கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்

கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்
By: TeamParivu Posted On: December 30, 2023 View: 66

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டு, கண்ணீர் மல்க விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71), உடல்நலக் குறைவால் சென்னை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 6.10 மணிக்கு காலமானார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திலும், பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திலும் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரைசென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, மு.பெ.சாமிநாதன், ரகுபதி, உதயநிதி ஸ்டாலின்,மா.சுப்பிரமணியன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் ரஜினி, கமல், பாக்யராஜ், குஷ்பு உள்ளிட்ட திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்டு வந்திருந்த தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் நீண்ட வரிசையில் வந்து விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
பிற்பகல் 2.45 மணி அளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு, கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலம் புறப்பட்டது. முத்துசாமி பாலம் வழியாக சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இறுதி ஊர்வலம் சென்றது. தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் கட்சிக் கொடியைஏந்தியபடி ஊர்வலத்தில் கண்ணீருடன் பங்கேற்றனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..