சிவராஜ் குமாருடன் கைகோக்கும் ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ பட இயக்குநர்!

சிவராஜ் குமாருடன் கைகோக்கும் ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ பட இயக்குநர்!
By: TeamParivu Posted On: February 03, 2024 View: 31

கன்னடத்தில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டடித்த ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ (Sapta Saagaradaache Ello) பட வரிசையின் இயக்குநர், சிவராஜ் குமாருடன் புதிய படம் ஒன்றுக்காக இணைகிறார்.
ஹேமந்த் ராவ் இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி, ருக்மணி வசந்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான கன்னட படம் ‘Sapta Sagaradaache Ello - Side A’. சரண் ராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் அச்யுத் குமார், பவித்ரா லோகேஷ், அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெளியானதை விட, ஓடிடி வெளியீட்டுக்குப் பின் பலதரப்பட்ட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
காதலை மையமாக கொண்டு உருவான இப்படத்தின் ‘சைட் ஏ’ எனப்படும் முதல் பாகம் தான் இது. இதன் இரண்டாம் பாகம் அக்டோபரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதன்படி படம் நவம்பரில் வெளியானது. வரவேற்பின் காரணமாக தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
இந்நிலையில், இப்படங்களின் இயக்குநர் ஹேமந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் சிவராஜ் குமார் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை வைஷாக் கவுடா தயாரிக்கிறார். இது தொடர்பாக இயக்குநர் ஹேமந்த் ராவ் கூறுகையில், “ஒரு நடிகராக சிவராஜ் குமாரின் அனுபவம் மிகப் பெரியது. அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
ஓர் இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு. எனது 5-வது படத்தில் லெஜண்ட் சிவராஜ் குமாருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையாக உள்ளது. நான் எப்போதுமே ஒவ்வொரு படத்தையும் என்னுடைய முதல் மற்றும் கடைசிப் படம் போல நினைத்தே பணியாற்றிவருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..