விமர்சனம் என்கிற பெயரில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!!

விமர்சனம் என்கிற பெயரில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!!
By: TeamParivu Posted On: August 25, 2022 View: 64

விமர்சனம் என்கிற பெயரில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குந்தகம்  விளைவிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என கோவை விழாவில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 கோவை-பொள்ளாச்சி மெயின் ரோடு  ஈச்சனாரி பகுதியில் திறந்தவெளி மைதானத்தில் அரசுத்துறைகள் சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கோவை மாவட்ட கலெக்டர்  சமீரன் வரவேற்றார். விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று,  பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.589 கோடி மதிப்பில் 1,07,410 பேருக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், ரூ.271 கோடி மதிப்பில் முடிவுற்ற  288 திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய  பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

இதன்பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக அரசு மூன்று தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. அதாவது, முடிவுற்ற பணிகளை துவக்கி வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என இந்த மூன்று திட்டமிடுதல் நிகழ்வுடன் இந்த அரசு விழா நடக்கிறது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஒரே மாவட்டத்தில், ஒரே மேடையில் ரூ.539 கோடி மதிப்பீட்டில் 1,07,410 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய சாதனை. நாம் என்ன சாதனை செய்தோம் என சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நெஞ்சை நிமித்தி பதில் சொல்வேன். இதுதான் அந்த சாதனை. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. சென்னையைப்போல், இங்கும் கட்டிட வரன்முறை பணிகளை மேற்கொள்ள ‘’கோவை மாநகர வளர்ச்சி குழுமம்’’ உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்து, அதிக தொழில்வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது தமிழக அரசு. அனைத்து துறையிலும் முன்னேறி வரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதை, ஒரு ஆங்கில நாளேடு பாராட்டி, எழுதியுள்ளது. நான், டெல்லி சென்றபோது, அங்குள்ள தலைவர்கள், தமிழகம் மீது உயர்ந்த கருத்து பரவலாக வைத்திருப்பதை நான் உணர்ந்தேன். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் உருவாக்கி தந்த அடித்தளத்தின் மூலம் திமுக அரசு இந்த சாதனையை செய்துள்ளது.

கழகம் கடந்துவந்த பாதை கடினமானது. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என இங்குள்ள சிலர், பொத்தாம் பொதுவாக கூறி வருகிறார்கள். நீங்கள் மக்களோடு மக்களாக வந்து, பார்த்தால்தான் கழக அரசின் திட்டப்பணிகள் உங்களுக்கு தெரியவரும். பேட்டி கொடுப்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இந்த அரசின் மூலம் தமிழக மக்கள் அடைந்த நன்மை பற்றிய அறிய வேண்டுமானால், நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்.

நன்றி மறவாத தன்மையுடன் இந்த ஆட்சி நடக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாமல், சிலர் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தந்தை பெரியார் சொன்னதுபோல், தன்மானம் இல்லாத நபர்கள், இனமானம் இல்லாத நபர்களிடம் நாம் பாராட்டு சான்றிதழ் பெற வேண்டியதில்லை. திமுக ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆட்சி, அடக்கப்பட்ட மக்களுக்கான ஆட்சி, பிறப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆட்சி, பழங்குடியின மக்களுக்கான ஆட்சி, சிறுபான்மை மக்களுக்கான சகோதரத்துவ அரசு. எல்லோருக்கும் எல்லாம் என்ற சமநிலையை உருவாக்கும் அரசு இது. ஒரு தாய், தனது எல்லா பிள்ளைகளையும் ஒரே மாதிரியாக பேணுவதுபோல், திமுக அரசு எல்லா மக்களையும் பாதுகாத்து பேணி வருகிறது.

நான் கோவைக்கு புறம்படும்முன் அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பிவிட்டுதான் வந்தேன். அதாவது, உங்கள் தொகுதியில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் முக்கியமான பத்து திட்டங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். இதை நிறைவேற்ற திமுக அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளேன். திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டுமல்ல, 234 தொகுதி எம்எல்ஏக்களுக்கும் இந்த கடிதம் அனுப்பியுள்ளேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னோடி திட்டம் இது. இதை நான் பெருமையாக சொல்கிறேன்.

எதிர்கட்சி எம்எல்ஏக்களும் என்னை பாராட்ட வேண்டும் என்பதற்காக நான் இதை செய்யவில்லை. ஏனெனில், எதையும் எதிர்பார்த்து கடமை ஆற்றுபவன் இந்த ஸ்டாலின் இல்லை. சிலர் காழ்ப்புணர்ச்சியோடு தூற்றுகிறார்கள். நான் அவர்கள் மீது கோபம் கொள்ளவில்லை. அவர்களும் பிழைக்கட்டும் என நான் எண்ணிக்கொள்கிறேன். கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல், ‘’போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்’’ என்ற எண்ணத்துடன் நான் பணியாற்றி வருகிறேன்.

இங்கு வரும்போது மக்கள் வழிநெடுக நின்று வரவேற்பு அளித்தார்கள். நான், அளவற்ற மகிழ்ச்சி அடந்தேன். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் அண்ணா. அவர் சொன்னதுபோலவே இங்குள்ள மக்கள் முகத்தில் சிரிப்பை பார்த்து ெநகிழ்ந்து போனேன். நான் விமர்சனத்தில் வளர்ந்தவன். என்னை விமர்சனம் செய்வதுபற்றி நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. எதிர்ப்பை, அடக்குமுறையை மீறி வளர்ந்தவன் நான். அதே நேரத்தில், எதிர்ப்பு, விமர்சனம் என்ற பெயரில் யாரேனும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தால், அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

சிலர், தங்களது கையாலாகாத தனத்தை மறைப்பதற்கு திமுக ஆட்சி மீது குறைசொல்லி வருகிறார்கள். அப்படி குறைசொல்வதற்கான தகுதியும், யோக்கியதையும் அவர்களுக்கு கிடையாது. தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலத்திலேயே இத்தனை திட்டங்கள் என்றால், ஐந்து வருட காலத்தில் இன்னும் எத்தனை திட்டங்கள் வரும். இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகம் மாறும். அதனை அறிவிக்கும் மாநாடுதான், இந்த மாநாடு. இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றும் பக்கபலமாக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், எம்.பிக்கள் பி.ஆர்.நடராஜன், சண்முகசுந்தரம், எம்எல்ஏ ஈஸ்வரன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:
#விமர்சனம்  # தமிழக அரசு  # முதல்வர் மு.க.ஸ்டாலின்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..