வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
By: TeamParivu Posted On: January 06, 2024 View: 53

ஆண்டிபட்டி: வைகை அணையின் முழுக் கொள்ளளவான 71 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் மாத இறுதியில் 70.5 அடியை எட்டியது (மொத்த உயரம் 71 அடி). இதனையடுத்து அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது.
பொதுவாக, நீர் வெளியேற்ற காலங்களில் அணையின் நீர்மட்டம் குறைவது வழக்கம். ஆனால், இம்முறை சீரான நீர்வரத்து காரணமாக 69 அடியிலே நீர்மட்டம் ஏற்றம் இறக்கமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து நீர்மட்டத்தை 71 அடி வரை உயர்த்த நீர்வளத் துறையினர் முடிவு செய்தனர். இதற்காக தொடர்ந்து நீர் தேக்கப்பட்டதால் இன்று அதிகாலை 4.45 மணிக்கு அணையின் முழுக் கொள்ளளவான 71 அடியை எட்டியது.
இதனையடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றத்துக்கான அபாய சங்கு மூன்று முறை ஒலிக்கப்பட்டது. மேலும், அணைக்கு வந்த 3 ஆயிரத்து 106 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் வரும் நீரை அப்படியே வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றனர். முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தளவில் நீர்மட்டம் 136.90 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 823 கனஅடியாகவும், நீர்வெளியேற்றம் 511 கனஅடியாகவும் உள்ளது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..