சென்னை: இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, கிறிஸ்தவ மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.முதல்வர் ஸ்டாலின்: 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், உபதேசியார் நல வாரியம், சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு, கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவிச் சங்கம் கூடுதலாக துவங்கிட நிதி ஒதுக்கீடு, ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்வு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிகக் கடன்கள் என திராவிட மாடல் அரசின் சார்பில் கிறித்தவ மக்களுக்காக எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் மணிமகுடமாக, கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமெனச் சட்டப்பேரவையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன். அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் இந்த அரசின் சார்பில் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ராமதாஸ்: சக மனிதர்களை மதிப்பதற்கு கற்றுக் கொடுத்த மகான் இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயேசுபிரான் விரும்பியதைப் போல, இஸ்ரேல் & பாலஸ்தீனத்தில் தொடங்கி உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்; உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம்.