு ஏலமான ராபின் மின்ஸ் யார்?

ஐபிஎல் வரலாற்றில் முதல் பழங்குடி வீரர் - ரூ.3.6 கோடிக்கு ஏலமான ராபின் மின்ஸ் யார்?
By: TeamParivu Posted On: December 21, 2023 View: 27


துபாய்
ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆஸி வீரர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு ரூ.24.75 கோடிக்கு ஏலம் விடப்பட்டார். இதில் மற்ற சுற்றுகளைவிட அறிமுகமில்லாத வீரர்களுக்கான சுற்று ஏலம் சுவாரஸ்யம் மிகுந்ததாக இருந்தது. ரூ.20 லட்சம் அடிப்படையில் விலையில் அறிமுகமான சில வீரர்கள் முன்னணி அணிகள் போட்டிபோட்டு கொண்டு கோடிகளை குவித்து வாங்க ஆர்வம் காட்டின. அப்படி வாங்கப்பட்டவர்களில் ஒருவர்தான் ராபின் மின்ஸ். 21 வயதான இவரை குஜராத் டைட்டன்ஸ் ரூ.3.6 கோடிக்கு வாங்கியது.

அடிப்படையில் விலையான ரூ.20 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதே அணிகள் ராபினை வாங்க முனைப்புக் காட்டின. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என அணிகள் போட்டியிட, கோடிகள் எகிறியது. இறுதியில் ரூ. 3.6 கோடிக்கு அவரை வசப்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ். இந்த விலைக்கு ஏலம் விடப்பட்டார் என்பதை விட ஐபிஎல் வரலாற்றில் இத்தொடரில் கால்பதிக்கும் முதல் பழங்குடி கிரிக்கெட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ராபின் மின்ஸ். ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்தவரான தற்போது ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சியில் உள்ள நம்கும் பகுதியில் வசித்து வருகிறார்.

இவரின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தற்போது ராஞ்சி விமான நிலையத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராபின் மின்ஸ் ஜார்க்கண்டில் பிறந்திருந்தாலும், இதுவரை ஜார்க்கண்ட் சீனியர் அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ரஞ்சி கோப்பையிலும் அம்மாநிலத்தை இதுவரை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றாலும், ஜார்க்கண்டின் U19 மற்றும் U25 அணிகளில் அங்கம் வகித்துள்ளார்.

தோனியின் தீவிர ரசிகர் இவர். எம்எஸ் தோனியின் சிறுவயது பயிற்சியாளரான சஞ்சல் பட்டாச்சார்யாவே ராபினுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் U19 போட்டிகளில் விளையாடும்போது மும்பை இந்தியன்ஸ் அணி ராபினை கவனித்து, அவரின் திறமையை உணர்ந்து அவருக்கு இங்கிலாந்தில் சிறப்பு பயிற்சி அளித்த போதே கவனிக்கப்பட்ட வீரரானார்.

ஜார்க்கண்ட் U19 அணிக்காக ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று சதங்களை அடித்த ராபின், கடந்த ஆண்டு கர்னல் சி கே நாயுடு டிராபியிலும் விளையாடினார். மேலும் இந்த சீசனில் சையத் முஷ்டாக் அலி டிராபி அணியில் இடம்பெற்றார். எனினும் டைபாய்டு காய்ச்சல் காரணமாக துரதிர்ஷ்டவசமாக அவரால் முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒடிசாவில் நடந்த ஒரு T20 போட்டியில் அவர் 35 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

துபாயில் இந்த மினி ஏலத்துக்கு முன்னதாக நடந்த ஒத்திகை ஏலத்தில் ராபின் மின்ஸை புகழ்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அவரை 'இடது கை கீரன் பொல்லார்ட்' என்று வர்ணித்தார். உத்தப்பாவின் கூற்றுப்போலவே, பொல்லார்ட்டை அட்டாக்கிங் ஸ்டைல் பேட்ஸ்மேன் ராபின் மின்ஸ். இதனால் தான் அவருக்கு மினி ஏலத்தில் அதிகமான மவுசு இருந்தது

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..