நரபலி தந்து வெட்டி எடுக்கப்பட்ட 10 கிலோ மனித மாமிசத்தை குக்கரில் வேகவைத்து சாப்பிட்ட கும்பல்: விசாரணையில் தகவல்...!

நரபலி தந்து வெட்டி எடுக்கப்பட்ட 10 கிலோ மனித மாமிசத்தை குக்கரில் வேகவைத்து சாப்பிட்ட கும்பல்: விசாரணையில் தகவல்...!
By: TeamParivu Posted On: October 17, 2022 View: 70

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பத்மா, ரோஸ்லியின் உடல் பாகங்களை வெட்டிய பிறகு 10 கிலோ மாமிசத்தை குக்கரில் வேகவைத்து சாப்பிட்டதாக கைது செய்யப்பட்ட முகம்மது ஷாபி உள்பட 3 பேரும் போலீசிடம் ஒப்புக்கொண்டு உள்ளனர். இதற்கிடையே 2வது நாளாக இன்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா மற்றும் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் தவிர பகவல் சிங்கின் வீட்டில் மேலும் சிலர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. அதைத் தொடர்ந்து போலீசார் நேற்று பகவல் சிங்கின் வீட்டில் துப்பறியும் நாய்களின் உதவியுடன் பரிசோதனை நடத்தினர். முன்னதாக ஷாபி பகவல் சிங், லைலா ஆகியோரை நேற்று போலீசார் கொச்சியில் இருந்து நரபலி நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். சுமார் 8 மணி நேரத்திற்கு மேல் இங்கு பரிசோதனையும், 3 பேரிடமும் விசாரணையும் நடந்தது. சந்தேகத்திற்கிடமான இடங்களில் குழி தோண்டி பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு இடத்தில் மட்டும் ஒரு எலும்புத் துண்டு கிடைத்தது.

ஆனால் அது மனித எலும்புத் துண்டாக இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. இதற்கிடையே நரபலி நடந்தது எப்படி? என்பதை அறிந்து கொள்வதற்காக 3 பேரையும் வைத்து போலீசார் டம்மி பரிசோதனை நடத்தினர். ஒரு பொம்மையை வைத்து பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, 3 பேரும் உடல்கள் எப்படி வெட்டி துண்டு துண்டாக்கப்பட்டது என்பதை நடித்துக் காண்பித்தனர்.

நரபலி கொடுக்கப்பட்ட அறையில் பல்வேறு பகுதிகளில் ரத்தக்கறைகள் காணப்பட்டன. அங்கிருந்த பிரிட்ஜிலும் ரத்தக்கறைகள் காணப்பட்டன. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. பத்மா, ரோஸ்லியின் உடல்களை வெட்டிய பிறகு முக்கிய உடல் பாகங்களை அவர்கள் பிரிட்ஜுக்குள் வைத்திருந்தனர்.

அதன் பிறகு அதில் இருந்து 10 கிலோ மாமிசத்தை எடுத்து குக்கரில் வேகவைத்து 3 பேரும் சாப்பிட்டு உள்ளனர். ஆனால், தான் மாமிசத்தை சாப்பிடவில்லை என்று விசாரணையின் போது லைலா கூறினார். அதை போலீசார் நம்பவில்லை. பின் பிரிட்ஜில் மீதமிருந்த உடல் பாகங்களை குழியில் போட்டு புதைத்து உள்ளனர். மனித மாமிசத்தை வேகவைத்து சாப்பிட்ட குக்கர், உடல்களை வெட்ட பயன்படுத்திய கத்திகள், பெண்களின் வாயை ஒட்டுவதற்காக பயன்படுத்திய பிளாஸ்டர் உள்பட பொருட்களை போலீசார் அங்கிருந்து கைப்பற்றினர்.

இன்றும் போலீசார் 3 பேரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்களை வெட்டப் பயன்படுத்திய கத்தி, கயிறு உள்பட பொருட்களை வாங்கிய கடைகளுக்கும் 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்படுகிறது.

தப்பிய 2 பெண்கள்: 

இந்த நரபலி கும்பலிடம் இருந்து 2 பெண்கள் மயிரிழையில் உயிர்தப்பியது குறித்து போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. பத்மாவுக்கும், ரோஸ்லிக்கும் முன்னதாக பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 2 பெண்களை ஷாபி குறி வைத்திருந்தார். அதில் ஒருவர் பத்தனம்திட்டா ஆனப்பாறை பகுதியை சேர்ந்த ஒரு லாட்டரி விற்கும் பெண் ஆவார். அந்தப் பெண்ணை அணுகிய ஷாபி, ஒரு நாள் அவரிடமிருந்து மொத்தமாக லாட்டரியை விலைக்கு வாங்கி நட்பை ஏற்படுத்தி உள்ளார்.

அதன் பிறகு தனக்குத் தெரிந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பகவல் சிங்கின் வீட்டுக்கு அந்தப் பெண்ணை ஷாபி அழைத்துச் சென்றுள்ளார். ஒரு நாள் அங்கு வேலை பார்த்ததற்கு பகவல் சிங் ரூ.1000 சம்பளம் கொடுத்து உள்ளார். மறுநாள் வேலைக்கு வந்த போது அங்குள்ள ஒரு அறைக்கு பகவல் சிங் அந்தப் பெண்ணை அழைத்து உள்ளார். அவர் அறைக்குள் நுழைந்தவுடன், சில பரிசோதனை நடத்த வேண்டும் என்று கூறி அங்குள்ள கட்டிலில் படுக்குமாறு கூறி உள்ளார்.

அந்தப் பெண் கட்டிலில் படுத்தவுடன் ஷாபி, லைலா ஆகியோர் சேர்ந்து அவரை கட்டிப் போட முயன்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அங்கிருந்து அலறியடித்தபடி தப்பி வெளியே ஓடிவிட்டார். இதே போல பந்தளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஷாபி வீட்டு வேலைக்காக என்று கூறி பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் அவருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அந்தப் பெண் வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார். இந்த 2 பெண்களும் நரபலியிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர். இதே போல மேலும் பல பெண்களை நரபலிக்காக இந்தக் கும்பல் அணுகி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

Tags:
#நரபலி  # மனித மாமிசம்  # பகவல் சிங் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..