எனக்குள்ளும் ஒரு காமெடியன்: நிழல்கள் ரவி பேட்டி

எனக்குள்ளும் ஒரு காமெடியன்: நிழல்கள் ரவி பேட்டி
By: TeamParivu Posted On: February 14, 2024 View: 23

ஹீரோ, வில்லன், குணசித்திர வேடங்களில் பார்த்துப் பழகிய ‘நிழல்கள்’ ரவியை, காமெடிக்கு திருப்பியிருக்கிறது, சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’! அந்தப் படத்தில் மேஜர் சந்திரகாந்த் என்ற, கொஞ்சம் ‘ஹாஃப் மைண்ட்’ கேரக்டரில், ரசனையாக ரகளை செய்திருக்கிறார் அம்சமாக. அவர் சீரியஸாக நடித்தாலும் அடங்காமல் வரும் சிரிப்பில் மொத்த தியேட்டரும் குலுங்கிக் கிடக்கிறது. அதுவும் அந்த கண்ணிவெடி காமெடி, அவரின் தெளிவான தமிழ் உச்சரிப்பு போலவே, அத்தனை சுகம்!
“நிறைய படங்கள்ல நடிச்சுட்டேன். எனக்குள்ள ஒரு காமெடியன் இருக்கிறாங்கறதை இயக்குநர் கார்த்திக் யோகிதான் கண்டுபிடிச்சிருக்கார்னு நினைக்கிறேன். அவர் இயக்கிய ‘டிக்கிலோனா’ படத்துல சின்ன கேரக்டர் பண்ணினேன். அதுலஅவர் நட்பு கிடைச்சது. ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்துக்காகக் கூப்பிட்டார். ‘ இதுல இப்படியொரு கேரக்டர் இருக்கு, சந்தானம் சார்தான் ஹீரோவா பண்றார்’னு சொன்னார். நீங்க படம் முழுவதும் வர்ற கேரக்டர்னும் சொன்னார். கதைக் கேட்கும்போதே, இது எனக்கு வித்தியாசமான கேரக்டர்தான்னு புரிஞ்சுது. உடனே ஒகே சொல்லிட்டேன். இப்ப , படம் ஹிட்டாகி ஏகப்பட்ட பாராட்டுகளைத் தந்திருக்கு. அதுக்கு இயக்குநர் கார்த்திக் யோகிக்குத்தான் நன்றி சொல்லணும்”- உற்சாகமாகிறார், நிழல்கள் ரவி.
காமெடி பண்றது ரொம்ப கஷ்டம்னு சொல்வாங்களே..?
உண்மைதான். அதை நானும் ஏத்துக்கறேன். மற்றவங்களை சிரிக்க வைக்கிறது அவ்வளவு ஈசியான விஷயமில்லை. இந்தப் படத்தோட ஷூட்டிங் போகும் போதே, இதை எப்படி பண்ண போறோம் அப்படிங்கற டென்ஷன் எனக்கும் இருந்தது. ஆனா, மற்ற நடிகர்களோட சப்போர்ட்டால நல்லா பண்ண முடிஞ்சது. எங்களோட நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் திரைக்கதை அதுக்கு ஏற்ற மாதிரி அமைஞ்சதும் காமெடி ரசிக்கப்படறதுக்கு முக்கிய காரணம்.
ஆனந்த்ராஜ் மாதிரியான நடிகர்கள், காமெடி கதைகள்ல இப்ப தவிர்க்க முடியாதவங்களா ஆகிட்டாங்க. இனி, உங்களையும் காமெடி கதைகள்ல அதிகம் பார்க்கலாமா?
இந்தப் படம் பார்த்துட்டு நிறைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் போன் பண்ணி வாழ்த்தினாங்க. ரெண்டு, மூனு படங்கள்ல காமெடி கேரக்டர்ல நடிக்க உடனடியா அழைப்பு வந்திருக்கு. நல்ல காமெடி கேரக்டர் வந்தா கண்டிப்பா தொடர்ந்து நடிப்பேன். அதுக்காக மற்ற கேரக்டர்கள்ல நடிக்க மாட்டேன்னு இல்லை. நடிக்கிறதுதானே நடிகனோட வேலை.
சந்தானம் டீமோட நடிச்சது எப்படியிருந்தது?
சந்தானத்தோட முன்னாலயே நட்பு இருந்தது. அவரோட காமெடியும் நடிப்பும் எனக்குரொம்ப பிடிக்கும். அவர் படங்கள்ல ஏதாவதுஒரு மெசேஜ் வச்சிருப்பார். அவர் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்ச பிறகு அவர் கூட நடிக்கணும்னு ஆசை இருந்தது. அது இந்தப்படம் மூலமா அமைஞ்சதுல மகிழ்ச்சி. அவர் எந்த ஈகோவும் இல்லாத எளிமையான மனிதர் .
நீங்க ரஜினி, கமல் மாதிரி சீனியர் நடிகர்களோட நடிச்சிருக்கீங்க. இன்னைக்கு இருக்கிற இளம் இயக்குநர்கள், நடிகர்களோட நடிக்கிறதை எப்படி பார்க்கிறீங்க?
மகிழ்ச்சியா இருக்கு. அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்களை கத்துக்க முடியுது. இன்னைக்கு படம் பண்ற இயக்குநர்கள் எல்லோருமே கடினமா உழைக்கிறாங்க. இதுக்கு முன்னாலயும் அப்படி இருந்தாலும் இப்ப போட்டி அதிகமா இருக்கிறதால, வெற்றிபெறணுங்கற வேகம் ஒவ்வொருத்தர்கிட்டயும் இருக்கு. ‘வடக்குப்பட்டி ராமசாமி' பட டைரக்டர் கார்த்திக் யோகியையே எடுத்துக்கிட்டீங்கன்னா, 65 நாள் ஷூட்டிங் நடந்தது. ஒரு நாள் கூட அவர் சரியா தூங்கி நான் பார்த்ததில்லை. படம் பற்றிய சிந்தனையிலேயே இருந்தார்.
நீங்க, எண்பதுகள்ல அறிமுகமானீங்க. ‘நிழல்கள்’ வெளியாகி 43 வருஷமாச்சு. அப்ப இருந்த சினிமா நடைமுறைகள் இப்ப எல்லாமே மாறிடுச்சே!
ஆமா. நாங்க அப்ப நடிக்கும்போது கேரவன் கலாச்சாரம் கிடையாது. மேக்கப் அறைகள் இருக்கும். பெரும்பாலும் ஸ்டூடியோவுலதான் படப்பிடிப்பு நடக்கும். அவுட்டோர்னா எல்லாரும் ஒரே ஓட்டல்ல தங்கியிருப்போம். ஒரு அம்பாசிடர் கார்ல ஏழு நடிகர்கள் சேர்ந்து ஸ்பாட்டுக்கு போவோம். சிவாஜி சார், ரஜினி சார் போறாங்கன்னா, அவங்க கார்லயே ஏறிக்கிடுவோம் . அப்ப ஒரு குடும்பம் மாதிரி இருந்தோம். இப்ப அப்படியில்லை. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி கேரவன். யாருக்காவது அதைக் கொடுக்கலைன்னா கோபப்படறாங்க. அப்புறம் செல்போன் வந்தபிறகு ஷூட்டிங் ஸ்பாட்ல யாரும் யாரோடயும் பேசறதே இல்லை. தனித் தனி தீவா மாறிட்டாங்க. அப்ப ஒரு படம் நூறு நாள் ஓடினா, பெரிய கொண்டாட்டம் நடக்கும். அந்த மகிழ்ச்சியை வர்ணிக்க முடியாது. இப்ப மூன்றாவது நாளே அதை கொண்டாடறோம்.
நீங்க 500 படங்களுக்கு மேல நடிச்சிருப்பீங்க. நடிப்பைத் தாண்டி, படம் இயக்கும் ஆசை ஏதும் இல்லையா?
ஏன் இல்லை?. ஏற்கெனவே, ஈழத்தமிழர்களுக்காக ‘கிளிநொச்சி’ன்னு ஒரு குறும்படம் இயக்கினேன். இப்ப ஒரு முழு நீள படம் இயக்கணும்னு நினைக்கிறேன். அதுக்கான பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணுமில்லையா. சீக்கிரமே அது நடக்கலாம்.
இத்தனை வருட சினிமா அனுபவம் மூலமா உங்களைத் திரும்பிப் பார்த்தா, எப்படி இருக்கு?
இவ்வளவு வருஷம் சினிமாவுல டிராவல் பண்ணிருக்கேன்னு நினைக்கும்போதே, ரொம்ப வியப்பா இருக்கு. என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கிறேன். ‘நிழல்கள்’ பண்ணும்போது, ‘நடிக்கணும்னு வந்தோம், நடிச்சாச்சு, அதுவும் பாரதிராஜா கையால குட்டு வாங்கியாச்சு, ஹேப்பியா ஊருக்கு திரும்பிடலாம்’னு ஒரு மனசு சொல்லுச்சி. இன்னொரு மனசு, ‘இல்லையில்ல. இதுதான் உன் ஃபீல்டு, தொடர்ந்து நடி’ன்னு சொல்லிட்டே இருந்தது. அந்த இன்னொரு மனசு நினைச்சதுதான் நடந்தது. தொடர்ந்து நடிச்சுட்டு இருக்கேன்.
பின்னணி குரல் கொடுக்கிறதையும் தொடர்ந்து பண்ணிட்டு வர்றீங்க... ‘கோன் பனேகா குரோர்பதி’யில அமிதாப்பச்சனையே உங்க குரல் வழியாதான் பார்த்தோம்...
அதுவும் ஒரு நல்ல புரொபஷன் தான். ரசிச்சு பண்றேன்.பின்னணி குரல் கொடுக்கிறதும் நடிப்பு மாதிரிதானே. இப்ப அதிகமா ‘வாய்ஸ் ஓவர்’கேட்கிறாங்க. 'கே.ஜி.எஃப்' படத்துல ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்ததால, அதே போல படங்கள்ல பேசறதுக்கு கேட்கிறாங்க. அடுத்து வர இருக்கிற சில படங்கள்ல என் குரல் மூலமாகதை சொல்றேன். அதுலயும் பிசியாகத்தான் இருக்கேன்.
இந்த நடிப்பு பயணம் திருப்தியா இருக்குன்னு நினைக்கிறீங்களா?
திருப்தி அடைஞ்சுட்டேன்னு சொல்ல மாட்டேன். ‘வடக்குப்பட்டி’ படத்துல மேஜர் சந்திரகாந்த் கேரக்டர் திருப்தியா இருந்தது. அது முடிஞ்சதும் அடுத்து அடுத்துன்னு மனசு தேடத் தொடங்கிடுச்சு. அந்த தேடல் ஒரு மனிதனுக்கு தேவையானதுன்னு நினைக்கிறேன். அந்தத் தேடல் இருந்தாதான் மனசும் வாழ்க்கையும் ஓடிட்டே இருக்கும்னு நம்பறேன். அதனால இது தீராத நதி. தேடல் அப்படித்தான்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..