நூறு சார்பதிவாளர் அலுவலங்களில் உடனடி டோக்கன் வசதி; போலி பத்திரத்தை ரத்து செய்யும் புதிய நடைமுறையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

நூறு சார்பதிவாளர் அலுவலங்களில் உடனடி டோக்கன் வசதி; போலி பத்திரத்தை ரத்து செய்யும் புதிய நடைமுறையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
By: TeamParivu Posted On: September 28, 2022 View: 53

போலி பத்திரத்தை ரத்து செய்யும் புதிய நடைமுறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக, மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை இரத்து செய்து அதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, அதிக ஆவணங்கள் பதிவாகும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் வசதி மற்றும் திருமணச் சான்றிதழ்களை இணையவழி திருத்தம் செய்யும் வசதியை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பதிவுத்துறை சார்பில் போலி ஆவணத்தை இரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டதை தொடங்கி வைக்கும் விதமாக, போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும், அதிக ஆவணங்கள் பதிவாகும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் வசதி மற்றும் திருமணங்களுக்கான சான்றுகளில் திருத்தம் தேவைப்படின் இணையவழியாகவே விண்ணப்பித்து திருத்திய சான்றினைப் பெறும் வசதி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

போலியான ஆவணப் பதிவுகளை இரத்து செய்தல்

மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை இரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை இரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து வந்தது. எனவே, பொதுமக்களின் நலனைக் கருதி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பதிவுச்சட்டம், 1908ல் தமிழ்நாட்டிற்கு பொருந்தும் வகையில் இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே இரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டப்பேரவையில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர் ஆகஸ்ட் 6ம் தேதியன்று ஒப்புதல் அளித்துள்ளார்.  

திருத்தப்பட்ட இந்தப் பதிவுச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22-B ஆனது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், பிரிவு 77-A ஆனது நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து மாவட்டப் பதிவாளர்களிடம் புகார் மனு பெறப்பட்டால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து பதிவு செய்யப்பட்ட ஆவணம் போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணத்தினை இரத்து செய்து ஆணையிட மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆணையின்மீது பதிவுத்துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்.

மேலும், முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்மந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கிடவும் சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நில அபகரிப்பு மோசடியாளர்களால் பாதிக்கப்பட்ட, சொத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு அச்சொத்தினை மீட்டெடுத்துக் கொடுக்கும் வகையில், மோசடி ஆவணப்பதிவுகளை மாவட்டப் பதிவாளர் இரத்து செய்திட பதிவுச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், போலி ஆவணங்கள் பதிவினை அறவே ஒழிக்க சட்டத்தின் துணையோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின் கீழ் போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு அவர்களின் சொத்துகள் நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை இரத்து செய்து அதற்கான ஆணைகளை இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

உடனடி (தட்கல்) டோக்கன் வசதி

பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை நல்ல நாட்கள் எனக் கருதப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். இந்நாட்களில் அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களில் டோக்கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அன்றே ஆவணம் பதியப்பட வேண்டும் என விரும்புபவர்கள் என்ற இணையவழியாக ரூ.5,000/- செலுத்தி உடனடி (தட்கல்) டோக்கன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவசர ஆவணப்பதிவு தேவைப்படும் நிகழ்வுகளிலும் இவ்வசதியைப் பயன்படுத்தி உடன் டோக்கன் பெறலாம். இந்த உடனடி (தட்கல்) டோக்கன் வசதி, அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.  

திருமணச் சான்றிதழ்களை இணையவழி திருத்தம் செய்யும் வசதி

இந்து திருமணச் சட்டம், 1955, தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009, சிறப்புத் திருமணச் சட்டம், 1954, இந்திய கிறித்துவ திருமணச் சட்டம், 1874 ஆகிய திருமணப் பதிவுச் சட்டங்களின் கீழ் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. திருமண பதிவிற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கொடுக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் திருமண சான்று வழங்கப்படுகிறது. ஆனால் பின்னாளில் கடவுச்சீட்டு (Passport) மற்றும் வெளிநாடு செல்ல விசா கோரி விண்ணப்பிக்கும்போது சில சமயங்களில் பெயர்களில் ஏற்படும் பிழைகள், முகவரி போன்றவற்றில் திருத்தம் தேவைப்படுகிறது. அவ்வாறு திருத்தம் செய்திட என்ற இணையவழி விண்ணப்பித்து திருத்தப்பட்ட திருமண பதிவுச் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் விரும்பிய நேரத்தில் எவ்விடத்திலும் இணையவழி விண்ணப்பம் செய்யலாம். உரிய திருத்தம் செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ் பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் பயனாளிக்கு இணையவழி அனுப்பப்படும். பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் கூடிய அச்சான்றிதழை விண்ணப்பதாரர் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் திருமதி.பா.ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., மற்றும் பதிவுத்துறை தலைவர் திரு.ம.ப.சிவனருள், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:
# சார்பதிவாளர்  # தட்கல்  # டோக்கன் வசதி  # முதல்வர் மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..