மாஸ்டர் பிளான் மூலம் அனைத்து முதுநிலை திருக்கோயில்களும் மேம்படுத்தப்படும்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்..!!

மாஸ்டர் பிளான் மூலம் அனைத்து முதுநிலை திருக்கோயில்களும் மேம்படுத்தப்படும்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்..!!
By: TeamParivu Posted On: August 29, 2022 View: 77

மாஸ்டர் பிளான் மூலம்  அனைத்து முதுநிலை திருக்கோயில்களும் மேம்படுத்தப்படும் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (29.08.2022) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுடன் திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குபின் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, சென்னை மண்டலம் 1 மற்றும் 2 இணை ஆணையாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 1,216 திருக்கோயில்களில் 108 முதுநிலை திருக்கோயில்கள் உள்ளன. இத்திருக்கோயில்களில் இதுவரை சுமார் 160 கோடி ரூபாய் அளவிற்கு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டிய திருக்கோயில்கள், திருக்கோயிலுக்கு திருமண மண்டப வசதி செய்து தருதல், அர்ச்சகர் மற்றும் பணியாளருக்கான குடியிருப்புகள், ஏற்கனவே சிதலமடைந்து இருக்கின்ற வணிக வளாகங்களை புதுப்பித்தல், திருக்கோயில்களில் இருக்கின்ற பசு மடங்களை புதுப்பிக்கின்ற பணிகள், ஆக்கிரமிப்பில் இருக்கின்ற இடங்களை மீட்டெடுத்தல், பயன்பாட்டில் இல்லாத நிலங்களை வாடகைக்கு விட்டு திருக்கோயிலின் வருவாயை பெருக்குதல் போன்றவை குறித்து கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆய்வினை மேற்கொண்டோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற கலந்தாய்வு கூட்டம் அனைத்து மண்டலங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார்கள். ஆகவே, சென்னையை தொடர்ந்து 38 வருவாய் மாவட்டங்களில் இருக்கின்ற 20 மண்டலங்களிலும் இதேபோன்ற கலந்தாய்வுக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தவுள்ளோம். மேலும், முதுநிலை திருக்கோயில்கள் என்று கண்டறியப்பட்டுள்ள 48 திருக்கோயில்களையும் ஒவ்வொரு திருக்கோயிலாக ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றோம். கடந்த வாரம் அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் ஆய்வினை மேற்கொண்டோம். நாளைய தினம் திருத்தணி அருள்கு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

இந்து சமய அறநிலையத்துறை கடந்த 14 மாதங்களில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் சுமார் 105 கோடி மதிப்பீட்டில் 25 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பணிகள் அனைத்துமே பக்த கோடிகளுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் என்பது மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிப்பட்ட பணிகள் மென்மேலும் தொடர்வதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எல்லா வகையிலும் ஊக்கப்படுத்தி வருவதால், பிற மாநிலங்களில் செயல்படுகின்ற இந்து சமய அறநிலையத்துறையை விட தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற திருக்கோயில்களின் திருக்குளங்கள் சீரமைப்பதற்கு 2021 - 22 ஆம் ஆண்டில் சுமார் 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தோம். இந்த நிதியாண்டில் தலா 3 கோடி ரூபாய் செலவில் மாதவரம் அருள்மிகு கரியவரதராஜ பெருமாள் திருக்கோயில், சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குளங்களை மேம்படுத்துவதற்கு ஆணை வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், பல திருக்குளங்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து திருக்கோயில்களின் திருக்குளங்களில் மழைக் காலங்களில் குளத்திற்கு தண்ணீர் வந்து சேரும் வகையிலும், குளம் நிரம்பி வழிகின்ற போது தண்ணீர் வெளியேறுவதற்கு உண்டான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த பணிகளை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற அரசுத் துறை பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த வாரம், 6 அர்ச்சகர் பள்ளிகள் உட்பட 9 பயிற்சி பள்ளிகளை தொடங்கி வைத்தார். அன்றைய தினமே 186 மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணையை வழங்கினார். மேலும், பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்துமே அனைத்து ஜாதியினரும் அனைத்து திருக்கோயில்களிலும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்குண்டான அடிப்படை பணிகளாகும்.

கடந்த பத்தாண்டுகளாக திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருந்த நிலை மாறி, தற்போது மாவட்ட அறங்காவலர் குழு 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும், பெரிய திருக்கோயில்களான மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் போன்ற திருக்கோயில்களுக்கும், 200 க்கு மேற்பட்ட முதுநிலை அல்லாத திருக்கோயிலில்களுக்கும் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

திருக்கோயில்களின் அறங்காவலர்களாக ஆன்மீகவாதிகளை, நல்ல முறையில் திருக்கோயில்களை பராமரிக்கக் கூடியவர்களை தேர்வு செய்து நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மேம்படுத்துவதற்கு மாஸ்டர் பிளானில் எடுத்து இருக்கிறோம். இத்திருக்கோயிலுக்கு செல்வதற்கு ஏற்கனவே ஒருபக்க படிக்கட்டுகளையே பயன்படுத்தி வந்தனர். பின்புறம் உள்ள படிக்கட்டுளையும் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் சரிசெய்து வருகிறோம். ஓடாத தங்கத் தேரினை ஓட வைத்திருக்கின்றோம், வெள்ளி தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருக்கோயில்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில் இறந்த யானைக்கு மணிமண்டபமும், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளியும் அமைக்க இருக்கின்றோம். பக்தர்கள் தங்கும் விடுதியை புனரமைப்பதற்கும், புதிதாக விடுதிகள் கட்டுவதற்கும் துறை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மலையடிவாரத்தில் பெரிய அளவிலான திருமண மண்டபம் கட்ட இருக்கின்றோம். இக்கோயிலுக்கு செல்ல மாற்றுப்பாதை ஒன்றை வடிவமைப்பதற்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சருடன் பேசி இருக்கின்றோம். இந்தாண்டு ஆடிக் கிருத்திகை விழாவின்போது திருத்தணியில் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். இதற்கு முன்பு இல்லாத அளவில் அதிகமான வருமானமும் உண்டியல் காணிக்கை மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இங்கு நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தி வழங்கப்படும். இதுபோன்ற அடுக்கடுக்கான திட்டங்களை அனைத்து திருக்கோயில்களிலும் மாஸ்டர் பிளான் மூலம் ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் பணம் பெறும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு யார் செய்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன் இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் பொறியார்கள் கலந்து கொண்டனர்.

Tags:
#முதுநிலை திருக்கோயில்  # இந்து சமய  # அறநிலையத்துறை  # அமைச்சர் சேகர்பாபு  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..