அதிமுக அலுவலக வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை: பதில் மனுவில் எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு..!!

அதிமுக அலுவலக வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை: பதில் மனுவில் எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு..!!
By: TeamParivu Posted On: September 12, 2022 View: 84

அதிமுக அலுவலக சாவி எடப்பாடியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

இந்த வழக்கில், எடப்பாடி, ‘கட்சிப் பணத்தை கையாடல் செய்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக அலுவலகத்தை உரிமை கோர எந்த அதிகாரமும் இல்லை’ என்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஓபிஎஸ் பணம் கையாடல் செய்ததாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக பொதுக்குழுவை கூட்டியது. அந்த நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் பலர் காயம் அடைந்தனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. மேலும், அதிமுக தலைமை அலுவலக கதவை உடைத்து ஓபிஎஸ் தரப்பினர் உள்ளே நுழைந்தனர்.

அதன் பிறகு அங்கே வந்த ஓபிஎஸ், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அலுவலகமும் சூறையாடப்பட்டது. அங்கிருந்த பொருட்களும் கொள்ளை போனது. இதையடுத்து ராயப்பேட்டை காவல் நிலைய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், ஆர்டிஓ உத்தரவின்படி தாசில்தார் அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த மாதம் ஜூலை 20ம் தேதி நடந்தது. அப்போது நீதிபதி அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அதிமுக அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 4ம் தேதி இது தொடர்பான மனுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 18ம் தேதி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது. தீர்ப்புக்கு தடை விதிக்கவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து விட்டது.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் நேற்று எடப்பாடி தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை. எனவே, அவர் அதிமுகவின் அதிகார உரிமையை கோர முடியாது. ஓபிஎஸ்சை பொறுத்தவரை பணம் கையாடல் செய்திருக்கிறார். கையாடல் நடத்தியுள்ள ஒருவரிடம் அலுவலக சாவியை எப்படி ஒப்படைக்க முடியும். எனவே, ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் 3 வார இடைவெளிக்கு பிறகு அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
கடந்த முறை நடைபெற்ற வழக்கு வந்தபோது உரிய விசாரணை நடத்தாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிமுக அலுவலக சாவி தொடர்பாக விரிவான விசாரணை இன்று நடத்தப்பட உள்ளது. 

இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறார்கள். வருவாய் துறை அதிகாரிகளும் பதில் அளிக்க உள்ளனர். அதிமுக அலுவலக சாவி தொடர்பாக ஜூலை 20ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஒரு மாதம் வரையில் தொண்டர்கள் கட்சி அலுவலகத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை நீக்கப்பட்டு அதிமுக அலுவலகத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இது அதிமுக தொண்டர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை வருகிற 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:
#அதிமுக அலுவலக வழக்கு   # எடப்பாடி  # விசாரணை  # பதில் மனு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..