தாயின் அரவணைப்பில் உறங்கும் குட்டியானை - பொள்ளாச்சி வைரல் புகைப்பட பின்புலம்

தாயின் அரவணைப்பில் உறங்கும் குட்டியானை - பொள்ளாச்சி வைரல் புகைப்பட பின்புலம்
By: TeamParivu Posted On: January 04, 2024 View: 62

வால்பாறை: பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக புலி, சிறுத்தை, கரடி மற்றும் யானைகள் என வன விலங்குகள் அதிக அளவில் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி எஸ்டேட் பகுதிகளில் உலா வருகின்றன.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வால்பாறை அடுத்துள்ள மானாம்பள்ளி வனச் சரகத்துக்குட்பட்ட பன்னிமேடு பகுதியில் தாயை விட்டு பிரிந்த யானைக் குட்டி ஒன்று தவித்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்கள் யானைக் குட்டியை பத்திரமாக மீட்டனர்.
வனத்துறையினரின் அரவணைப்பில் வைத்து உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டு குட்டி யானை பாதுகாக்கப்பட்டது. நான்கு மாத வயதுடைய இந்த குட்டி யானையின் தாய் உள்ள யானைக்கூட்டத்தை 5 மணி நேரம் ட்ரோன் மூலம் வனத்துறையினர் தேடி கண்டறிந்தனர். தாய் யானை இருக்கும் இடத்துக்கு குட்டியானை வாகனத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு குட்டியை தாய் யானையுடன் வனத்துறையினர் சேர்த்தனர். மேலும் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு யானைக் கூட்டத்தின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், தனியார் தேயிலை எஸ்டேட் பகுதியில் தாய் யானையின் அரவணைப்பில், குட்டி யானை படுத்து உறங்கும் புகைப் படத்தை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராம சுப்பிரமணியம் உத்தரவின் பேரில் தொடர்ந்து இந்த குட்டி யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..