இயற்கை ரப்பர் விலை வீழ்ச்சியால் 6 மாதங்களில் 120 ஏக்கர் மரங்கள் அழிப்பு: விவசாயிகள், தொழிலாளர்கள் கடும் பாதிப்பு

இயற்கை ரப்பர் விலை வீழ்ச்சியால் 6 மாதங்களில் 120 ஏக்கர் மரங்கள் அழிப்பு: விவசாயிகள், தொழிலாளர்கள் கடும் பாதிப்பு
By: TeamParivu Posted On: January 05, 2024 View: 42

நாகர்கோவில்: இயற்கை ரப்பர் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 120 ஏக்கரில் ரப்பர் மரங்கள் அழிக்கட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய பணப்பயிர்களாக தென்னை, ரப்பர் ஆகியவை உள்ளன. மலையோரப் பகுதிகளில் ரப்பர் விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு 3 மாதங்களுக்கு மேலாக பெய்த தொடர் மழையால் ரப்பர் பால்வெட்டும் தொழில் முடங்கியது.
ரப்பர் பால் விலையும் கிலோ ரூ.100 முதல் 130 ஆக கடும் சரிவை சந்தித்தது. இதனால் பால் வெட்டும் கூலி மற்றும் ரப்பர் மரத்தை பராமரிக்கும் செலவுக்கு கூட வருவாய் கிடைக்காமல் ரப்பர் விவசாயிகள் சிரமம் அடைந்தனர். பல ஆயிரம் பேர் வாழ்வாதாரம் இழந்தனர். திருவட்டாறு, குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை, சிற்றாறு, களியல், கீரிப்பாறை உட்பட பல பகுதிகளில் ரப்பர் தோட்டங்களை அழித்துவிட்டு, வாழை உட்பட மாற்றுப்பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களாக மழை இல்லாத நிலையில், குமரி மாவட்டத்தில் தற்போதுதான் ரப்பர் பால்வெட்டும் தொழில் தொடங்கியுள்ளது. இயற்கை ரப்பர் கிலோ ரூ.137-க்கு கொள்முதல் செய்யப்பட்டாலும், போதிய லாபம் கிடைக்கவில்லை. இதேநிலை நீடித்தால் ரப்பர் விவசாயம் அழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
குலசேகரம் இட்டகவேலியைச் சேர்ந்த ரப்பர் விவசாயி வில்சன் கூறியதாவது: இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ ரப்பர் பால் ரூ.250 வரை விற்பனையானது. தற்போது பாதி விலை கூட கிடைப்பதில்லை.
தற்போதைய செலவினத்தை கணக்கிட்டால் ஒரு கிலோ ரப்பர் ரூ.300 வரை விற்பனையானால் மட்டுமே ரப்பர் மரங்களை பராமரிக்கவும், தொழிலாளர் கூலிக்கும் கட்டுப்படியாகும். இதனால் ரப்பர் தோட்டம் வைத்திருக்கும் பலரும் தற்போது ரப்பர் பால் வெட்டுவதை நிறுத்திவிட்டனர்.
ரப்பர் வாரியம் மற்றும் அரசு சார்பில் எந்த உதவியும் செய்யவில்லை. களியல், பேச்சிப்பாறை, குலசேகரம் போன்ற பகுதிகளில் கடந்த 6 மாதங்களில், 120 ஏக்கருக்கு மேல் ரப்பர் மரங்கள் அழிக்கப்பட்டு மாற்று விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.
ரப்பர் மரங்கள் மரப் பொருட்கள் தயாரிக்க அதிகளவில் வாங்கப்படுகிறது. டன்னுக்கு ரூ.7,000 வரை விலை கிடைக்கிறது. இதனால் பலரும் ரப்பர் மரங்களை வெட்டி விற்று வருகின்றனர். அந்த இடத்தில் புதிதாக ரப்பர் மரங்களை நடுகின்றனர். 8 ஆண்டுகளில் அவை பால்வெட்டும் பருவம் வரும்போது நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரப்பர் விவசாயிகள் இதைச் செய்கின்றனர்.
ரப்பர் விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் இயற்கை ரப்பர் இறக்குமதிக்கு தடை விதிப்பதுடன், உள்நாட்டு ரப்பருக்கான வரிகளை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..