திரை விமர்சனம்: ப்ளூ ஸ்டார்

திரை விமர்சனம்: ப்ளூ ஸ்டார்
By: TeamParivu Posted On: January 28, 2024 View: 45

அரக்கோணம் பகுதியில் ரஞ்சித்தும் (அசோக்செல்வன்), ராஜேஷும் (சாந்தனு) சிறந்த கிரிக்கெட் வீரர்கள். இருவரும் முறையே, ப்ளூ ஸ்டார், ஆல்ஃபா அணிகளுக்கு கேப்டன்களாக இருக்கிறார்கள். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இரு அணிகளுக்கும் பகை நிலவுகிறது. விளையாட இருக்கும் ஒரே ஆடுகளத்தில் இடம்பிடிப்பது தொடர்பான தகராறில் இருந்து இரு அணிகளும் மீண்டும் ஒரு போட்டியில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகிறது. எம்.சி.எஃப் என்னும் தொழில்முறை கிரிக்கெட் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த வீரர்கள் சிலரை பணம் கொடுத்து ஆடவைத்து அந்தப் போட்டியில் தனது அணியை வெற்றிபெறச் செய்யும்ராஜேஷ், பிறகு உயர்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தஎம்.சி.எஃப் வீரர்களாலும் பயிற்சியாளராலும் அவமானப்படுத்தப் படுகிறார். இதையடுத்து நடைபெறும் பலஅணிகளுக்கிடையிலான போட்டிஒன்றில் எம்.சி.எஃப் அணியை வீழ்த்த ப்ளூ ஸ்டார், ஆல்ஃபா 2 அணிகளில் இருந்தும் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து புதிய அணியாகக் களமிறங்குகிறார்கள். அதில்கோப்பையை வென்றது யார்? இந்தப் பயணத்தில் ரஞ்சித், ராஜேஷ் மற்றும் அவர்களின் அணிவீரர்களுக்கு என்னவாகிறது? இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான பகை என்னவாகிறது? என்பதைச் சொல்கிறது மீதிப் படம்.
உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான பொழுதுபோக்கு அம்சங்களையும் விளையாட்டைச் சுற்றி இயங்கும் தீவிரமான அரசியல் பிரச்சினைகளையும் இணைத்து தரமான திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.ஜெயகுமார். ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களும் ஆதிக்க சமூக இளைஞர்களும் கிரிக்கெட் உணர்வால் ஒன்றுபடுவதை தமிழ்பிரபாவுடன் இணைந்து சுவாரஸியமான திரைக்கதையாக்கி இருக்கிறார். கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் மட்டுமல்லாமல் சமூக, அரசியல் விவகாரங்களும் பேசப்பட்டிருக்கின்றன. யாரையும் எதிரியாகவோ குற்றவாளியாகவோ சித்தரிக்காமல் எல்லோரையும் இயல்புடன் சித்தரித்திருப்பது முதிர்ச்சியான அணுகுமுறை. கிரிக்கெட், காதல், நகைச்சுவை என வெகுஜனப் படத்துக்குத் தேவையான அம்சங்களும் சரிவிகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மது, வன்முறை, குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து இளைஞர்களை மீட்பதற்கு விளையாட்டு அவசியம் என்றக் கருத்தை வலியுறுத்தியிருப்பதும் முக்கியமானது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான இம்மானுவேல் (பக்ஸ்) சாதிய மோதலால் காலை இழந்தாலும் அடுத்த தலைமுறை இளைஞர்களின் ஒற்றுமைக்காக கிரிக்கெட்டை கருவியாகப் பயன்படுத்துவது சிறப்பான யோசனை. நாயகி ஆனந்தி (கீர்த்தி பாண்டியன்) காதலியாக மட்டுமல்லாமல் சரியான அறிவுரைகளை வழங்குபவராகவும் கிரிக்கெட் நுணுக்கங்கள் தெரிந்தவராகவும் சித்தரிக்கப் பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் கிரிக்கெட் களத்துக்குள் அனுமதிக்கப்படாத பெண்களின் ஏக்கமும் சரியான வகையில் பதிவாகியுள்ளது.
அசாத்திய திறமைவாய்ந்த கிரிக்கெட் வீரரான புல்லட் பாபு (சஜு நவோதயா), ரஞ்சித்தின் தம்பி சாம் (பிருத்விராஜன்), திறமையான கிரிக்கெட் வீரராக இருந்தாலும் சாதி ஆதிக்க உணர்விலிருந்து விடுபட முடியாத வெங்கடேஷ் என சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் கவனம் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் ஃபார்முலாவை ஒட்டிய காட்சி அமைப்புகள், எதிர்பார்த்த முடிவு ஆகியவை இதிலும் உண்டு. குறிப்பாக இரண்டாம் பாதி தொடக்கப் பகுதியில் சற்று தொய்வடைகிறது.
அசோக் செல்வன், சாந்தனு இருவரும் நிஜத்திலும் கிரிக்கெட் வீரர்கள் என்பதால் கதாபாத்திரத்துக்குச் சரியான தேர்வு. நடிப்பாலும் மனதில் பதிகிறார்கள். பக்ஸ், பிருதிவிராஜன், கீர்த்தி பாண்டியன், நாயகனின் அம்மா லிஸி ஆண்டனி, அப்பாஇளங்கோ குமரவேல் என துணை நடிகர்கள் ரசிக்க வைக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள், பின்னணி இசை சிறப்பு. தமிழ்.அ.அழகனின் ஒளிப்பதிவு அரக்கோணத்தின் செம்மண் புழுதியை உணர வைக்கிறது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..