தமிழகத்தில் புதிதாக 7 திருக்கோயில்களில் ரோப் கார் வசதி விரைவில் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

தமிழகத்தில் புதிதாக 7 திருக்கோயில்களில் ரோப் கார் வசதி விரைவில் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்..!
By: TeamParivu Posted On: October 19, 2022 View: 67

தமிழகத்தில் புதிதாக 7 திருக்கோயில்களில் ரோப் கார் வசதி விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் இன்று (19.10.2022) வினாக்கள் - விடைகள் நேரத்தின்போது இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு அவர்கள், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, அவர்கள் எழுப்பிய திருநீர்மலை அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள் திருக்கோயிலுக்கு கம்பி வட ஊர்தி அமைத்தல், அர்ச்சர் குடியிருப்பு, நிழற்கூரை அமைத்தல் , ஜமீன் பல்லாவரம் சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்,

அஸ்தினாபுரம், அருள்மிகு பிரசன்ன ஆஞ்சநேயர் திருக்கோயில் திருப்பணிகள் மற்றும் அறநிலையத்துறையின் மூலம் திருநீர்மலைப் பகுதியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா என்ற வினாக்களுக்கும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள் எழுப்பிய காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகள், திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்படுத்தப்படுமா என்ற வினாக்களுக்கும் விரிவாக பதிலளித்தார்கள். இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு திருநீர்மலை அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 61-வது திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. 

180 படிகளைக் கொண்ட இத்திருக்கோயிலின் படிகளில் ஏறி வயது முதிர்ந்தோர்,
உடல் நலம் குன்றியோர் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்வதற்கு கடினமாக இருக்கின்ற சூழ்நிலையைக் கருதி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் இத்திருக்கோயிலுக்கு ரோப்கார் அமைப்பதற்கு வலியுறுத்தி, அறிவிப்பை வெளியிடச் செய்தார். அதன் தொடர்ச்சியாக சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, ரூபாய் 8 கோடியே 17 இலட்சம் செலவில் கருத்துரு தயாரிக்கப்பட்டு. அதற்குண்டான அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகின்ற வகையில் வெகு விரைவில் டெண்டர் கோரப்பட்டு, ரோப் கார் அமைக்கின்ற பணி அடுத்த ஆண்டு பிப்ரவரி/மார்ச் மாதத்தில் துவக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் 5 திருக்கோயில்களில் கம்பிவட ஊர்தி அமைக்க உத்தரவிட்டிருந்தார்கள். திருத்தணியில் கம்பிவட ஊர்தி அமைப்பதற்குண்டான சாத்தியக்கூறு இல்லை என்பதால் மாற்றுப்பாதை அமைக்கின்ற பணியை நம்முடைய வனத் துறையுடன் சேர்ந்து அதற்குண்டான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டிருக்கின்றது. அதேபோல் திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் ரோப் கார் அமைக்கின்ற பணிக்கு டெண்டர் கோரப்பட வேண்டிய நிலையில் தற்போது இருக்கின்றது. அதேபோல், பழனியில் புதிதாக ரோப் கார் அமைப்பதற்குண்டான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அதற்குண்டான சாத்தியக்கூறுகள் இருக்கின்றது என்ற ஆய்வு அறிக்கை பெறப்பட்டிருக்கின்றது.

அறிவித்த பணிகள் 5 என்றாலும், அறிவிக்கப்படாத பணிகளான பழனிக்கும், இடும்பன் மலைக்கும் ஒரு புதிய ரோப் காரையும், கோவை அனுவாவி ஆஞ்சநேய திருக்கோயிலுக்கு ஒரு புதிய ரோப் கார் அமைக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அறிவித்தது 5 என்றால், செயல்படுத்தப்போவது 7. சொன்னதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம் என்பதற்கு இந்த ரோப் கார் அமைக்கின்ற பணியே ஓர் எடுத்துக்காட்டு. இவை அனைத்தும் அடுத்தாண்டு இறுதிக்குள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் பணிகளை துவக்குகின்ற வகையில் பணிகள் வேகமாக, துரிதமாக நடைபெற்று வருகிறது என்பதை நம்முடைய மாண்புமிகு உறுப்பினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அர்ச்சகர் குடியிருப்பு மற்றும் மேற்கூரை அமைப்பது குறித்து மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டார். திருநீர்மலை பகுதியில் மேலும் 3 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குளியல் அறை மற்றும் திருக்குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்தல் போன்ற பணிகளும் ரூ.40 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் பேசுகின்றபோது, கோ‘ சாலை என்று குறிப்பிட்டார். அது பெயர் மாற்றப்பட்டு விட்டது. பசு மட காப்பகம் என்று தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். உறுப்பினர் குறிப்பிட்ட ஜமீன் பல்லாவரம் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்கு தற்போது திருப்பணிக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

மேலும் அஸ்தினாபுரம், அருள்மிகு பிரசன்ன ஆஞ்சநேயர் திருக்கோயில் 1984 ஆம் ஆண்டு திருப்பணிக்குப் பிறகு, மீண்டும் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அந்தக் கோயிலும் கூடிய விரைவில் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, வல்லுநர் குழு ஆய்வு அறிக்கையோடு உடனடியாக அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டுமென்று கேட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நல்லெண்ணத்தோடு 2021-2022 ஆம் ஆண்டு 10 கல்லூரிகளை தொடங்க அறிவிப்பு செய்தார். அதில் 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டுவிட்டன. மீதம் இருக்கின்ற 6 கல்லூரிகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக நல்மனம் கொண்டோர்கள் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள். 

இருந்தாலும், அதில் சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். 4 கல்லூரிகள் தொடங்குவதற்கு தடை இல்லையென்று நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, தற்போது அந்த 4 கல்லூரிகளும் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருகிறது. மீதம் இருக்கின்ற 6 கல்லூரிகளுக்கு நீண்ட, நெடிய சட்டப் போராட்டம் நடத்தி, நிச்சயம் அறிவிக்கப்பட்ட அந்த 10 கல்லூரிகளைக் கொண்டு வருவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முயற்சி செய்வார்கள். அது முடிந்த பிறகு, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகளைப் பொறுத்தளவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு வந்து, அங்கு நேரடியாகச் சென்று, இரண்டு முறை கள ஆய்வு செய்தோம். அந்தக் கோபுரம் மிகவும் பழமையானது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில். அதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மனதிலே வைத்து, ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களுக்கு எந்த ஆட்சியிலும் வழங்காத அளவிற்கு ரூ.100 கோடியை அரசின் சார்பாக இந்து சமய அறநிலையத் துறைக்கு முதன்முதலாக வழங்கிய பெருமை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையே சாரும். அதில், ரூ.17 கோடியை அந்தத் திருக்கோயிலினுடைய திருப்பணிக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறோம். வல்லுநர் குழுவினரிடமும் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது; டெண்டரும் கோரப்பட்டுவிட்டது.

இன்னும் ஒரு மாதகாலத்தில் அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நில மீட்பு என்பது காஞ்சிபுரத்தை பொறுத்தவரையில், 901 கோடி ரூபாய் அளவிற்கு அந்தப் பகுதியில் மாத்திரம் நிலத்தை மீட்டிருக்கிறோம். கிட்டத்தட்ட, 91 ஏக்கர் நிலப்பரப்பை இதுவரையில் மீட்டிருக்கின்றோம். சட்டப்போராட்டத்தில் உள்ள அந்த 6 கல்லூரிகளில் அவர் கோரிய கல்லூரியும் ஒன்று. நிச்சயமாக, நீண்ட, நெடும் பயணமாக இருந்தாலும் அதில் பயணித்து, சட்டத்தின் கதவுகளை தட்டித் திறந்து வெற்றி பெற்று, நிச்சயம் அந்தக் கல்லூரி தொடங்குவதற்குண்டான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம்.

Tags:
#ரோப் கார்  # திருக்கோயில்கள்  # அமைச்சர் சேகர்பாபு  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..