பெங்களூருவில் ஜன.7-ல் ஓவியச் சந்தை தொடக்கம்: 2,200+ ஓவியர்கள் பங்கேற்பு

பெங்களூருவில் ஜன.7-ல் ஓவியச் சந்தை தொடக்கம்: 2,200+ ஓவியர்கள் பங்கேற்பு
By: TeamParivu Posted On: January 05, 2024 View: 47

பெங்களூரு: கர்நாடக சித்ரகலா பரிஷத்தின் சார்பாக பெங்களூருவில் ஜனவரி 7-ம் தேதி ஓவியச் சந்தை நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 2,271 ஓவியர்கள் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சித்ரகலா பரிஷத் தலைவர் பி.எல்.சங்கர் கூறியது: “மக்களிடையே ஓவியக் கலையை ஊக்குவிக்கும் நோக்கில் சித்ரகலா பரிஷத் சார்பாக கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஓவியச் சந்தை நடத்தப்படுகிறது. கர்நாடகா மட்டுமில்லாமல் நாடு முழுவதும் வாழும் ஓவிய கலை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஓவிய சந்தை இந்த ஆண்டு வரும் ஜனவரி 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் நடைபெறுகிறது.
குமார குருபா சாலையில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த ஓவியச் சந்தையை கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார். இந்த ஓவியச் சந்தையில் கர்நாடகா மட்டுமில்லாமல் தமிழகம், ஆந்திரா, கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2,271 ஓவியர்கள் கலந்துகொள்கிறார்கள். 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
குமாரகுருபா சாலையின் இரு புறங்களிலும் வரிசையாக பொதுமக்களின் பார்வைக்காக ஓவியங்கள் வைக்கப்பட்டும். இதில் பதிவு செய்யாத‌ ஓவியர்களும் கலந்துகொண்டு, தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்” என்று பி.எல்.சங்கர் தெரிவித்தார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..