டேவிட் வார்னர் ஓய்வு - ஆஸி. டெஸ்ட் அணியில் தொடக்க வீரர் ஆகிறார் ஸ்டீவ் ஸ்மித்?

டேவிட் வார்னர் ஓய்வு - ஆஸி. டெஸ்ட் அணியில் தொடக்க வீரர் ஆகிறார் ஸ்டீவ் ஸ்மித்?
By: TeamParivu Posted On: January 06, 2024 View: 36

ஆஸ்திரேலிய தொடக்க இடது கை வீரர் டேவிட் வார்னர், சிட்னியில் ஆஸ்திரேலியாவின் 3-0 ஒயிட்வாஷ் டெஸ்ட் தொடர் வெற்றியோடு தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு இதுபோன்ற இன்னொரு டெஸ்ட் போட்டிகள் உட்பட 3 வடிவ போட்டிகளிலும் நல்ல ஓப்பனர் கிடைப்பது அரிதிலும் அரிது. இதனிடையே, "இனி வார்னருக்குப் பதில் தான் தொடக்க வீரராக இறங்குவதை எதிர்நோக்குகிறேன். டெஸ்ட் போட்டிகளை தொடங்க நான் விருப்பமாயிருக்கிறேன்" என்று ஆஸ்திரேலியாவின் மற்றொரு லெஜண்ட் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் நடந்த 5-ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தன் 2-வது இன்னிங்ஸில் 115 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 130 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை ஆஸ்திரேலியா 25.5 ஒவர்களில் 130/2 என்று எட்டி அபார வெற்றி பெற்று 3-0 என்று ஒயிட் வாஷ் தோல்வியை பாகிஸ்தானுக்குப் பரிசாக அளித்தது. டேவிட் வார்னர் தன் கடைசி டெஸ்ட் இன்னிங்சில் 57 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடக்கம். கடைசி வரை நின்று வெற்றி ரன்களை அடிக்க வேண்டும் என்ற அவரது முயற்சி கைகூடவில்லை.
119 ரன்கள் இருந்த போது சாஜித் கான் பந்தில் எல்.பி.ஆனார். லபுஷேன் 62 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆட்ட நாயகனாக அட்டகாச ஆல்ரவுண்ட் ஆட்டம் ஆடிய பாகிஸ்தான் வீரர் அமீர் ஜமாலும், தொடர் நாயகனாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸும் தேர்வு செய்யப்பட்டனர்.
டேவிட் வார்னர் மொத்தம் 112 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8,786 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 44.59, 26 சதங்கள், 37 அரைசதங்கள், 91 கேட்ச்களைப் பிடித்துள்ளார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த தொடரில் எடுத்த 335 நாட் அவுட். டெஸ்ட் ஸ்ட்ரைக் ரேட் 70.19 என அபாரமாக உள்ளது. இதேபோல், 161 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 6,932 ரன்களை 97.26 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 22 சதங்கள், 33 அரைசதங்கள், 130 சிக்சர்கள், 71 கேட்ச்கள். 99 டி20 போட்டிகளில் 2894 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 100. இதில் 24 அரைசதங்கள், ஸ்ட்ரைக் ரேட் 141.
மொத்தமாக 30,000+ ரன்களை எடுத்துள்ளார். அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 70 சதங்கள். டாப் லெஜண்ட் என்பதை தன்னுடைய இந்த 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் நிரூபித்துள்ளார் வார்னர். இந்நிலையில் தொடக்க வீரராக அவரை ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியிலும் ஒருநாள் அணியிலும் இழந்துள்ளது. அவருக்கு மாற்று வீரரைக் கண்டுப்பிடிப்பது அத்தனை சுலபமல்ல. அதாவது கவாஸ்கருக்குப் பிறகு கவாஸ்கர் மாதிரியே ஒரு தொடக்க வீரர் கிடைக்கவில்லை அல்லவா அது போல்தான்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவின் மற்றொரு லெஜண்ட் ஸ்டீவ் ஸ்மித் தான் தொடக்க வீரராக இறங்கி வார்னரின் இடத்தை நிரப்பத் தயார் என்று கூறியிருக்கிறார். ஸ்மித் அளித்துள்ள பேட்டியில் டெஸ்ட் தொடக்க வீரராக தன்னை உயர்த்திக் கொள்ளும் விருப்பத்தை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். "உண்மையில் தொடக்க வீரராக விளையாட மகிழ்ச்சியாக உள்ளேன். நான் தொடக்க வீரராக இறங்குவதில் முனைப்பாக இருக்கிறேன். நிச்சயம் தேர்வுக்குழுவினர் என்னிடம் இது பற்றி பேசுவார்கள் என்று நம்புகிறேன், ஆம்! நான் தொடக்கத்தில் இறங்க ஆர்வமாக இருக்கிறேன்.” என்கிறார் ஸ்மித்.
ஆனால் கேமரூன் கிரீன் தொடக்க வீரர் பட்டியலில் இருக்கிறார். இவரோடு மார்கஸ் ஹாரிஸ் , கேமரூன் பேங்கிராப்ட், மேட் ரென்ஷா ஆகியோரும் போட்டியில் உள்ளனர். இப்போது ஸ்மித் தன்னை அந்த இடத்திற்கு விருப்பம் தெரிவித்திருப்பதால் அது பரிசீலிக்கப்படலாம் என்றே தெரிகிறது. ஸ்மித் 4ம் நிலையில் 19 சதங்களுடன் 61.46 என்ற சராசரி வைத்துள்ளார், முன்னதாக 3ம் நிலையில் அவரது சராசரி 67.07 ஆகும். இந்நிலையில் அவரை தொடக்க வீரராக இறக்குவார்களா என்பது ஐயமே. ஜனவரி 17ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடங்கவிருப்பதால் அதற்குள் இதில் ஒரு முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..