ஆளுநரின் வன்மம்… மத நல்லிணக்க உறுதிமொழி.. தமிழக முதல்வரின் முக்கிய அறிக்கை.!

ஆளுநரின் வன்மம்… மத நல்லிணக்க உறுதிமொழி.. தமிழக முதல்வரின் முக்கிய அறிக்கை.!
By: TeamParivu Posted On: January 29, 2024 View: 44


மகாத்மா காந்தியின் நினைவு நாள் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் அறிக்கை வாயிலாக கூறுகையில், “என் மதத்தின் மீது சூளுரைத்து கூறுகிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயங்க மாட்டேன். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.” என்று நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்திபடிகள். தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதே நேரத்தில் மற்ற அனைத்து மத உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்தவர் காந்தியடிகள்.

ஒற்றை மத தேசியவாதத்தை அவர் எப்போதும் ஏற்கவில்லை. அதனாலேயே அவர் மதவெறிக்கு பலியாகினார். 75 ஆண்டுகள் ஆன பிறகும் அண்ணல் காந்தியடிகள் மீதான கோபம் வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காந்தியை வலதுசாரி சக்திகள் இழிவு படுத்துகிறது.
காந்தியால் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பது வன்மம் நிறைந்த கருத்தாகும்.

தேசத்தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளை, பொய்களாலும் அவதூறுகளும் கொச்சைப்படுத்தும் காலமாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர் கொள்கைகளை மட்டுமல்ல அவரையே தற்போது இழிவுபடுத்தி வருகிறார்கள். அதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள், மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் நாளை நாடு முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. குறிப்பாக தமிழகத்திற்கு இந்த கடமை இருக்கிறது. எனவே ஜனவரி 30ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜனவரி 30 ஆம் தேதி மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை திமுகவினர் ஏற்று நடத்த வேண்டும். அதில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளை பங்கேற்க செய்ய வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டின் பண்பாட்டை எல்லோருக்கும் எல்லாம் என்ற தமிழகத்தை மாண்பையும் இந்திய ஒன்றியத்துக்கு வெளிப்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி சில நாட்களுக்கு முன்னர் ஒரு அரசு விழாவில் பேசுகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ஆரம்பித்த இந்திய ராணுவ படையினால் மட்டுமே ஆங்கிலேயர்கள் விரைவாக நாட்டை விட்டு வெளியேறினார். அவரைத்தான் தேசத்தந்தை என்று அழைக்க வேண்டும் என்று கூறியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..