இந்தியாவில் முதன் முறையாக பாக்வளைகுடா நீரணையில் கடல்பசு பாதுகாப்பகமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது..!!

இந்தியாவில் முதன் முறையாக பாக்வளைகுடா நீரணையில் கடல்பசு பாதுகாப்பகமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது..!!
By: TeamParivu Posted On: September 21, 2022 View: 80

இந்தியாவில் முதன் முறையாக பாக். நீரணையில் 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கடல்பசு பாதுகாப்பகமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. 

தமிழகத்தில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும், அதன் கடல் வாழ்விடங்களிலும் பாதுகாக்கும் பொருட்டு மன்னர் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் கடல்பசு பாதுகாப்பகம் அமைகிறது.

தமிழகத்தில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு (Dugong) இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார்வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் “கடற்பசு பாதுகாப்பகம்“ அமைக்கப்படும் என்று தமிழக அரசால் 2021 செப்டம்பர் 3-ம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை, செயல்படுத்தும் வகையில், 448 சதுர கி.மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) அறிவித்து, அரசாணை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, நாள் 21.09.2022-ல் அரசு ஆணையை பிறப்பித்துள்ளது.   

உலகின் மிகப்பெரிய தாவரவகை கடல் பாலூட்டிகளான, கடற்பசுக்கள் (Dugong), முதன்மையாக கடற்புற்களை உண்டு வளர்ந்து வருகின்றன. கடற்பசு இனங்களை பாதுகாப்பதனால், கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடற்புற்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்தவும் உதவுகிறது.  

கடல்புல் படுகைகள் வணிகரீதியாக மதிப்புமிக்க பல மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகவும், உணவளிக்கும் இடமாகவும் உள்ளது. பாக்விரிகுடாவை ஒட்டிய கரையோர மக்கள் கடற்பசுக்களை பாதுகாப்பதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு, பலமுறை மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பசுக்களை இம்மீனவர்கள் வெற்றிகரமாக கடலில் விடுவித்துள்ளனர். இதனைப் பாராட்டி தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

வன விலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் அட்டவணை 1-ன் கீழ் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இருப்பினும், அதன் வாழ்விட இழப்பு காரணமாக கடற்பசு இனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. தற்போது சுமார் 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்கரையில் (பாக்விரிகுடா) காணப்படுகின்றன. எனவே, கடற்பசுக்கள் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய உடனடித் தேவை தற்போது எழுந்துள்ளது.

இந்த நோக்கங்களை நிறைவேற்ற, தமிழக அரசு, கடலோர சமூகத்தினருடன் குறிப்பாக உள்ளூர் மீனவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, பாக்விரிகுடாவில் “கடற்பசு பாதுகாப்பகம்” அமைத்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ அங்கு வாழும் மக்களுக்கு விதிக்கப்படப் போவதில்லை.  

பாக்வளைகுடாவில், தமிழகம் அறிவிக்கை செய்துள்ள இந்த கடற்பசு பாதுகாப்பகம், இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பகம் எனும் பெருமைக்குரியதாகும். இதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள வன உயிரின பாதுகாவலர்கள் அனைவரும் பெருமை கொள்வர். நமது நாட்டில் கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும்.

Tags:
#தமிழ்நாடு அரசு  # இந்தியா  # கடல்பசு பாதுகாப்பகம்  # பாக்வளைகுடா நீரணை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..