100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்தது: மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு..!!

100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்தது: மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: September 11, 2022 View: 102

தமிழகத்தில் மின்கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த திருத்தப்பட்ட மின் கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வருவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியத்துக்கான கடனில் ரூ.12 ஆயிரத்து 647 கோடி அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, 31.3.2021 அன்று வரை ரூ.1,13,266 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், அன்றைய தேதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மொத்த கடன் நிலுவைத் தொகை ரூ. 1,59,823 கோடியாக உள்ளது. இதன் விளைவாக, கடன் வாங்கிய நிதிகளுக்கான வட்டியும் 259% அதிகரித்து வருடத்திற்கு ரூ. 16,511 கோடியாக உயர்ந்துள்ளது. 

ஒன்றிய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் உத்தரவுகளின் படி, மின் கட்டணத் திருத்தம் என்பது ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் நிதி பெறுவதற்கான கட்டாய முன் நிபந்தனையாகும். மேலும், ரிசர்வ் வங்கியும், ஒன்றிய அரசின் மத்திய நிதி நிறுவனங்களும், ஆண்டுதோறும் மின் கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன. சிஇஆர்சி/ஏபிடிஇஎல் போன்ற பல தேசிய சட்ட அமைப்புகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் கட்டணம் திருத்தம் செய்யாதது குறித்து அவ்வப்போது கண்டனம் தெரிவித்துள்ளன. எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை 8 வருட இடைவெளிக்குப் பிறகு உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லாத காரணத்தினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கடந்த ஜூலை 13, 2022 அன்று, 2022-23 முதல் 2026-27 வரையிலான நிதியாண்டுகளின் கட்டுப்பாட்டு காலத்திற்கான பல ஆண்டு கட்டண மின்கட்டண மனுக்களையும் மற்றும் அதே காலகட்டத்திற்கான இதர கட்டண மனுக்களையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்பாக சமர்ப்பித்தது.

இவ்வாறாக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள், ஜூலை 19, 2022 அன்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றிற்கான எண்கள் ஒதுக்கப்பட்டன. மேற்கண்ட மனுக்கள் மீதான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கான அறிவிப்பானது 5 வார கால அவகாசத்துடன் கடந்த ஜூலை 19, 2022 அன்று, ஒழுங்குமுறை ஆணையத்தின் இனையதளத்தில் வெளியிடப்பட்டன. 

இதற்கான பொது அறிவிப்புகள் நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 11, 2022 அன்று, மாநில ஆலோசனைக் குழு கூடியது. ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கும் மின்கட்டண முன்மொழிவின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் தேவைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டன.
மேலும், இதுகுறித்து உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோவை, மதுரை மற்றும் சென்னையில் நடைபெற்ற பொது கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஏராளமான வீட்டு மின் நுகர்வோர்களும், கல்வி, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். மேலும், இது குறித்த கருத்துக்கள் வாய்மொழியாகவும், தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் பெறப்பட்டன. 

இவ்வாறாக, அனைத்து தரப்பினர்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் பரிசீலிக்கப்பட்டு, பெருவாரியான கோரிக்கைகளின் அடிப்படையில், இதர கட்டணங்கள் சிலவற்றை திரும்பப் பெறுதல் மற்றும் நிலையான கட்டணங்கள், மின் கடத்தி கட்டணங்கள் மற்றும் குறுக்கு மானிய கூடுதல் கட்டணம் ஆகியவற்றைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய கூடுதல் மனு ஒழுங்குமுறை ஆணையம் முன் சீரிய பரிசீலனைக்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சமர்ப்பித்தது. கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட ஆணையம், 9.9.2022 நாளிட்ட மின் கட்டண ஆணை எண். 7 / 2022, 10.09.2022 மற்றும் 10/2022 ஆகிய இரண்டு ஆணைகளை, 10.9.2022 முதல் அமல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது.

*தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கான முக்கிய அம்சங்கள்:

தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்.222-ன் படி, நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவர். தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் ஆகிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 மட்டுமே உயர்ந்துள்ளது.  

இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 மட்டுமே உயர்ந்துள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 மட்டுமே உயர்ந்துள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 மட்டுமே உயர்ந்துள்ளது.  

தற்பொழுது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மின் நுகர்வு 500 யூனிட்டிலிருந்து, 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும் பொழுது அதற்கான மின் கட்டணத் தொகையானது 58.10 % அதிகரித்து மொத்தம் ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின் நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் தற்போதைய புதிய மின் கட்டணத்தில் முற்றிலுமாக களையப்பட்டுள்ளது.

நூலகங்களுக்கான மின் கட்டணம்: 

தற்பொழுது ஊரகம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இயங்கி வரும் நூலகங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு ரூ.5.75 ஆகவும், நிலைக் கட்டணமாக மாதம் ஒன்றிற்கு ரூ.60 ஆகவும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின் கட்டணத்தினை மானியம் இல்லா வீட்டு விகிதப்பட்டியலில் கணக்கீடு செய்து 30% குறைப்பதற்கு இந்த ஆணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 93% (2.26 இலட்சம்) சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு, குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 50 காசுகள் மட்டுமே உயர்ந்துள்ளது. 53% (19.28 இலட்சம்) வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.50 மட்டுமே உயர்ந்துள்ளது. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல், யூனிட் ஒன்றிற்கு 70 பைசா மட்டுமே உயர்ந்துள்ளது.

நிலையான கட்டணங்கள் குறைப்பு: 

மின்வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், பின்வரும் பிரிவுகளுக்கான நிலையான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அவை முறையே, 0 முதல் 50 கிலோ வாட் வரை மின்பளு கொண்ட மின் நுகர்வோர்களுக்கு, நிலையான கட்டணங்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ வாட்டிற்கு ரூ. 100 லிருந்து ரூ. 75 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 50 முதல் 100 கிலோ வாட் வரை மின்பளு கொண்ட மின் நுகர்வோர்களுக்கு, நிலையான கட்டணங்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.325 லிருந்து ரூ. 150 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 100 முதல் 112 கிலோ வாட் வரை மின்பளு கொண்ட மின் நுகர்வோர்களுக்கு, நிலையான கட்டணங்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ வாட்டிற்கு ரூ. 600 லிருந்து ரூ. 150 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 112 கிலோ வாட் திறனுக்கு மேல் இணைக்கப்பட்ட மின்பளு கொண்ட மின் நுகர்வோர்களுக்கு, நிலையான கட்டணங்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ வாட்டிற்கு ரூ. 600 லிருந்து ரூ. 550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 100% (3.37 லட்சம்) தாழ்வழுத்த தொழிற்சாலை மின் நுகர்வோர்கள் பயன் பெறுவர்

*தாழ்வழுத்த வணிக நிறுவனங்களுக்கான சிறப்பு அம்சங்கள்:

50 முதல் 100 கிலோ வாட் வரை மின்பளு கொண்ட மின் நுகர்வோர்களுக்கு, நிலையான கட்டணங்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ வாட்டிற்கு ரூ. 325 லிருந்து ரூ. 300 ஆக குறைக்கப்பட்டுள்ளது.100 முதல் 112 கிலோ வாட் வரை மின்பளு கொண்ட மின் நுகர்வோர்களுக்கு, நிலையான கட்டணங்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ வாட்டிற்கு ரூ. 700 லிருந்து ரூ.300 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 112 கிலோ வாட்டுக்கு மேல் இணைக்கப்பட்ட சுமை கொண்ட மின் நுகர்வோர்களுக்கு, நிலையான கட்டணங்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ வாட்டிற்கு ரூ. 700 லிருந்து ரூ. 550 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 47% (17.31 லட்சம்) தாழ்வழுத்த தொழிற்சாலை மின் நுகர்வோர்கள் பயன் பெறுவர்.

* உயரழுத்த மின் நுகர்வோர்களுக்கான முக்கிய அம்சங்கள்:

உயரழுத்த மின் நுகர்வோர்களுக்கான நிலையான கட்டணங்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு கேவிஏக்கு ரூ. 600 லிருந்து ரூ. 550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 100% (7366) உயர் மின்னழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 100% (1200) அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் பயனடையும். உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டிற்கு 40 பைசா மட்டுமே அதிகரிப்பு மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு எரிசக்தி கட்டணத்தில் ஒரு யூனிட்டிற்கு 65 பைசா மட்டுமே மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

* உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கான முக்கிய அம்சங்கள்:

உயரழுத்த வணிக மின் நுகர்வோர்களுக்கான நிலையான கட்டணங்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு கேவிஏவிற்கு ரூ. 700 லிருந்து ரூ. 550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 100% (2100) உயரழுத்த வணிக மின் நுகர்வோர்கள் பயன் பெறுவர்.

*உயரழுத்த திறந்த நுழைவு உரிமை மின் நுகர்வோர்களுக்கான முக்கிய அம்சங்கள்:

யூனிட் ஒன்றிற்கு ரூ. 1.52 ஆக இருந்த மின் கடத்தி கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 96 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது. குறுக்கு மானிய கூடுதல் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ. 2.33 லிருந்து ரூ. 1.79 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3000 உயரழுத்த திறந்த நுழைவு உரிமை மின் நுகர்வோர்கள் பயன் பெறுவர்.

Tags:
#இலவச மின்சாரம்  # 100 யூனிட்  # இலவச மின்சாரம்  # மின்சார ஆணையம்  # 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..