சத்யா: சண்டைக்காட்சியில் கமலை மடக்கிய போலீஸ்

சத்யா: சண்டைக்காட்சியில் கமலை மடக்கிய போலீஸ்
By: TeamParivu Posted On: January 29, 2024 View: 47

வேலை இல்லாத விரக்தி இளைஞனின் இயலாமையை சாதகமாக்கி காரியம் சாதிக்கும் அரசியல்வாதிக்கும் அதனால் பாதிக்கப்படும் கோபக்கார இளைஞனுக்குமான மோதலை ஆவேசமாக சொன்ன படம் ‘சத்யா’.
இந்தியில் சன்னி தியோல், டிம்பிள் கபாடியா நடித்து 1985-ல் வெளியான படம், ‘அர்ஜுன்’. ஜாவேத் அக்தரின் ஆக்ரோஷமான கதைக்கு அசத்தலாக உயிர்கொடுத்திருந்தார் இயக்குநர் ராகுல் ரவைல். இந்தியில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம்தான் தமிழில் ‘சத்யா’வானது. தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் கமல்ஹாசனே தயாரித்தார். கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநராக அறிமுகமான படம் இதுதான்.
இந்தியில், தாடி மீசை இல்லாத சன்னி தியோல் ஆக்‌ஷனில் மிரட்டியிருப்பார். ஆனால், தமிழில், ஒட்ட வெட்டிய தலைமுடி, லேசான தாடி, கழுத்தில் கயிறு, கையில் காப்பு, மடித்துவிடப்பட்ட அரைக்கை சட்டை என தனது லுக்கை மாற்றியிருந்தார் கமல். இந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு இந்த லுக் இளைஞர்களிடையே பிரபலமானது.
கமலுக்கு ஜோடியாக அமலா, மலையாளப் பெண்ணாக நடித்திருந்தார். நாசர், ராஜேஷ், கிட்டி, ஜனகராஜ், வடிவுக்கரசி, டிகேஎஸ் நடராஜன், ஆர்.எஸ்.சிவாஜி, ஜி.எம்.சுந்தர், கவிஞர் வாலி, டெல்லி கணேஷ் என பலர் நடித்தார்கள். கிட்டி, அரசியல்வாதியாக மிரட்டியிருப்பார். கமலின் தந்தையாக மலையாள நடிகர் பகதூர் நடித்திருந்தார். சண்டைக் காட்சிகளை விக்ரம் தர்மா அமைத்தார். அவருக்கு இது 2-வது படம்.
பொதுமக்கள் கூடியிருக்கும் பஜாரில் சண்டைக்காட்சி ஒன்றை அந்தப் பகுதியினருக்குத் தெரியாமலேயே ‘கேண்டிட்’ முறையில் எடுத்திருப்பார்கள் . முன்பே போலீஸிடம் அனுமதி வாங்கி படமாக்கப்பட்டது காட்சி. கமல், கார் கண்ணாடிகளை உடைப்பதைப் பார்த்து அந்தப் பகுதியினர் அதிர்ச்சி அடைந்து ஓட, விஷயம் தெரியாமல் புதிதாக வந்த போலீஸ்காரர் ஒருவர், கமலைப் பிடித்து மடக்கிவிட்டார். பிறகு படப்பிடிப்பு என்று சொன்ன பிறகு விட்டிருக்கிறார். மாடி, கார், லாரி என பல இடங்களில் கேமராவை வைத்து எடுக்கப்பட்ட அந்தச் சண்டைக் காட்சி அப்போது வரவேற்பைப் பெற்றது. எஸ்.எம்.அன்வர் ஒளிப்பதிவு செய்தார். இளையராஜாவின் இசையில், வாலி பாடல்களை எழுதியிருந்தார். ‘போட்டா படியுது படியுது’, ‘நகருநகரு’, ‘இங்கேயும் அங்கேயும்’, ‘ஏலே தமிழா’, ‘வளையோசை கலகலவென’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. ‘வளையோசை கலகலவென’ பாடலுக்கான ட்யூனை ‘ஹவ் டு நேம் இட்’ ஆல்பத்துக்காக அமைத்திருந்தார் இளையராஜா. ஆனால் அதை ரெக்கார்டு செய்யவில்லை. இதுபற்றி இளையராஜா, கமலிடம் சொல்ல, அவர் அதையே பாடலாக்கச் சொன்னார். அப்படி என்றால் இதை லதாமங்கேஷ்கர்தான் பாட வேண்டும் என்றார் இளையராஜா. சரி என்று அவரையே பாட வரவழைத்தார் கமல். அப்படி உருவானதுதான் அந்தப் பாடல்.
1987-ம் ஆண்டு டிச. 24-ம் தேதி எம்ஜிஆர் மரணமடைந்தார். இந்தப் படத்தை, எம்ஜிஆருக்கு சமர்ப்பணம் செய்திருந்தார்கள். 1988-ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது இந்தப் படம்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..