காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார 100 நாள் வேலை திட்டம்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார 100 நாள் வேலை திட்டம்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!
By: TeamParivu Posted On: September 02, 2022 View: 71

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்த ேவண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஏரிகள் அதிக அளவில் உள்ளன. பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 16 பெரிய ஏரிகள் உள்பட 912 ஏரிகள் உள்ளன. அதுமட்டுமன்றி கிராமப்புறங்களில் 1,942 ஏரிகளும் உள்ளன. இதனால், விவசாயம் செழிப்பாக நடைபெற்றதால் தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம் எனவும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் அழைக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 16 பெரிய ஏரிகளும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது முழுக் கொள்ளளவை எட்டியது. இருந்”தபோதும் கடந்த ஆட்சி காலங்களில் முறையாக தூர் வாராததால் நீரின் கொள்ளளவு குறைவாகவே இருந்தது. மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 ஒன்றியங்களிலும் உள்ள 633 ஊராட்சிகளிலும் சுமாராக 1,900 கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் மொத்தம் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டமான மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வரத்துக் கால்வாய் சீரமைத்தல், குளம் தூர்வாருதல், நீர்வள பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பு, வறட்சி எதிர்ப்பு திறன் ஏற்படுத்துதல், காடு வளர்ப்பு, மரம் நடுதல், நீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் வசதி அமைத்து வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படுகின்றன. மேலும், கிராம அளவில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை இணைத்து அப்பகுதியில் உள்ள ஏரிகளை தூர்வாரி இருந்தால் ஏரிகளின் கொள்ளளவு அதிகரித்திருக்கும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், கடந்த வடகிழக்குப் பருவமழையின்போது தாமல் ஏரி நிரம்பியதாகக் கூறப்பட்டது. தாமல் ஏரி நிரம்பிய காலங்களில் கடந்த காலங்களில் முப்போகம் சாகுபடி நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையிலும் இரண்டாம் போக சாகுபடியே முழுமையாகச் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். எனவே, 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களைக் கொண்டு ஏரியை தூர்வாரியிருந்தால் ஏரியில் நீரின் கொள்ளளவு அதிகரித்து முப்போகம் சாகுபடி செய்திருக்க முடியும் என்று ஆதங்கப்படுகின்றனர்.

Tags:
# சமூக ஆர்வலர்கள்  # காஞ்சிபுரம்  # நூறுநாள் வேலை திட்டம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..