அதிமுக ஆட்சிக் காலத்தில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை: கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றச்சாட்டு..!

அதிமுக ஆட்சிக் காலத்தில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை: கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றச்சாட்டு..!
By: TeamParivu Posted On: October 23, 2022 View: 81

எடப்படி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் துணை வேந்தர் பதவி ரூ.50 கோடி வரை விற்கப்பட்டதாக அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டு சுமத்தி உள்ளார். 

தமிழகத்தில் 2017-2021ம் ஆண்டு வரை முதல்வராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடந்தது. இந்த காலக்கட்டத்தில் அரசு டெண்டர் கொடுப்பது, உயர் பதவிகளில் ஆட்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் லஞ்சம் தலைவிரித்தாடியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக எடப்பாடி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதா மரணம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை ஆணைய அறிக்கை ஆகியவற்றை பார்த்து தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்தில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், ‘தமிழகத்தில் நான் பணியாற்றியது ரொம்ப மோசமான காலம்’ என்றும், ‘அந்த ஆட்சியில் துணை வேந்தர்கள் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை விற்கப்பட்டது’ என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். தமிழகத்தின் 14வது ஆளுநராக 2017ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி முதல் 2021ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி வரை இருந்தவர் பன்வாரிலால் புரோகித். பதவியேற்ற சில மாதங்களில் அரசின் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

இதற்கு அப்போதைய எதிர்க்கட்சியான திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, ஆய்வு பணிகளை நிறுத்திய புரோகித், சில காலங்களில் பஞ்சாப் மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சத்பீர் சிங் என்பவர் துணை வேந்தராக அம்மாநில ஆம் ஆத்மி அரசு நியமித்தது. அவரை நீக்கக் கோரி முதலமைச்சர் பகவந்த் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரித்திருந்தது. இந்நிலையில், சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: 

நான் 4 ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஆளுநராக பணியாற்றினேன். அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40-50 கோடிக்கு விற்கப்பட்டு வந்தது. தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோது சட்டப்படி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு 27 துணைவேந்தர்களை நியமித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. ஒரு ஆளுநராக தமிழ்நாட்டில் கல்வி அமைப்பை சுத்தப்படுத்தினேன். அதற்காக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட என்னை பாராட்டி உள்ளார். அவரிடம் இருந்து பஞ்சாப் அரசு பாடம் கற்க வேண்டும்.

பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவதாக பஞ்சாப் அரசு குற்றம்சாட்டுகிறது. பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கும் அதிகாரம் ஒரு வேந்தராக ஆளுநருக்கே உள்ளது. சட்டப்படி, பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளேன். அதை யாராலும் தடுக்க முடியாது. என்ன நடந்தாலும் என் கடமையை செய்வேன்.இவ்வாறு அவர் பேசினார்.

துணை வேந்தர் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை விற்கப்பட்டதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து இருப்பது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

* 2018ல் சொன்னார்...

கடந்த 2018ம் ஆண்டு நடந்த உயர் கல்வி மேம்பாட்டு கருத்தரங்கில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ‘தமிழ்நாடு அரசு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது’ என்று தெரிவித்திருந்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த அன்றைய உயர் கல்வித்துறை அமைச்சரான கே.பி. அன்பழகன், ‘துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கோ உயர்கல்வித் துறைக்கோ ஒரு சம்பந்தமும் இல்லை. தேடல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் துணைவேந்தரை தேர்வு செய்து நியமிப்பது ஆளுநர்தான்’ என்று தெரிவித்திருந்தார்.

Tags:
#அதிமுக  # துணைவேந்தர் பதவி  # பன்வாரிலால் புரோகித் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..