ஆக.29 முதல் சென்னை மாநகராட்சி சார்பில் கூவம், அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்..!!

ஆக.29 முதல் சென்னை மாநகராட்சி சார்பில் கூவம், அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்..!!
By: TeamParivu Posted On: August 26, 2022 View: 86

பெருநகர சென்னை மாநகராட்சி பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு, அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் 10 படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி 29.08.2022  முதல் மேற்கொள்ளப்பட உள்ளன.

 பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வீடுகள்தோறும் சென்று கொசுக்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்கும் வகையில் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் கொசு ஒழிப்பு பணியில் 1,262 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,621 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள 224 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்பேரயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்பேயர்கள், 220 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 66 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை, இராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களுக்குட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு, அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் மண்டலத்திற்கு 2 படகுகள் வீதம் 10 படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி 29.08.2022 முதல் மேற்கொள்ளப்பட உள்ளன.  

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட மழைநீர் வடிகால்களிலும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 233 கி.மீ. நீளமுள்ள நீர்வழிக் கால்வாய்கள் மற்றும் நீர்வழித்தடங்களில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் 17.08.2022 முதல் 23.08.2022 வரை 228 கி.மீ. நீளமுள்ள கால்வாய் மற்றும் நீர்வழித்தடங்களில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்கும் மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளுடன் பொதுமக்களும் தங்களுடைய வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ள டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பொருட்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பாத்திரங்களை வாரமொருமுறை சுத்தம் செய்து உலர வைத்து பின்பு தண்ணீரை நிரப்பி பயன்படுத்தவும், மேலும் வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்காதவாறு அவற்றை அப்புறப்படுத்திவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுத்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேமித்து வைத்துள்ள தண்ணீரை கொசுக்கள் புகாதவண்ணம் மூடிவைத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags:
#கொசு மருந்து  # சென்னை மாநகராட்சி  # கூவம்  # அடையாறு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..